கடவுளாய் மாறும் காலம்

=================
வீட்டினிலே அடைந்திருக்க வேண்டுமென்று சொல்லும்
-வேதமிது ஊரடங்கு வேலையெனக் கொள்ளு
கூட்டினிலே கூடுகின்றக் குருவிகளைப் போன்று
-குழந்தையெனும் குஞ்சுகளைக் கொஞ்சியின்ப மள்ளு
நாட்டினிலே பரவுகின்ற நோய்க்கிருமி கொரோனா
-நம்வீட்டை யணுகாமல் நலம்காத்து நில்லு
ஆட்டிவிடடுந் தொட்டிலுக்கு ஆளின்றி ஏங்கும்
-அவஸ்த்தைக்கு முற்றிற்று அப்பனாகி வெல்லு.
**
பெண்டாட்டிக் கொத்தாசைப் பெரும்பாலும் செய்யா
-பேர்க்கெல்லாம் ஊரடங்கு பேரின்பம் காலம்
உண்டானக் காலத்து உயிர்வைத்து நோக்கும்
-ஒருபேறாய் அவள்ஓய்வை உயர்வாக்கும் சீலம்
கொண்டேநீ உன்னன்பை கொட்டியுந்தன் வீட்டில்
-கொண்டாட வெனவந்த கொரோனாவின் மூலம்
கண்னென்றும் பொன்னென்றும் கதைபேசு போதும்
-கடைதெருவுக் குனையழையாள் காசுனக்கு லாபம்
**
பிள்ளைகளின் புத்தகத்தில் பூத்திருக்கும் பூக்கள்
-பறித்தெடுத்து நெஞ்சமெனும் பேழைக்குள் பூட்டு
அள்ளஅள்ளக் குறையாத அட்சயப்பாத் திரம்போல்
-அன்பிருக்கும் உன்மனதின் ஆழமதைக் காட்டு
வள்ளமென நீயிருக்கும் வாழ்க்கையெனு மாற்றை
-வனப்புடனே கடப்பதிலே விடுமுறையை ஒட்டு
எள்ளளவும் பீதியற்று இருப்பதற்கு நோயை
-எதிர்கொள்ளும் தைரியத்தை எடுத்தவர்க்கு ஊட்டு.
**
பெற்றவரின் உடல்நலனை பேணுதற்கும் வாய்ப்பைப்
-பெற்றுதந்த ஊரடங்கு பெருவரந்தான் பாரு
உற்றவரின் சுகசெய்தி ஒவ்வொன்றாய் கேட்கும்
-ஓய்வுனக்கு தேனூறும் உல்லாச ஆறு
மற்றவரின் வறுமையினை மதிப்பிட்டுக் கொண்டு
-மனசார உதவுதற்கு மானதொரு பேறு
கற்றவனாய் ஒதுங்கிநின்றக் கசடனைத்தும் மாற்றும்
-காலமென ஊரடங்கில் கடவுளென மாறு
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Apr-20, 10:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 101

மேலே