பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
இது 2015ம் ஆண்டு பொங்கலுக்கு முதல் நாள் எழுதியது. முழுக்க முழுக்க இது என் சொந்தக்கற்பனையே. எவர்மனத்தையும் புண்படுத்தவோ, எவரையும் கேலி செய்யவோ இது எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காகவே, நகைச்சுவைக்காக மட்டும். நகைச்சுவை விரும்பிகளுக்காக எழுதப்பட்டது.
**********
பொங்கல் அன்று. விடியும் நேரம். என் கற்பனைக் குதிரை கட்டவிழ்ந்து பறந்தது.
தை பிறக்குது, தை பிறக்குது, பொங்கல் வருது, பொங்கல் வருது என்று அவரவர்கள் கொட்டாய் விட்டு முடியும் நேரத்தில், அதாவது விடியும் நேரத்தில், குடுகுடுப்பைக்காரர் வாக்குச் சொல்ல அதைக்கேட்டு அரைத் தூக்கத்தில் இருந்த சில இளம் கன்னியர் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையில் மறுபடியும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தங்கள் கனவுகளைத் தொடர்ந்தனர்.
ஆனால் அதே நேரத்தில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக் கேட்ட பெண்களைப் பெற்ற சில அப்பன்மார்கள் தை பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, நம் விழி பிதுங்குமே என்று கவலைப்பட ஒரு வழியாகத் தை மாதம் பிறந்தது.
மார்கழி விடியற்காலைக் குளிர் இன்னும் பரிபூரணமாக மறையாததால் இளசுகள் எல்லாம் போர்வையிலிருந்து வெளியே வரத் தயங்கியபடி இருக்க, அம்மாக்கள் வாயிலில் சற்று நடுங்கிய கையுடன் தண்ணீர் தெளித்துச் சுண்ணாம்பு மற்றும் சில வண்ணப்பொடிகள் கொண்டு கோலம் போட ஆரம்பித்தனர். தான் உண்ணப் போகும் பொங்கலை நினைத்து நாவில் உமிழ் நீர் சுரக்க தை பிறந்த மகிழ்ச்சியில் அந்த வீட்டுக்குப் பெரிய பாட்டன்மார்கள் அன்றைய பொங்கலில் நிறைய திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் மறக்காமல் போடச் சொல்லி விட்டு, அவரவர் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஈஸி சேரிலோ அமர்ந்தபடி பேப்பரைப் படித்தபடி ஒரு சிலரும், பிறர் படிக்க அதைக்கேட்டு ரசித்தபடி ஒரு சிலரும் வழக்கம் போல அரசியல்வாதிகளைத் திட்டியபடியும், அரசாங்கத்தை
மோசமாக விமரிசித்தபடியும் அன்றைய அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக அலசிக் கொண்டு இருந்தனர்.
தூக்கம் தெளிந்து எழுந்த குழந்தைகள் பொங்கலுக்காக வாங்கி வைத்திருந்த முழுக் கரும்பைப் பார்த்தபடி அதை எப்போது தின்னலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர். இந்தப் பல்லில்லாத் தாத்தாக்களும் பாட்டிகளும் எப்படி இதைச் சாப்பிடுவார்கள் என்று அவர்களுக்கு ஒரு நெருடல், ஒரு கவலை. அதே நேரத்தில் பொங்கலுக்கு மாத்திரம் ஏன் இப்படி ஒரு விழா என்று புரியாமல் அவர்களுக்குள் ஒரு குழப்பம். பொங்கலின் பெருமையையும் அதன் மகிமையையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு சில பெரியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த அளவில் குழந்தைகளை அழைத்து அந்த நேரம் பொங்கல் ரெடி ஆகாததால் அவர்கள் கண்களில் பொங்கலைக் காட்டாமல் பொங்கல் மகிமையை விளக்கினர்.
அன்று டிவியில் பொங்கல் பண்டிகையின் பழமையையும் பெருமையையும் விளக்கும் விதத்தில் சிலப்பதிகார காலத்தில் கண்ணகி செய்த பொங்கல் சிறந்ததா இல்லை மாதவி செய்த பொங்கல் சிறந்ததா என்று நடக்க இருக்கும் சிறப்புப் பட்டி மன்ற நிகழ்ச்சி எப்போதும் போலில்லாமல் ஒரு சினிமா அளவிற்கு இரண்டரை மணி நேரம் நடக்க விருப்பதால், குழந்தைகளை உஷார் படுத்தி " பொங்கல் பற்றி பட்டி மன்றத்தில் பல அறிஞர்கள் நின்று பேசுவார்கள். எல்லோரும் உட்கார்ந்து கேளுங்கள், நீங்கள் பொங்கலைப் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று கட்டளை இட்டபடி அவர்களுக்கு முன் இவர்கள் நாற்காலியிலோ தரையிலோ அமர்ந்தபடி டிவியை உற்றுப் பார்க்க ஆரம்பித்தனர்.
இந்தப் பட்டி மன்றம் பார்ப்பதில் பொங்கல் சாப்பிடுவதைக் காட்டிலும் அதிக ஆர்வம் காட்டியபடி தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும், அந்த ஆர்வக் கோளாறின் காரணமாக பொங்கல் பண்டிகையை மறந்து அவரவர்கள் சொந்தக்காசு போட்டு வாங்கின டிவி முன்போ இல்லை இனாமாகவோ அல்லது விலை இல்லாப் பரிசாகவோ கிடைத்த டிவி முன்போ அமர்ந்து வாய்க்குள் ஈயா அல்லது கொசுவா எது போகிறது என்று தெரியாமல் கவனித்தபடி பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது.
பட்டி மன்றமும் ஆரம்பமாயிற்று. நடுவர் நட்ட நடு சிம்மாசனத்தில் அமர, பேச்சாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து அதில் கண்ணகி அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறமும், மாதவி அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்புறமும் அமைய, நடுநிலையாளர் வணக்கத்துடனும் வழக்கம் போல ஒரு சிரிப்புடனும் தொண்டையைக் கனைக்க, அரங்கமே அதிரும்படி அவர் ஏதோ ஒரு பெரிய ஹாஸ்யத்தைச் சொல்லிவிட்டாரோ என்று சந்தேகப்படும் வகையில் கைதட்டி வாய்விட்டுச் சிரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
நடுவருடைய வழக்கமான பேச்சாளரைப்பற்றிய அறிமுகங்களுக்குப் பிறகு நடுவர் கண்ணகி அணியைச் சார்ந்த அறிஞரைப் பேச அழைத்தார். அவ்வணியைச் சார்ந்த தமிழ்ப்புலவர் ஒருவர் மேடை ஏறி தன் பையன் தீபாவளிபோல் மத்தாப்பும் பட்டாசும் இல்லாத பண்டிகை ஒரு பண்டிகையா என்று கேட்டதாகவும், பொங்கல் பிடிக்காத பக்கத்து வீட்டைப் பையன் ஏன் இட்டிலிக்கோ, வடைக்கோ, மசாலா தோசைக்கோ இல்லை, மசாலா நூடில்ஸுக்கோ இப்படி ஒரு விழா கொண்டாடுவதில்லை என்று ஏக்கத்துடன் கேட்டதனால் அவனுடைய தந்தை அவனைப் பொங்கலுக்கு வாங்கின கரும்பினாலே அடித்ததையும் நெக்குருகச் சொல்லி அது ஒரு அறுவடைத்திருவிழா என்று தான் விளக்கிக் கூறியதாகவம், அதைக் கேட்டு , மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறன் அதிகம் படைத்த தன் பையன் ஒரு வடைகூட இல்லாமல் கொண்டாடப்படும் இவ்விழா எப்படி அறுவடைத்திருவிழா என்று பெயர் பெற்றது என்று கேட்டதாகவும், பரீட்சை ஹாலில் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் முழிக்கும் மாணவர்கள் போல தான் முழிக்க நேர்ந்ததையும் கடைசியில் எவ்வாறு அந்தப் பையனை சமாதானப் படுத்தினார் என்பதையும் முகவுரையாகக் கூறி கண்ணகி செய்த பொங்கலின் பெருமையை விளக்கினார்.
இன்னொருவர் எவ்வாறு இளங்கோ அடிகள் கண்ணகியின் பொங்கற் சிறப்பையும் பூம்புகாரில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவைவிட இது எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதையும் அவரது கட்டைக் குரலில் இளங்கோ அடிகளே ஏன் இப்படிப் பாடினோம் என்று மனம் நொந்து போகும் அளவிற்கு பாடி முடித்து மேலும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, கலிங்கத்துப்பரணி என்று தனக்குத்தெரிந்த நூல்களைப் பற்றி பலரும் இவற்றை எல்லாம் படித்து இருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் கிடைத்த முப்பது நிமிடங்களில் விளாசித்தள்ளி கண்ணகி செய்த பொங்கலின் சிறப்பை எடுத்துக்கூறினார்.
அடுத்தவர் பொங்கலன்று பொங்கலைச்சாப்பிடலாம். தீபாவளி அன்று தீபாவளியைச்சாப்பிட முடியுமா என்று ஆரம்பிக்க இந்தப் பட்டிமன்றக் கட்டிடமே இடிந்து விழுமளவிற்குக் கை, கால்தட்டலுடன் கட்டடம் கிடுகிடுத்தது. எப்படி எல்லாப் பண்டிகைகளை விடவும் பொங்கல் மிகச்சிறந்த பண்டிகை என்பதை மற்ற பண்டிகைகளோடு ஒப்பிட்டுப்பேசி, கடைசியில் தான் கண்ணகி அணியைச் சேர்ந்தவர் என்று நினைவு வந்தவராக " எனவே, கண்ணகிப் பொங்கல் என்ற சொல் எப்படிக் காணும் பொங்கல் என்று மருவிற்று என்பதற்கு மற்றவர்கள் சொல்ல மறந்து போன தமிழ் இலக்கியங்களிலிருந்து பாயின்ட் பாயின்டாக ஒரு சில பாயின்டுகளை அள்ளி வீசினார். அப்போது எழுந்த கை தட்டலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிலரும் திடீரென்று கண் திறந்து பார்த்துத் தாங்கள் பட்டிமன்றத்தில் இருப்பதை உணர்ந்து சரிந்து கொண்டு இருந்த நிலையிலிருந்து எழுந்து சரியாக சீட்டில் உட்கார்ந்தனர். பட்டி மன்றத்தில் பேசியவர்களைவிட இந்தக் காட்சியை டிவி நேயர்கள் அதிகமாக ரசித்ததாகக் கேள்வி.
கண்ணகி அணிக்கு எதிர் அணியினரோ, எதிரணிக்குச் சற்றும் சளைக்காமல் கண்ணகியின் பொங்கல் பழமை கலந்தது, மாதவியின் பொங்கல் புதுமை நிறைந்தது என்று கண்ணகி அணியினர் சொன்ன அதே நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட, நடுவர் திணறிப்போனார்.
அடுத்து வந்தவர் ஏன் பொங்கலுக்கு மாத்திரம் தனித் திருவிழா, மற்றத் தின்பண்டங்களுக்கு ஏன் இதுவரையிலும் திருவிழா எடுப்பதில்லை, அதற்கு எவ்வாறு கண்ணகிதான் மூலகாரணம் என்பதை யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு செய்யுள் மூலம் விளக்கினார். முன்னாளில் செங்கல் திருவிழா எவ்வாறு தமிழனின் கட்டிடக்கலை அறிவை வெளி உலகிற்குக் காட்ட கொண்டாடப் பட்டது என்பதையும் அது எவ்வாறு நாளாவட்டத்தில் அல்லது சதுரத்தில் பொங்கல் விழாவாக மாறியது என்பதையும் அவையோரின் அட்டகாச ஆர்ப்பரிப்பின் மத்தியில் எடுத்து உரைத்தார். இப்படி ஆண்மணிகளே இவ்வளவு ஆரவாரத்துடன் பொங்கலைப்பற்றிப் பேசும் போது ஆரவாரத்திற்கே மூலகாரணமான பெண்மணிகள் சும்மா விட்டு விடுவார்களா?
