பள்ளியில் பயிலும் மாணவனே
பள்ளியில் பயிலும் மாணவனே! – தினம்
துள்ளித் திரிந்திடும் தூதுவனே
நாளைய தேசத்தின் நாயகனே – அதி
காலையின் கதிரென வந்தவனே!
பொழுதை வீணாய் கழிக்காதே! – பல
பொன்னான வாய்ப்பை இழக்காதே!
எல்லாம் சரியாய் உனக்கிருந்தும் – நீ
ஏமாந்து பின்னாளில் வருந்தாதே!
மூளையின் பலமே முதல்பலமாம் – அது
முன்னேற்றப் பாதையின் அடித்தளமாம்
நாளையும் பொழுதையும் உனதாக்கி – நல்ல
நம்பிக்கை கொள்வது பெரும்பலமாம்
நெற்றியின் வியர்வை பலபேர்க்கு – இங்கு
வெற்றியை தந்தது தெரியாதா?
நித்திரை மறந்து உழைத்தோரே – நம்
நிலத்தை ஆண்டனர் புரியாதா?
நெருப்பு மலையின் சிகரம்நீ – உன்
நெஞ்சில் உயர்ந்த எண்ணம்வை
வைரத்து உறுதியின் விருட்சம்நீ – புது
உரத்தினை உந்தன் மனதில்வை.
மின்விசை போன்று செயல்பட்டு – நீ
அன்னாந்து பார்க்கும் நிலைஎட்டு
கண்ணிமை உறக்கம் தினம்விட்டு – இந்த
மண்ணகம் தழைக்க படிகட்டு.
பாவலர். சொ. பாஸ்கரன்