சந்தன மரம்
அன்னைக்கு அன்னையாய்
தந்தைக்குத் தந்தையாய்
ஆசானுக்கு ஆசானாய் நேசம்
மிகுந்தவர் பாசமிகு என் தந்தை.
தனக்கென்று ஒரு வாழ்வு வாழத்
தெரியாதவர் பிள்ளைகளுக்காகவே
பெருங்கஷ்டத்தோடு வாழ்ந்த
பெருமகனவர்
மொத்தம் நான்கு பெண்பிள்ளைகள்
நால்வர் மேலும் அவரின் கண்கள்
எந்தக் குறையும் எங்களுக்குத்
தெரியவில்லை எல்லாத்தேவைகளும்
கேட்காமலே பூர்த்தி செய்வார்
நாங்கள் ஏக்கப்பட்டு வாழ அவர்
எங்களை எப்பவுமே விட்டதில்லை
அதிசயப்பிறவி என் தந்தை
எங்கள் கண்களில் நீரை கண்டால்
சித்தியை பொங்கியே தின்றிடுவார்
தேவையான துணிமணிகள் வாங்கி
தினமும் போட்டு அழகு பார்ப்பார்
காலில் போட்ட செருப்பு தேயும்
முன்னே மாற்று செருப்பு வாங்கிய
மாண்பாளன் என்தந்தை எங்கள்
வாழ்வின் ஆதார ஸ்ருதி அவர்
தண்ணியில் கூட குற்றம் சொல்லலாம்
என் தந்தையின் கனிவான பாசத்திற்கு
முன்னால் உலகின் அத்தனையுமே
பின்னால் கருத்த கரிய உருவம்
நெடிய தோற்றம் கொண்டவர் சிறிய
சந்தனப் பொட்டுக்குச் சொந்தக்காரர்
சந்தன மரத்தை போலே எந்தக் காலத்திலும்
எங்களுக்காகவே வாழ்ந்தவர் என் தந்தை
சரவணமுத்து ஆச்சாரி என்றால் என்
ஊரில் தெரியாதோர் மிகச் சிலரே என்
தந்தையின் கரங்கள் படாத மரங்கள்
பெரும் பாவம் செய்தவை தான் வெகுண்டு
எழும்பும் அலை கூட அவரை கண்டால்
சினம் தணியும் அலை அலையாய் தலையின்
அறுபது வயதினிலும் நரைக்காத ஆரோக்கியம்
அந்த அன்பே எங்கள் பாக்கியம்
பெரியவர்களாகும் முன்னே பிள்ளைகளுக்கு
நகை சேர்த்த குணசாலி அவர்
பெண்ணாய் பிறவாத என்தந்தை
அவருக்கென்று ஒரு சைக்கிள் அதை
துடைத்து சுத்தம் செய்து வைத்திருக்கும்
அழகு இந்தக் காலத்து சோம்பேறிகளுக்கு
அடிக்காமல் அடிக்கின்ற சாட்டையடி இல்லாதது
என்ன தெரியாது அவருக்கு எதுவுமேயில்லயே
சினிமா பற்றி பேசணுமா இசையை ரசிக்கணுமா
எல்லாத்திலும் அவருக்கே முன்னிடம்
நாவல்கள் படிப்பதில் வித்தகர்
படிக்கின்ற பழக்கம் அவரிடம் இருந்து
தானே எங்களுக்கு வந்தது பெண்
பிள்ளைகள் எல்லாமே தெரிந்து
வைத்திருக்க வேண்டுமென்று
துடியாய் துடிப்பார் என்தந்தை
இந்த உலகத்தில் எமக்கு அமைந்தது
போல் ஓர் தந்தை எவர்க்கும்
அமைந்ததுண்டா என என்னை கேட்டால்
இல்லை என்றே நான் சொல்வேன்
சந்தோஷமான சிரிப்பு எப்போதுமே
தவழ்ந்து இருக்கும் அந்த முகத்தில்
எழுபத்திமூன்று வயதில் தள்ளாடிச்
சரிந்தது அந்த தன்மானச் சந்தன மரம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
