உறவுகள் ஒரு தொடர்கதை

தந்தையின் விந்தணுவால், தாயின் கருவறையில் விந்தையெனும் விதையாக விதைக்கப்படுமுறவு;

தொப்புள் கொடி வழி தாயின் உணவும் உணர்வும் கொண்டு
பத்து மாதங்கள் பக்குவமாய் வளர்ந்து
பூவுலகில் பூக்குமுறவு;

போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய தாய் தந்தை உறவு;

உறவு சடங்குகளில், முத்தாய்ப்பாய் முதலில் போற்றப்படும் தாய்மாமனுறவு;

அத்தைமடி மெத்தையடியென குட்டிக்குழந்தை கொஞ்சி மகிழுமுறவு;

பெருந்தாய் தகப்பனாய்ப் போற்றப்படும்
பாசமான பெரியம்மா பெரியப்பனுறவு;

செல்லம் கொஞ்சும் அழகான சிற்றன்னை சிற்றப்பனுறவு;

பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளைப்
பார்த்து பல கோடி ஆனந்தம் காணும் பாட்டன் பாட்டி உறவு;

இரத்தப்பாசத்தில் தோன்றும் உடன்பபிறப்பு என்றுமே வாழ்வில் உற்ற உறவு;

மூத்த சகோதரி மற்றுமோர் அன்னை உறவு;
மூத்த சகோதரனோ மற்றுமொரு தந்தை உறவு;

யாவரின் அன்பும் செல்லமும் சற்றே அதிகம் பெற்ற கடைக்குட்டி உறவு;

இடையில் தோன்றினும் தன் இறுதி மூச்சு வரை, இன்பதுன்பங்களை சமமாய் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை உறவு;

வாழ்வின் வரமாய்,வீட்டின் வசந்தமாய்
நம் மரபணுவில் மலரும் மழலை உறவு;

பெற்ற பிள்ளைகளின் மண வாழ்வால்
மற்றுமொரு மகனும் மகளுமாய் மலரும்
மருமகன் மருமகளுறவு;

தன் முகசாயலின் பிரதியுமாய், தன்
பிள்ளைகளின் நகலுமாய் துளிர்விடும்
தூய பேரப்பிள்ளைகளுறவு;

பணத்தைப் பாராமால் குணத்தைக் கண்டால் என்றும் குதூகலிக்கும் உறவு;

என்றும் வாசம் வீசும் தொடர்கதையாய் தொடருமுறவு;

உணர்வுகளாலான உன்னத கவிதையாய்
என்றும் ஒளி வீசுமுறவு;

விட்டுக்கொடுத்தால்
வாழ்வில் என்றும் வளம் கூட்டுமுறவு;

குற்றம் பாராமல் சுற்றம் பேணினால் என்றும் பலமூட்டுமுறவு;

அன்பால் மட்டுமே கட்டமைக்கப்படும் அழகான உறவு,
ஆலம்விழுது
போலே என்றும்
தொடரும் அற்புத உறவு.
*****************************
-இரா.இராம்கி (எ)
இரா.இராமகிருஷ்ணன்
நங்கைநல்லூர்,
சென்னை.
*****************************

எழுதியவர் : இரா.இராம்கி (10-Sep-20, 10:01 am)
சேர்த்தது : Ramakrishnan
பார்வை : 96

மேலே