கண்ணகி சார்பில் பேசிய பெண், கண்ணகி பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும் அவர் செய்த பொங்கலை மிஞ்சக்கூடிய மணமும் சுவையும் இன்றைக்கு நாம் செய்யும் குலோப்ஜானாக இருந்தாலும் சரி, ரஸகுல்லாவாக இருந்தாலும் சரி எந்தப் பதார்தத்திலும்கிடையாது என்பதைக் கேட்போர் நாவிலிருந்து உமிழ்நீர் சொட்டி அவர்களது உள்ளங்களையும் உடலையும் நனைத்தது. அந்தப் பெண்மணி அதற்கும் ஒரு படியோ, லிட்டரோ மேலே போய் கண்ணகி தயாரித்த பொங்கலின் ரெசிபியை ஒவ்வொன்றாக அதற்கான இலக்கிய இலக்கண நயங்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கினார், இதைக் கேட்ட நடுவர் இந்தப் பொங்கலை அங்கேயே அப்போதே சாப்பிடவேண்டும் என்ற தன்னால் கட்டுப் படுத்த முடியாத தன் அவாவை "வாவ்" என்று கூறி அடக்கிக் கொண்டதை பார்வையாளர்கள் ரசித்தனர்.
அதை எதிர்த்து மாதவியின் பொங்கலைச் சிறப்பித்துப் பேசிய பெண்மணி, மாதவியின் பொங்கல் ரெசிபியையும், அவர் பொங்கல் செய்த விதத்தையும் வீடியோப் படம் போடாக் குறையாக விளக்கி, அது எவ்வாறு மணம், குணம், ரசம் இவற்றில் சிறந்தது என்பதையும், அதில் அறுசுவை மட்டுமின்றி இன்று நம்மால் கண்டுகொள்ள முடியாத ஏழெட்டு சுவைகள் இருப்பதையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியங்களிலிருந்தும் அடுக்கடுக்காக மேற்கோள்களைக்காட்டினார்.
மற்றும் இன்னொருவர் எவ்வாறு வாசுகி இந்தப் பொங்கலைச் சமைத்துப்போட, அதை உண்ட பிறகுதான் திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுதும் ஒரு வேகம் வந்தது என்பதை சபையோர் கண்ணகி முற்பட்டவரா இல்லை வள்ளுவர் முற்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் குழம்ப மெய் சிலிர்க்கும் வகையில் விளக்கினார்.
