அஞ்சல் தினம்
அன்புள்ள அஞ்சலே
நீ நலமா
நான் இங்கு நலம்
முகவரி கொடுத்து
முகம் காட்டும்
உன் முகம் இப்போது
எங்கே
வாசல் வந்து
நிற்பாய்
வாசிக்க வைப்பாய்
நேசம் கொண்டு
வருவாய்
நேசிக்க வைப்பாய்
இன்று உன்னை
தூரம் வைத்தது யார்
தொலைவிலிருந்து
நீ பேசிய வார்த்தைகளுக்கு
தொலைபேசி ஈடாகுமா
முத்திரையிட்டு முத்தம் கொடுத்த
உன் இதழ்களுக்கு
மௌனம்தான் மீதமா
முகவரியோடு
நடமாடிய உன்னை
ஒருவரியோடு எல்லோரும்
நிறுத்தி விட்டார்கள்
நீ கடிதம் என
கைபேசி கையில் வந்ததும்
உன் பேச்சை மறந்து விட்டார்கள்
வார்த்தையாய்
வந்த உன்னை
ஊமையாய் மாற்றினார்கள்
இருந்தும் ஒருசிலர்
சைகையாய் உன்னை
பேசுறார்கள்
அஞ்சலே உனக்கு
வரும் காலத்தில்
அஞ்சலி செலுத்தாமல் இருந்தால்
அதுவே போதும்...