வெற்றிடம்
வெற்றிடம் என்று
எதுவுமில்லை.
**
ஏதோ ஒன்றின்
வெற்றிடத்தை
காலத்தின் கரங்கள்
ஏதோ ஒன்றால்
நிரப்பி விடுகின்றன.
**
பெரு ஆலமரம் சாய்ந்த
வெற்றிடத்தை
சிறு கோரைப் புற்கள்
நிரப்பி வைக்கின்ற மண்ணுக்குள்
பல ஆலம் வித்துக்கள்
மறைந்தே இருக்கின்றன .
**
வற்றிய நதியொன்றின்
வெற்றிடத்தைக்
காலம் கடந்தேனும்
ஒரு அடைமழை
நிரப்பி விடுகின்றது
**
விளைச்சல்களை உண்டு
விவசாயத்தை வெற்றிடமாக்கும்
நம்மையும் ஒருநாள் உண்டு
தன் வெற்றிடத்தை
மீட்டெடுக்கிறது மண்.
**
அரித்து அரித்து
காணாமல் போகும்
சில கடற்கரைகளின் வெற்றிடம்
எங்கோ குவிந்து குவிந்து
நிலப்பரப்பாகி விடுகிறது
**
ஓய்வாகும்
வயோதிபமொன்றின்
வெற்றிடத்தை
ஓய்வற்ற வாலிபமொன்றால்
நிரப்பி வைக்கிறோம்
**
ஒரு மரணத்தால் விளையும்
வெற்றிடமானது
பல சனனங்களால்
நிரப்பபடுவதென்பது இயற்கை
**
எதிர்பார்ப்புகள் கொண்டு
நிரப்பப்பட்ட உயிர்வாழ்தல்
பூரணத்துவம் அடைவதற்குள்
வெற்றிடங்களுடன் காத்திருக்கும்
மயானங்களை பூரணத்துவம்
செய்வதற்காக படைக்கப்பட்டிருக்கும்
நாம் நம் செயலால்
ஓரிடத்தில் வெற்றிடமாகி
இன்னொரு இடத்தில் அதை
நிரப்பவும் செய்கிறோம்.
**
ஒரு சிறிய வெற்றிடம் நிரப்ப
ஆயிரக்கணக்கில்
வரிசையில் நிற்கும்
பட்டதாரிகளான நம்மைகொண்டு
எதுவும் படிக்காமல்
மயானத்தை நிரப்பிவிடும் காலம்
ஒரு தொழில் நிறுவனம்
**
நேற்று வந்துபோன
வானவில்லின் இடம்
நிரப்படாமல் இருக்கின்றது
என்பதற்காக
சூரியன் தன் உதயத்தை
நிறுத்தி வைப்பதில்லை
**
கோடை காலங்களில்
நதிகள் வற்றிவிடுகின்றன
என்பதற்காக
கடல் தன் அலைகளை
நிறுத்திக் கொள்வதில்லை
**
காட்டு மூங்கில்களில்
துளைகள் இல்லை என்பதற்காக
காற்று தன் பணியை
நிறுத்துவதில்லை
**
வெற்றிடங்களை நிரப்புவதில்
வெற்றிகொள்ளும் இயற்கையாவும்
வெற்றிடம் விழுந்துவிட்டதென்று
விழுந்து விழுந்து அழுவதில்லை
**
தேய்பிறை உருவாக்கும்
வெற்றிடத்தை
வளர்பிறை நிரப்பிப்
பூரணையாக்கும் நிலவிடம்
கண்டு கொள்ளலாம்
வெற்றிடமென்று ஒன்றுமில்லை என்று
**
*