மற்றொரு பெண்மணி " இப்பண்டிகையைப் பொங்கல் என்ற தமிழ்ப் பெயரால் அழைக்கிறோம். இப்பொங்கல் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் கிடையாது என்று கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி இருந்திருந்தால் இன்று இந்தச்சொல் மறைந்து அந்த ஆங்கிலச் சொல்தான் அனைவர் நாவிலும் நடமாடிக் கொண்டு இருக்கும். நல்ல வேளையாகப் பொங்கல் தப்பியது என்றார். மேலும் தொடர்ந்து " பொங்கல் என்றால் அது வெண் பொங்கலாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்களோ அதை சர்க்கரைப் பொங்கல் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு வெல்லத்தைத்தான் பயன்படுத்துகிறீர்கள். வெல்லப் பொங்கல் என்று சொல்வதில்லையே" என்ற வினாவை என்னிடம் ஓர் விதண்டாவாதி எழுப்பினார். அதற்கு விடை இங்கே கூறுகிறேன். இலக்கியங்களில் பார்த்த போது முதலில் தோன்றியது சர்க்கரைப் பொங்கல்தான் என்றும், வெல்லத்தைப் பயன் படுத்தினாலும் அந்தக்காலத்தில் வெல்லம் கருப்பட்டி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்பட்டதற்கு சர்க்கரைப்பாடியாரின் சர்க்கரைப்பத்து என்ற கவிதைகள் ஆதாரம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். பிறகு தொடர்ந்து கண்ணகிதான் அதற்கு சர்க்கரைப் பொங்கல் என்று பெயர் வைத்தாரென்றும் அதற்குப் போட்டியாக அப்போது வெண் பொங்கல் இல்லாததால் அது வெறும் பொங்கலென்றே அழைக்கப் படலாயிற்று என்பதை அவர் அடித்துச் சொன்னதில் அவர் முன் இருந்த மைக் அங்கிருந்து எகிறி மண்டபத்தில் முதல்வரிசையில் அமர்ந்திருந்தவரின் மூக்கைப் பதம் பார்த்தது. இதனால் அங்கு ஐந்து நிமிடம் ஏற்பட்ட தடையில் பேச்சாளர் சாரி சொல்ல, ஒருவர் அந்த மைக்கை மறுபடியும் மேடை ஏற்றி மூக்கில் அடிபட்டவரை தன் கையிலிருந்த பழைய கர்சீஃபினால் துடைக்க அந்த கர்சீஃபின் வாசனையோ அல்லது நாற்றமோ தாங்காமல் மூக்கில் அடி பட்டவர் முனகியபடி வெளியேற பட்டி மன்றம் தொடர்ந்தது.
இவ்வளவு "பழமையான" தமிழருக்கே உரித்தான கண்ணகி-மாதவி காலத்தில் இருந்து கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று ஒவ்வொருவரும் மாறி மாறிக் கூற, டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது படிக்கும் ஒரு பையன் "ஏம்ப்பா, பொங்கல் இவ்வளவு பழமை வாய்ந்தது என்றால் அது கெட்டுப் போகாமல் இருக்குமா, அதைச் சாப்பிட்டால் வயற்றுக் கோளாறு ஏதும் வந்துவிடாதா?" என்ற தன்தீராத சந்தேகத்தை அருகிலிருந்த தன் தந்தையிடம் கேட்கிறான். அப்போது அவன் தந்தைக்கு வந்த கோபத்தை விவரிக்கவொண்ணாது. இருந்தாலும் நல்ல நாளும் அதுவுமாக அவனை இப்போது அடித்தால் அவன் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்து விட்டால் பட்டி மன்றத்தைத் தொடர்ந்து காண முடியாது என்ற கரிசனத்தில் அவனைப் பார்த்து "நடுவர் இப்போது தீர்ப்பு அளிக்கும் நேரம் இது. என்னைத்தொந்திரவு செய்யாதே" என்று கூறி அவன் வாயைப் பொங்கல் நுழையாத அளவிற்குப் பொத்தினார்.
நடுவரும் தன்தரப்பில் எப்படி இரு அணிகளும் பொங்கலை கலக்கு கலக்கு என்று கலக்கினார்கள் என்றும் கண்ணகியின் பொங்கலிலேயே திராட்சை, முந்திரிப் பருப்பு இவை அதிகமாக இருந்ததாகவும், மாதவியின் பொங்கலில் கொஞ்சம் செங்கற் பொடியும், காய்ந்த சில திராட்சைகளும் இருந்ததனால் கண்ணகியின் பொங்கல் கிராம விவசாயிகளின் வீட்டுப் பொங்கல் என்றும் மாதவியின் பொங்கல் வெறும் ஹோட்டல் பொங்கலே என்றும் அதனால் ஹோட்டல் பொங்கலை விட வீட்டுப் பொங்கலே சிறந்தது என்றும் தீர்ப்பளிக்க பட்டி மன்றம் வந்திருந்த அனைவரும் அவரவர்கள் வீட்டிற்குப் போகும் வரை கை தட்டிக் கொண்டே போக பட்டி மன்றம் இனிதே முடிந்தது.
