திறமை
தேன் கட்டும் கூடு ஒரு விசித்திரம்.
தேனைத் துளி துளியாய்ச் சேர்த்து,
சிந்தாமல் சிதறாமல் சேமிக்கும்,
சிறந்த வித்தையது கற்றதெங்கே?
சிட்டுக்குருவி கூடுகட்டி அந்த
கூட்டின் வாசல் கீழே வைக்கும்.
தெளிவான திட்டத்தில் அது கட்டிய
கூடு.
மெலிதான குஞ்சுகளின் பாதுகாப்பு
வீடு.
கற்பனையாய்க் கவி புனைய,
சிறகுள்ள குருவிக்கு தெரியாது.
கவியெனக்கு காற்று பிளந்து,
புவிவானை நீந்தத் தெரியாது.
உனக்கரிது, எனக்கது எளிது.
எனக்கெளிது, உனக்கது அரிது.
மெய் பார்த்து மருந்துரைப்பான்
ஒருவன்.
பொய் கோர்த்து கவியுரைப்பான்
ஒருவன்.
நாடு காத்து எல்லை நிற்பான்
ஒருவன்.
காடுழுது கதிரறுப்பான்
ஒருவன்.
சிறியவனுக்கு நான்
பெரியவனில்லை.
பெரியவனுக்கு நான்
சிறியவனில்லை.
பூமியில் திறமை பெற்றே,
நாமிங்கே உதிக்கிறோம்.
அரும் திறமை புரியும் போது,
அரிய வாழ்க்கை முடிக்கிறோம்.
உரிய சாவி பெற்றே நாம்
உலகத்தில் குதிக்கிறோம்.
சாவிக்குள்ள பெட்டி தேடி
சலித்து நாமும் மாய்கிறோம்.
ஞானம் அற்று நடந்து
போகிறோம்.
காலம் கடந்து கணக்குப்
பார்க்கிறோம்.
சரியான பெட்டி திறந்தவன்,
சாதித்து மேட்டில் ஏறுவான்.
தப்பான பெட்டி திறந்தவன்
தடுக்கி கீழே விழுகிறான்.
ச.தீபன்
94435 51706