164 பரத்தையைக் காண்பது காமத்தீக்குச் சுள்ளியாம் – பரத்தமை 8
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மின்னெரி மூட்டிடு விறகு போற்சுவைக்
கன்னலைப் பழித்தசொல் லாரைக் காணலுந்
துன்னலும் உன்னலுஞ் சுடுவெங் காமத்தீ
தன்னையே மூட்டிடுஞ் சமிதை போலுமே. 8
– பரத்தமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சுவை மிகுந்த கரும்பினைப் பழித்தது போன்ற இனிய சொல் பேசும் பொதுமகளிரைப் பார்த்தலும் நெருங்கலும் நினைத்தலும் ஒளி மிகுந்து எரியும் தீயை மூட்டும் விறகு போன்று, உயிரைச் சுடும் கொடிய காமத்தீயை மூட்டும் சுள்ளியாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மின் - ஒளி. கன்னல் - கரும்பு. துன்னல் - நெருங்கல். உன்னல் - நினைத்தல். சமிதை - சுள்ளி.