அதைப் பார்த்து முடித்த வீட்டுப் பெரியவர்கள் "சரி பொங்கல் சாப்பிட உட்காரலாமா" என்று அந்த வீட்டு அம்மணிகளைக் கேட்க "அடடா, நாங்களும் பட்டி மன்றம் பார்த்துக் கொண்டு இருந்தபடியால் இன்னும் பொங்கலுக்காக அடுப்பையே மூட்டவில்லை, உலையும் வைக்கவில்லை" என்பதை சோகத்துடன் சொல்லி, வேகமாக காஸ் அடுப்பை ஏற்றி குக்கர்ரை மஞ்சள் இஞ்சிக் கொத்து கொண்ட கொடியினால் சுற்றி அதற்கு மஞ்சள் பூசி ஸ்டிக்கர் குங்குமம் இட்டு "என்னங்க, எதுக்கும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே பொங்கல் ஆயிடும், கொஞ்சம் நேரமாயிட்டுது பொறுத்துக்குங்க" என்று சொன்னார்கள். இதைக்கேட்ட வீட்டு ஆண்கள் பொறுமை இழந்துப் பொங்கிப் பசி தாங்கமுடியாமல் பொருமினார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெரியவர்களோ பொரும முடியாத அளவு பசியில் இருந்த படியால், கோபத்தில் பொங்கியவர்களைப் பார்த்து " பொங்கியது போதும். பொறுத்து இருங்கள். நாம் அனைவரும் பட்டி மன்றத்தில் மூழ்கி இருந்து விட்டு இன்று பெண்களை மாத்திரம்குறை சொல்வது அந்தக் கண்ணகிக்கும், ஏன் அந்த மாதவிக்கும் கூட அடுக்காது" என்று கூறி அனைவரையும் சமாதானப் படுத்த பொங்கல் நன்னாள் இனிதே நிறைவேறியது.
ஆமாம், நீங்க என்ன சார், பானை, விறகு அடுப்பு இல்லாம கிராமத்துலே எப்படி சார் குக்கரையும்,காஸ் அடுப்பையைம் பயன்படுத்தறதாச் சொல்றீங்க என்று சில அன்பர்கள் கோபத்துடன் என்னைச்சாட "ஐயா, நீங்க எல்லாம் எந்தக் காலத்துலே இருக்கீங்க? அரசாங்கமே குக்கர், காஸ் அடுப்பு எல்லாத்தையும் எல்லாக் கிராமத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கிய பிறகு கிராம மக்கள் பலரும் தங்களிடம் இருந்த பானை, விறகு அடுப்பு எல்லாத்தையும் எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டாங்க. அதை எல்லாம் இப்ப ஜனங்க மறந்தே போயிட்டாங்க. இன்னும் நீங்க விறகு அடுப்பு, பானை இதுக்குள்ளேயே இருக்கீங்க. அதுலே இருந்து வெளியே வாங்க" என்று சொன்ன என்னைத் திட்டியபடியே அடுத்த வருடம் போடவிருக்கும் ரோட்டிற்காக சென்ற வருடத்திலிருந்தே மக்களுக்குப் பயன்படுமே என்ற நல்ல எண்ணத்தில் ரோட்டோரம் குவித்து வைக்கப் பட்டு இருந்த ஜல்லி ( இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று நினைக்கிறேன்) மற்றும் கருங்கற்களை என்வீட்டின் மேல் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டபடி எறிந்து மகிழ்ந்தனர்..
***********
என்வீட்டு வாசலில் கேட்ட பொங்கலோ, பொங்கல் கோஷத்தைக்கேட்டு நான் என் அதீத கற்பனையிலிருந்து இந்த உலகிற்கு மீண்டு வந்தேன். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களுடன் குரல் கொடுத்தேன்.