இழவு வீடு

கவிதைகளில் கலைச்சொற்கள்
---------------------------------------------
கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்.
1. சென்னி - தலை, உச்சி, சிறப்பு;
2. சாம்பு - பறை, படுக்கை;
3. தறுகண் - கொடுமை;
4. ஏடை - ஆசை;
5. ஞெகிழம் - சிலம்பு;
6. ஆல் - நீர்;
7. தூம்பு - துளை;
8. வேரல் - மூங்கில்;
9. மூதுவர் - முன்னோர்;
10. போழ்வு - பிளவு;
11. சழக்கு - குற்றம், தீமை, பயனின்மை, தளர்ச்சி, பொய்;
12. கடியறை - மணவறை
-----------------------------------------------------------
இழவு வீடு
----------------
வீதியடைத்து பந்தல்..சிராய்த்த இருக்கைகள் ஓரமாய்..
இறுக்கமாய் உறவுகள்..அலறும் சில ஒப்பாரிகள்..
வரவேற்கா வரவேற்பறை.. நடுவே குளிர் பிணப்பேழை..
வடக்கு பார்த்த உடம்பு..துரத்தும் பத்தி பூ வாடை..
கதறி அழுது.. மயங்கி விழுந்து.. புலம்பும் வீட்டோர்..
அத்தறுகண் (அக்கொடுமை) கண்டு கலங்கும் சில கண்கள்..
என்னாச்சு...நல்லாத்தானே.. சில சம்பிரதாய கேள்விகள்..
குட்டை நெட்டையாய் புடையல்கள் (மாலைகள்).. வாசலில் நெகிழி குப்பைகள்..
தேநீர் பரிமாறும் சிறுசுகள்..எடுக்க தயங்கும் உறவுகள்..
சாம்பு (பறை) சத்தம் இடையிலும் சில பல பொது பேச்சுக்கள்..
பச்சை வேரல்(மூங்கில்) கட்டி.. தென்னை ஓலை விரித்து..
புடையல் தோரணம் தொங்க.. வழியனுப்ப ஏடையாயின் (ஆசையாயின்)
இரும்பு சாம்பு (படுக்கை) தாங்கி.. அவசர ஊர்தியது ஆவலுடன்..
ஐநூறு ஆயிரம் செலவிட்டு வலம் வரும் மாமன் கோடிகள்..
இறுதி நீராடலுக்கு ஒற்றை எண்ணிக்கையில் ஆல் (நீர்) குடங்கள்..
வரவேற்பறை கிளம்பி வாசலில் சென்னி (தலை உச்சி) தொட்டு எண்ணெய் அரப்பு..
வெள்ளை துணி நால் சுவராக இறுதியாய் நீராடல்..
இள வேரல் (மூங்கில்) போழ்வில் (பிளவில்) வறட்டி நிறை கொல்லி சட்டி..
நாட்டு வெடி வெடிக்க.. சாம்பு (பறை) சத்தம் சேர ஞெகிழமின்றி (சிலம்பின்றி) சிலர் ஆட்டம்..
தெரு முனை வரை வீடு பார்த்து செல்லும் பாடை..
ஆல் (நீர்) நிறை பானை மூன்று தூம்பின் (துளையின்) வழி ஆல் (நீர்) சிந்தி..
கடியறை (மணவறை) கண்ட உறவு கடைசியாக முகம் பார்க்க..
சழக்கு (பயனில்லா) உடல் போகும் வடக்கு காடு நோக்கி
அவர் மூதுவர்(முன்னோர்) சென்ற வழியே..
--------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (27-Feb-21, 7:11 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 56

மேலே