547 ஒன்பான் துளையுடலில் உயிர்நிறுத்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 5
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
காற்றினைப் பலது வாரக்
..கடத்தினு ளடைத்தல் போல
ஏற்றிடு நவது வாரம்
..எண்ணிலா மயிர்த்து வாரம்
தோற்றிய சடக்க டத்துள்
..துன்னுயிர்க் காற்ற டைத்து
நாற்றிசை மிசைப்பல் லாண்டு
..நடத்துவோன் திடத்தி னானே. 5
– தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பல துளையுள்ள குடத்தினுள் காற்றினையடைத்துத் தங்க வைப்பது போன்று, ஒன்பது பெருந்துளையும் அளவில்லாத மயிர்த்துளையும் பொருந்திய அறிவில் உடலகத்துச் சார்ந்ததன் தன்மையாகக் கலந்திருக்கும் இயல்பு வாய்ந்த உயிர்க்காற்றை யடைத்துப் பல்லாண்டுகளாக நாற்புலத்தும் நலம்பெற நடத்தி வைத்தருள்வோன் முழுவலி படைத்த முதல்வனாவன்.
பல துவாரம் - பல துளை. கடம் - குடம். சடம் - அறிவில்லது. நாற்றிசை - நாற்புலம்; கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு.