விதவையின் ஒரு நாள்

கவிதை போட்டிக்காக எழுதியது..
---------------------------------------------------
கவிதைகளில் கலைச்சொற்கள்
---------------------------------------------
கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்.
_-------------- ------
1. *கவ்வை* - பழிச்சொல்
2. *காழகம்* - ஆடை 3. *குரம்பை* - குடிசை 4. *சகடம்* - வண்டி
5. *சிற்றில்* -
விளையாட்டு வீடு
6. *ஓர்வு* - சிந்தனை 7. *கங்குல்* - இரவு
8. *அசும்பு* - சகதி
9. *அத்தம்* - வழி, காட்டுவழி, பாலைவழி
10. *அயில்* - உண், பருகு, குடி
11. *அல்கல்* - நாள்தோறும்
12. *உறவி* - எறும்பு

-------------------------------------
விதவையின் ஒரு நாள்
------------------------------
கணவனை இழந்து கவ்வை சுமந்து
கடுந்துயர் கொண்டு காலம் தள்ள..
கந்தல் காழகந்தன் கடமை தவற..
சுற்றோர் சுடுகண் சூரியனை வெல்ல..
குரம்பை தேடி ஊர் ஊராய் ஓட..
காலை உண்ட கால் வயிறு கஞ்சி
கரைய தொடங்கி கால்கள் சுரந்திட..
கதிரவன் ஒளிய கங்குல் ஒளிர..
சிற்றில் போல சிறு குரம்பை கிட்டா
தன் நிலையோர்வு தன் மனதை கொல்ல..
சகடம் தேடி சாலையோரம் நிற்க..
கடக்கும் கண்களில் காமம் தெரிய..
ஒத்தையடி அத்தம் நினைவில் வந்திட..
ஒத்தை ஆளாய் ஓடியோடி நடக்க..
புல் வேர்க்கால் அசும்பு விரலிடை நுழைந்திட..
நடந்தும் ஓடியும் தன் நாவு வரண்டிட..
புட்டி அடி நீர் தான் அயில் கொண்டு மீண்டும் ஓடிட ..
தன் குரம்பை வாசல் வந்து அமர்ந்ததும்..
கால் கட்டை விரலை கடித்து தப்பி ஊர்ந்தோடும்
உறவிவொன்று எதிர் வரும் தடையை இலகுவாய் கடக்க..
ஏனோ உணர்த்திட்ட உறவிக்கு நன்றியுரைத்திட்டு..
அல்கல் எதிர்வருவர் நல்லோர் தீயோர்யென தானுணர்ந்து..
இடம் பெயரும் எண்ணம் அக்கணமே அழித்து..
அயர்ந்து உறங்கினாள் அசதியில் அவ்விதவை..
----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (25-Sep-20, 11:12 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 651

மேலே