புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 28---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௮

271. அதிகாரம் என்பது ஓர் ஆடை
அதை எப்போதும் அணிந்தே இருக்காதே
கழற்றி வைத்து விட்டு உலகைப் பார்
பலரின் கடினங்கள் புரியும்.

272. ஒவ்வொரு விளம்பரமும் ஒரு உண்மையை மறைத்து வைத்தே
ஆசையைத் தூண்டி விடுகிறது.

273. ஒருவன் பசிக்காக அலையும் போது
மாற்றொருவன் ருசிக்காக அலைகின்றான்.

274. கொள்கை இல்லாத கட்சிக்கு வெற்றி என்பது வெறும் கனவு
அதைக் கொண்டு சேர்க்காத கட்சிக்குத் தோல்வி என்பது எழுதி வைத்த முடிவு.

275. தரமான ஒவ்வொரு அரசு துறை இயந்திரமும்
தகுதி இல்லாத மனிதர்களால் இயக்கப்படும் போது விபத்துகளே நடக்கும்.

276. அரசு வேலையை இலஞ்சத்தின் மூலம் விற்ற தொழிலாளியும் பெற்ற பயனாளியும் தண்டனை பெறும் போது
முதலாளியோ? அடுத்த விற்பனைக்குக் காலத்தைத் தள்ளிப் போடுகிறான்.

277. விளம்பரம் இன்றி விலை போகாமல் இருக்கிறது
உழவன் வீட்டுச் சத்தான உணவுப் பொருள்கள்.

278. மீசையை முறுக்க ஆசைப்பட்ட இளமை காலம் முதிர்ந்த பிறகு
மீசையில்லாப் பருவத்தையே தேடிப் பயணம் செய்கிறது.

279. தனக்கு ஏற்படும் அவமானங்கள் காயத்தை ஏற்படுத்துகிறது
தான் நேசிப்பவருக்கு ஏற்படும் அவமானங்கள் காயத்தின் மீது தீயை வைக்கிறது.

280. காலம் சில காயங்களை ஆற வைத்தப் போதும்
தழும்புகள் மறந்ததை நினைவூட்டுகின்றன.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (18-Jul-20, 10:19 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 84

மேலே