அந்த நாளும் வந்திடாதோ
கொல்லை புறத்தினிலே ஒரு கிணறு
அங்கு கொஞ்சி குலவும் வண்ண நிலவு
முள் முருங்கை அரண் அமைத்து
முன்னோர்கள் தந்த பாதுகாப்பு வலயமிது
குலை தள்ளும் வாழைத்தோப்புக்குள்ளே
இலை வெட்டக்கூட யார் வருவார்
சொந்தம் பந்தம் உறவுகளன்றி உரிமை
கொண்டாட யாருக்கும் அதிகாரம் இல்லை
எட்ட நிற்கும் மாமரங்கள் குலை
குலையாய் காய்த்து தொங்கும்
கட்டி பிடிக்க முடியாத பலாப்பழமும்
முட்டை மஞ்சட்கரு நிறத்தில் இருக்கும்
சோலையோ என அதிசயிக்கும் இளநீர்
தள்ளிய தென்னை மரங்கள் மாலையில்
எமை மயங்கியே மகிழவைக்கும் இனியவரம்
பறவைகளோ ஒலியெழுப்பியே தாலாட்டும்
நீண்டபெரும் காய் சுமந்து நிம்மதியாய்
நிமிர்ந்து நிற்கும் முருங்கை மரம்
மரத்தின் காய்மட்டும் சுவை தருவதில்லை
கூடவே இலையும் உடலுக்கு நலம் தரும்
வனப்புற்று போன வாழ்க்கை எல்லாம்
கணப்பொழுதில் தடுக்கி கீழே வீழ்ந்தது
போல் காலசக்கரத்தின் ஓட்டத்தில்
கதி கலங்கியே போனவர்கள் நாம்
கொடுத்து வைத்தோராய் கொஞ்சம்பேர்
சொந்த நாட்டிலே வாழ துயரம் பொறுக்கவில்லை
வாழ்ந்த வாழ்க்கையும் மறக்கவில்லை
திரும்பவும் அந்த நாளும் வந்திடாதோ