அறத்திற்கு ஆதாரம்🙏

            அறத்திற்கு ஆதாரம்🙏

எல்லா மதமும் மானுடத்துக்கு சொல்லும் கருத்து "அன்பு"
திருக்குரான் சொல்வதும் அன்பு தான்.
பைபிள் சொல்வதும் அன்பு தான்.
இந்து மதமும் சொல்வதும் அன்பு தான்.
இப்படி மதங்கள் அன்பை மட்டும் மிக உயரிய விழுமியமாகப் போற்றப்படும். 
அந்த உயர்ந்த விலை மதிப்பில்லா
அன்பிலும் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்தது நம் தமிழ் மொழி தான்.
அன்பு காட்டுவதிலும் மானுடம் அளவு கோல் வைத்துள்ளது.
இங்கே யாரும் முழுமையாக அன்பு செலுத்துவது இல்லை.
ஆக மனிதன் அன்பையும் அளவு பார்த்து வெளிப்படுத்துவதால் அன்பு எப்படி உயரிய விழுமியமாகும் என்ற எண்ணம் தமிழுக்கு வந்ததிருக்க வேண்டும்.
உலகில் எந்த மதமும், எந்த நாகரீகமும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு உயர்ந்த விழுமியத்தை இந்த மானுட வாழ்வியலுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ் மொழி தான் என்றால் அது மிகை ஆகாது.
அந்த உயரிய விழுமியம், அந்த மிக உயர்ந்த நிலை பொக்கிஷம், அந்த மகோன்னதமான மானுட நெறி தான் "அறம்" எனப்படும்.
வள்ளுவ பெருந்தகை அதிகாரம் நான்கில் அறம் பற்றி பத்து குறள் எழுதியுள்ளார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் 
அனைத்தறன் ஆகுல நீர பிற.          
- குறள்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

அறம் என்ற சொல் எந்த ஒரு மொழியிலும் இல்லை.
அறத்திற்கு ஆங்கிலத்தில் பல விளக்கங்கள் கொடுத்தாலும் அவையாவும் 
திருப்திகரமாக இருப்பது இல்லை.
அறத்திற்கு ஒரு சான்று சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரம் கற்பின் மாண்பை வலியுறுத்துகிறது.
ஆனால் கதையில் முக்கிய பங்கு வகிப்பது "சிலம்பு".
கதைப்படி உண்மையில் குற்றவாளி யார்?பொற்கொல்லர்.
"தென்னவன் தீதிலன்"
பாண்டிய மன்னன் குற்றமற்றவன்.
கண்ணகியும் ஒப்புக் கொள்கிறாள்.
கதாசிரியர் இளங்கோவடிகளும் நெடுஞ்செழியன் நல்லவன் என்று சான்று தருகிறார்.
ஆனால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஏதோ ஒரு குற்ற உணர்வு அவன் மனதைத் தாக்கியதால் தார்மீக பொறுப்பேற்று ஒழுக்க ரீதியாக ஒரு முடிவு எடுக்கிறான்.
கோவலன் மரணத்திற்கு தன்
கவனக் குறைவும் ஒரு காரணம் என்று,"யானோ அரசன் யானே கள்வன்"
என்று உரைத்து அவன் உயிரை
அவனே மாய்த்து தனக்கு தானே தண்டனை வழங்கிக் கொள்கிறான்.
சரி கதை இதோடு முடிந்து இருக்க வேண்டுமே.
ஏன் முடிக்கவில்லை.
கற்பின் மாண்பை, வலிமையை, சிறப்பை நிலைநாட்டவே கண்ணகி கதையின் இறுதியில் மதுரையை எரிக்கிறாள்.
மதுரை எரித்ததோடு கதை முடிகிறது.
சரி, கண்ணகியிடம் ஒரு கேள்வி?
உன்னை வரவேற்ற மதுரை.
உனக்கு வாழ்வு தந்த மதுரை.
நீ எரித்த மதுரை மக்கள் தானே உனக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
உன் துயரக்கதையை கேட்டார்கள்.
உன் பக்கத்துணையாக நின்றார்கள்.
அத்தனை பேரையும் சேர்த்து அள்ளவா நீ எரித்தாய்.
அப்போது அந்த மதுரை மக்கள் மீது உனக்கு அன்பு இல்லையா?
இந்த கேள்வி அவளிபம் கேட்கத் தானே செய்கிறது.
இந்த கேள்விக்கு மணிமேகலையில் பதில் கூறப்படுகிறது.
ஆம் இதுவே நாகரீகத்தின் உச்சம்.
நாம் வைக்கும் கேள்வி "கற்பு" பெரியதா அல்லது "அன்பு" பெரியதா
இரண்டும் மிக உயர்வான விழுமியங்கள்.
இப்படி இந்த இரண்டு உயர்வான விழுமியங்கள் மோதும் போது இதற்குப் பதில் எப்படிக் கூறுவது.
எந்த நிலைப்பாடு எடுப்பது.
இதில் எது சிறந்தது என்று கூறுவதற்கு உள்ளார்ந்த ஒளி வேண்டும். 
அந்த ஒளி வெளிக் காட்டுகிற உள்ளத்தில் துணிவு வேண்டும்.
மணிமேகலையில்
மணிமேகலை
கண்ணகி சிலை முன்,
கண்ணகி தெய்வத்தின்
முன் நின்று கொண்டு,
இந்த சிலிர் பூட்டும் வரிகளைக் கண்ணகியைப் பார்த்துக் கேட்கிறாள்
"கற்பு கடன் தீர்த்து அன்பு கடன் மறந்தனையே"
அன்பு அள்ளவா உன்னை வழி நடத்தி இருக்க வேண்டும்.
இதவே அறம்.
மணிமேகலையின் கேள்வியே அறம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (29-Aug-20, 10:54 pm)
பார்வை : 1310

மேலே