304 சினத்தால் வெற்றி பகைவனுக்கே சேரும் - சினம் 10

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)

பெற்றதன் நாட்டை யாளான்
--பிறர்நாட்டை யாள்வான் கொல்லோ
உற்றதன் சீற்ற மாற்றி
..உரத்தொடு தனைத்தான் வெல்லக்
கற்றறி யானொன் னாராங்
..கனலிக்கோர் வையே யாவன்
கொற்றமவ் வொல்லார் கொள்வார்
..கோபம்போல் தாப முண்டோ. 10

- சினம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தன் பெற்ற நாட்டை ஆளத் தெரியாதவன் பிறர் நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும்? தான் கொண்ட சினத்தை அடக்கி, திண்ணமாகத் தன்னையே வெல்லக் கற்றுக் கொள்ளாதவன் பகைவனுக்கு தீ முன்பட்ட வைக்கோல் போல ஆவான். அதனால் அப்பகைவனே வெற்றி கொள்வான். கோபம் போல் பெருந்தீ வேறு உண்டா?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

கனலி - நெருப்பு. வை - வைக்கோல்.
கொற்றம் - வெற்றி. தாபம் - தீ.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே