அனுபவங்களை சேகரி
அது ஒரு மலையடிவாரத்தை ஒட்டிய கிராமம்...
அங்கே இரு பால்ய வயது நண்பர்கள்.பதின்ம வயதின் பாதியில் இருந்தார்கள். அவர்கள் கிராமத்தின் ஓரிடத்தில் எப்போதும் போல் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்தனர்.அப்பொழுது திடீரென்று அவர்கள் கவனத்தை ஈர்த்தது ஒன்று. அங்கே இருந்த அந்த மலை மீது சிலர் ஏறிக்கொண்டும்,சிலர் இறங்கிக்கொண்டும் இருந்தனர்.சிறிது நேரம் அதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.பிறகு மீண்டும் விளையாட்டை தொடர்ந்தனர்.மாலையில் விளையாடி முடித்து வீட்டிற்கு திரும்பும் போது இருவர் மனதிலும் ஏதோ ஒரு உணர்வு.அவர்கள் கண்ட அந்த மலைக்காட்சி இருவர் மனதிலும் விரிந்தது.
"ஏன் அவர்கள் (மக்கள்) அந்த மலையின் மீது ஏறுகிறார்கள்?பின் ஏன் ஏறிய அனைவரும் கீழே இறங்குகிறார்கள்?அப்படி அங்கே என்ன இருக்கும்?" என சிந்தனை கொண்டு இருவரும் ஒருவரையொருவர் வினவிக் கொண்டே செல்கிறார்கள்.
இந்த நிகழ்வு இப்படியே சிலகாலம் தொடர்கிறது. அவர்கள் நண்பர்களுடன் விளையாடும்போதும், அவ்வப்போது அந்த மலையையும்,அதில் ஏறுபவர்களையும் , இறங்குபவர்களையும் கவனிப்பதுவும்,பின் வீட்டிற்கு செல்லும்போது ஒருவரையொருவர் வினவிக் கொண்டே செல்வதும் தொடர் நிகழ்வாகிறது.
ஒருநாள் இருவரும் "நாளை நாம் விளையாடுவதற்கு பதில், அந்த மலையடிவாரத்திற்கு செல்வோம்,அங்கே மலைப்பயணம் செல்வோரிடமும்,சென்று வருவோரிடமும் அந்த மலையுச்சியில் என்ன உள்ளதென்று கேட்போம் "என பேசி முடிவெடுக்கின்றனர்.
மறுநாள் தங்கள் முடிவின்படி விளையாடுவதை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்திற்கு செல்கிறார்கள்.அங்கே மலைமேலே ஏற ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்களிடம் " ஏன் மேலே ஏறுகிறீர்கள்.அங்கே அப்படி என்ன உள்ளது? " என்று வினவுகின்றனர்.
"அங்கே மலையுச்சியில் ஒரு கோவில் உள்ளது.அந்த இறைவனை தரிசிக்க செல்கிறோம்" என்றும்,"மலை மேலே சென்றால் இயற்கையின் அழகை ரசிக்கலாம்,அடர்ந்த வனத்தை ரசிக்கலாம் " என்றும்,"மேலே மூலிகைகள் நிறைந்து காணப்படும்,அங்கே செல்வதால் மனமும் உடலும் ஆரோக்கியமாகும். மூலிகைகளை தழுவி வரும் காற்று உடலுக்கு புத்துணர்ச்சி தரும் " என்றும் பலரும் பலவிதமாக கூறுகின்றனர்.
அடுத்து கீழே இறஙகுபவர்களிடம் சென்று "மேலே என்ன இருந்தது?ஏன் ஏறிவிட்டு(அங்கேயே இருக்காமல்) கீழே இறங்கி வருகின்றீர்கள்? என்று வினவினர்.
அவர்களும் அதேபோல் " மேலே கோவில் இருந்தது.இறைவனை தரிசித்தோம்,"
"இயற்கையையும் அடர்ந்த வனத்தையும் கண்டு ரசித்தோம்.அது ரம்மியமாக இருந்தது,"
"அங்கே மூலிகை வாசம் நிறைந்த சுத்தமான காற்றை சுவாசித்தோம்.அது அற்புதமான உணர்வாக இருந்தது" என்றனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக.
"அது கொடிய மிருகங்களும், அரிய உயிரினங்களும் வாழுமிடம்.அவைகளால் நமக்கும்,நம்மால் அவைகளுக்கும் ஆபத்து நேரும்.அங்கேயே நாம் வாழ்வது கடினம்." என்றனர் இரண்டாம் கேள்விக்கு பதிலாய்.
மாலை நேரமானவுடன் இருவரும் வீட்டிற்கு திரும்புகையில்,மலைப்பயணம்செய்பவர்களிடம் இவர்கள் கேட்ட கேள்விகளையும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களையும் அசைபோட்டுக் கொண்டே செல்கின்றனர். இறுதியில் இருவருக்கும் "நாமும் ஒருநாள் மலை மேலே செல்லவேண்டும்" என்ற ஆசை தோன்றுகிறது. இருவரும் தங்களது ஆசையை பரிமாறிக் கொள்கின்றனர்.
"இருந்தாலும் ஒரு பயம்.
கொடிய மிருகஙகள் இருப்பதாய் சொன்னார்களே என்று."
இது அவர்கள் தினசரி பேச்சாய் மாறிப்போனது.இருவரும் மலையை பார்ப்பதும், அப்பொழுது நாமும் ஒருநாள் அங்கே சென்று அந்த மலையுச்சிக்கு ஏறவேண்டும் என்றும் பேசத் தொடங்கி இறுதியில் ஒருவித பயத்துடனேயே பேச்சை முடித்தார்கள்.ஆம்,
"இருந்தாலும் ஒரு பயம்.
கொடிய மிருகஙகள் இருப்பதாய் சொன்னார்களே என்று."
சில காலம் கடந்தது..
இருவரும் பதின்ம வயதின் இறுதியை எட்டியிருந்தனர். வழக்கம் போல் அன்றும் நண்பர்களுடன் விளையாடி முடித்து விட்டு வீடு திரும்புகையில் பேசத் தொடங்கினார்கள் மலையை பார்த்தவுடன்.தம் ஆசையை பற்றிய வழக்கமான அந்த பேச்சு முடியும் தருவாயில் "எவ்வளவு நாள்தான் இவ்வாறு பேசிக்கொண்டே இருப்பது" என்ற விரக்தியில் புத்துணர்வு பெற்றவர்களாய் "நாளை அந்த மலையில் ஏறிவிடுவது" என்று தங்களுக்குள் பேசி முடிவெடுக்கிறார்கள்.
கொடிய மிருகஙகளை பற்றிய சிந்தனைகளோ,பயமோ இருவருக்குமில்லை அப்போது. காரணம் காலம் உருண்டோடியிருந்தது.ஆசை ஏக்கமாய் உருமாறியிருந்தது.
மறுநாள் காலை வீட்டிலிருந்து புறப்பட்டு தங்களின் ஆசையை நோக்கி செல்கின்றனர். மலையடிவாரத்தை அடைந்த பின்பு இருவரும் ஒருவரையொருவர் பார்த்து ஒருமுறை நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு மலை ஏற ஆரம்பித்தனர்.
பொறுமையாக இருவரும் ஏறிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இருவரும் களைப்படையவே சற்று ஓய்வெடுக்கலாம் என்றெண்ணி அமருகின்றனர்.அப்பொழுது அவர்கள் சிறிது தூரம் மட்டுமே ஏறியிருந்தனர்.சற்று நேரம் கழித்து இருவரும் ஏறத்தொடங்கலாம் என்றெண்ணி எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது இருவரில் ஒருவன் தனக்கு முன்னே ஏறிக்கொண்டிருந்த ஒருவரிடம் வினவினான்.
"இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது?" என்று.
"தெரியவில்லை.ஆனால் இன்னும் நிறைய தூரம் உள்ளது " -இது பதில்.
அவரைவிடுத்து இன்னொருவரிடம் அதே கேள்வியை வினவினான்.
"இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது?" என்று.
அவருடைய பதிலும் அதுவே.
சரியென்று மீண்டும் ஏறத் தொடங்கினர்.இன்னும் கொஞ்ச தூரம் கடந்தவுடன் இருவருக்கும் மூச்சிறைத்தது. களைப்பு போக்க சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி அமர்ந்தனர்.சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.சிறிது நேரம் கழித்து மனதிற்கும், உடலுக்கும் தெம்பை வரவழைத்துக் கொண்டு மேலேற தொடங்கினர். சற்று தூரம் கடந்தவுடன் சென்றமுறை வினவிய அதே ஒருவன் இம்முறை கீழே இறங்குபவர்களிடம் மீண்டும் வினவினான்.
" இன்னும் எவ்வளவு தொலைவு ஏற வேண்டும்? எவ்வளவு நேரம் பிடிக்கும் (ஆகும்)? " என்று.
அதற்கு அவர் இருவரையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு,
"இன்னும் அதிக தொலைவு உள்ளது.உங்களால் முடியுமா? சிறுவயதாய் இருக்கிறீர்கள். இப்பொழுதே களைப்படைந்து வேறு இருக்கிறீர்கள்.!!" என்று வினவிட்டு இவர்களை கடந்தார்.
குழப்பமடைந்தவனாய் இன்னொருவரிடம் அதே கேள்வியை கேட்டான்.
" இன்னும் எவ்வளவு தொலைவு ஏற வேண்டும்?எவ்வளவு நேரம் பிடிக்கும் (ஆகும்) " என்று.
அதற்கு அவர்,
"இன்னும் தொலைவு அதிகம் தான். ஏறி விடலாம். சோர்வடையாதீர்கள். ஏறுங்கள்" என்று கூறிக்கொண்டே கடந்து சென்றார்.அப்பொழுது அவர்கள் கால்பகுதி தொலைவை தாண்டியிருந்தார்கள்.
வேகமான சுவாசத்துடன் ஏறிக் கொண்டிருந்தனர் இருவரும். ஆனால் ஒருவன் மட்டும் குழப்பத்துடன்.
"இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும் போல் உள்ளது.ஏன் இவ்வாறு மேலே செல்கிறோம்? அதனால் என்ன பயன்? அப்படி என்ன மேலே கிடைத்து விடப்போகிறது? நமது கிராமத்திலேயே நமக்கு சுகமான அனைத்தும் கிடைக்கிறது.பிறகு உடலை வருத்தி ஏற வேண்டியதன் அவசியமென்ன ? மேலே ஏறியவர்கள் கூட கீழே இறங்கித்தானே வருகிறார்கள்? பிறகு ஏன்? ஏன்? ஏன்? " -- என்பதே அந்த குழப்பம்.
தனது குழப்பத்தையும், கேள்விகளையும் நண்பனிடம் கூறி வினவுகிறான். நண்பனும் சிந்தித்துக் கொண்டே இவனது ஒரு சில குழப்பத்தை தீர்க்க முற்படுகிறான்.ஆனால் இவன் குழப்பமும், கேள்விகளும் இவனை விடவில்லை.பேசிக் கொண்டே ஏறிக்கொண்டு இருந்தவர்கள் மீண்டும் களைப்புறவே அமருகின்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் பாதி மலையை நெருங்கி இருந்தார்கள்.
"நண்பா, போதும் என்று தோன்றுகிறது எனக்கு.கீழே இறங்கி விடலாமா ? " -- குழப்பத்துடன் இருந்தவன் கேள்வியிது.
" ஏன்? " என்றான் மற்றவன்.
" இதனால் ஒன்றும் பலனில்லையே? கோவில், இறைவன் தரிசனம், இயற்கையின் அழகு, மூலிகைகள் எனஅனைத்தும் நம் கிராமத்திலேயே நிறைய பார்த்துள்ளோம்.பிறகு ஏன்? " --- என்றான் குழப்பத்தில் இருந்தவன்.
"உண்மைதான். இருந்தாலும் " என்றான் மற்றவன்.
இவனும் களைப்புற்றே இருந்தான்.
" இருந்தாலும்... என்ன? " என்றான் அவன்.
" இருந்தாலும், மேலே ஒருமுறை ஏறித் தான் பார்ப்போம்." என்றான் மற்றவன்.
பேச்சு வளர்ந்து கொண்டே விவாதமானது. இறுதியில் "ஏன் குழம்புகிறாய்?" என்றான் மற்றவன்.
" என்னால் முடியவில்லை " என்றான் குழப்பத்தில் இருப்பவன்.
சிறிது நேரம் நன்கு யோசித்து விட்டு, "சரி. நீ வேண்டுமானால் கீழே சென்று எனக்காக காத்திரு. நான் ஏறிவிட்டு வருகிறேன் " என்றான் மற்றவன்.
குழப்பத்தில் இருப்பவனுக்கு மனம் ஒப்பவில்லை.ஆனால் குழப்பம் அவனை ஆட்கொள்ளவே,
" சரி. நீ மேலே சென்று விட்டு சீக்கிரம் வா. நான் உனக்காக கீழே காத்திருக்கிறேன் " என்றவன் கொஞ்ச நேரம் நண்பன் ஏறுவதை கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து இறங்கத் தொடங்கினான்.
ஏறுவதைவிட இறங்குவது எளிதாகவே இருந்தது.வெகு சீக்கிரமே இறங்கி விட்டான். களைப்பு நீங்க மலையடிவாரத்தில் அமர்ந்தவன் நண்பனுக்காக காத்திருந்தான்.
மேலே ஏறிக்கொண்டு இருந்தவன் களைப்பு அதிகமாகிடவே சற்று அமர்ந்தான்.களைப்பு மிகுதியாக இருந்தவனுக்கு நண்பன் வேறு உடனில்லாதது அவனை மேலும் சோர்வடையச் செய்தது. ஏதேதோ சிந்தனை அவனை ஆட்கொண்டது.
அப்படியே அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தவனை அவனை தாண்டி மேலே சென்ற ஒருவரின் கால் பட்டு நிதானத்துக்கு வந்தான்.
" மன்னிச்சுடுங்க " என்றார் அவர்.
"பரவாயில்லை" என்றானிவன்.
" ஏறவில்லையா? " என்றார் அவர்.
" இன்னும் எவ்வளவு தூரம்?" என்றானிவன்.
சற்று அவனை உற்றுப் பார்த்த அவர் " இன்னும் கொஞ்ச தூரம்தான்.எழுந்திரு." என்றாரவர்.
எழுந்தான்.
" முழுமையாக ஏற வேண்டுமானால் இனி யாரிடமும் இந்த கேள்வியை கேட்காதே." என்றாரவர்.
" ஏன்? " -- இவன்.
"ஏற வேண்டுமென முடிவெடுத்து வந்தவனுக்கு தூரக்கணக்கு எதுக்கு? " என்றார்.
" அப்படியென்றால்? "
" எவ்வளவு தூரமாயினும், ஏறித்தான் ஆக வேண்டும்.ஏற வேண்டும் என்று ஆசை கொண்டு தானே வந்திருப்பாய்" என்றார்.
கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான்.
" குழப்பிக் கொள்ளாதே.ஏறத் தொடங்கு." என்று கூறியபடி சிரித்துக் கொண்டே ஏறிச் சென்று கொண்டிருந்தார் அவர்.
அவன் மெதுவாய் மேலே கால் எடுத்து வைத்து ஏறத்தொடங்கினான். அப்பொழுது அவன் மலையின் முக்கால் பகுதி தொலைவை தாண்டியிருந்தான்.
மீண்டும் இயல்புக்கு வந்தவன் புத்துணர்வு பெற்றவனாய் இன்னும் வேகமாய் ஏறினான்.கீழே இறங்கிச் சென்றவன் நண்பனை நினைத்துக் கொண்டு காத்திருந்தான். மேலே ஏறுகிறவனை மீண்டும் களைப்பு தொற்றிடவே சற்று ஓய்வெடுக்க எண்ணி அமரும் போது எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தான்.அங்கே...
அங்கே..
அவனுக்கு அந்த மலையின் உச்சி மிக அருகில் தெரிந்தது.
இவ்வளவு நாள் காதால் கேட்ட கோவிலொன்று அங்கே அவன் கண்களில் தெரிந்தது.
ஆம்,
சிறுவயதில் மலையடிவாரத்தில் மலையில் ஏறுபவர்களும், இறங்கியவர்களும் அவனிடம் சொன்ன அந்த கோவில் அவன் கண்களில் முதன்முதலாய் தெரிந்தது. மிகுந்த உற்சாகம் பிறந்தவனாய் எழுந்தவன் விறுவிறுவென ஏறினான்.கோவிலை நெருங்க நெருங்க அவனுள் ஒருவித புத்துணர்ச்சி கூடியது. முழுவதும் மேலே ஏறியவன் சற்றும் நிற்காமல் கடகடவென கோவிலின் உள்ளே சென்றவன் அங்கிருந்த இறைவனை கண்டதும் பரவசமடைந்தான். அவனையறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. உடல் சிலிர்த்தது.
ஏறிவந்த களைப்பு அனைத்தும் நீங்கியது போல் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து நிதானம் வந்தவனாய் வெளியே வந்தவன் அங்கிருந்த பாறை ஓன்றின் ஓரத்தில் சென்று அமர எண்ணி நகர்ந்தவனுக்கு மேலும் ஒரு அதிசயம் தென்பட்டது.
ஆம்,
இயற்கையின் பேரழகு அவன் கண்களுக்கு காட்சியளித்தது. நீண்ட நெடிய மலைத்தொடர்களும், ஆங்காங்கே அதில் ஓங்கியுயர்ந்த மலைச்சிகரங்களும், அடர்ந்த வனங்களும், ஆங்காங்கே விழும் நீர்வீழ்ச்சிகளும் அவனுக்குள் ஒரு இனம்புரியாத உணர்வையூட்டின.மெல்லிய தென்றல் அவன் உடலை தீண்டும்போது மீண்டும் மீண்டும் அவனுடல் சிலிர்த்தது. மேகங்கள் அவனை தழுவிச்செல்லும் போது இயற்கைத்தாயின் அதிசயத்தையும், பூமித்தாயின் அரவணைப்பையும் உணர்ந்தவன் அங்கேயே மெய்மறந்து நின்றான். நீண்ட நேரம் இயற்கையன்னையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு நண்பனின் நினைவு வரவே நிதானத்துக்கு வந்தவனாய் மனதிருப்தியோடு இறங்கத் தொடங்கினான்.
ஏறுவதை விட இறங்குவது எளிதாகவே இருந்தது இவனுக்கும். வெகுவிரைவில் கீழே இறஙகிவிட்டான்.
மலையடிவாரத்திற்கு வந்தவன் நண்பனை தேடினான்.இவனை இனம் கண்ட நண்பன் ஓடிவந்து ஆரத்தழுவிக் கொண்டான்.
பின் இருவரும் வீட்டின் திசை நோக்கி நடக்கத் தொடங்கினர். நடக்கும் போது மலை மேலே தான் பார்த்த காட்சிகளை தன் நண்பனிடம் விவரித்துக்கொண்டே வந்தான். நண்பனும் இவனது அனுபவத்தை ரசித்துக் கொண்டே வந்தான்.
வீட்டை நெருங்கியவுடன் பேச்சை முடித்துக்கொண்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்.
அன்றிரவு அவனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. கண்களை மூடினாலே இயற்கை அன்னையின் பிரமாண்டம் அவன் கண்முன் விரிந்தது. அவன் உடல் சிலிர்த்தது. உதடுகள் புன்முறுவலிட்டன. இந்த அனுபவம் அவனுக்கு வித்தியாசமானதாக இருந்தது.
மறுநாள்,
வழக்கம்போல் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடத் தொடஙகினர். அவர்கள் வாழ்க்கை எப்போதும் போல் இயல்பாக ஓடியது.
ஆனால், அவர்கள் பேச்சில், சிந்தனையில் மட்டும் மாறுதல் தென்பட்டது.முன்பு போல் அவர்கள் அந்த மலையைப் பற்றிய பேச்சை பேசுவதில்லை. அதைப்பற்றி சிந்திப்பதுமில்லை. பேசினாலும் முழுமையாய் மலை மேலே ஏறியவனுக்கு புன்முறுவலும், முடிந்தவரை ஏறியவனுக்கு புதுவித நம்பிக்கையும் தோன்றியது.
அந்த மலை ஏறியதால் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களோ, முன்னேற்றங்களோ ஏதும் ஏற்படவில்லை. அவர்கள் வாழ்க்கை எப்பொழுதும் போல் இயல்பாகவே இருந்தது. ஆனால்,
" அவர்களின் நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறி விட்டது. ஒருவனுக்கு முழுவதுமாக, மற்றவனுக்கு முடிந்தவரையிலுமாக. அவர்களின் எண்ணம், பேச்சு, சிந்தனை ஆகியவை அடுத்த செயலின் மீது முழுவதுமாக திரும்பி விட்டது. இனி அவர்கள் இருவரும் அந்த மலைமேலே ஏறினாலும், ஏறாவிட்டாலும் ஏக்கத்திற்கு இடமில்லை. ஏறினாலும் முதல் அனுபவம் போலிருக்க சாத்தியங்கள் குறைவு தான்.
அவர்கள் அந்த மலைமேல் ஏதும் பொன், பொருள் கிடைக்குமென்ற எண்ணத்திலோ, அங்கிருந்த இறைவனிடம் ஏதேனும் வேண்டிக்கொள்ள வேண்டுமென்றோ, அல்ல அந்த இறைவன் தம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தருவார் என்ற ஏக்கத்திலோ அந்த மலைமேல் ஏறவில்லை. அவர்களுக்கு அங்கே கிடைத்ததும் அனுபவத்தை தவிர வேறொன்றும் இல்லை. இருந்தாலும் அந்த அனுபவமே அவர்கள் வாழ்க்கையை மாற்றும், முன்னேற்றத்தை தரும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
யதார்த்தம் யாதெனில்,
" அவர்களின் ஆசை ஒன்று நிறைவேறி விட்டது. ஒருவனுக்கு முழுவதுமாக.....ஒருவனுக்கு முடிந்தவரையிலுமாக........ அவ்வளவே. "
ஆம்,
உண்மைதான்.,
வெற்றி என்பது பெரிதாக ஒன்றுமில்லை.
" செயல் ஒன்று கவனம் பெறுவது தான்......
சிந்தனை ஒன்று துளிர்விடுவது தான்....
சிந்தனையை பற்றி பேசத் தொடங்குவது தான்.....
தேடல் ஒன்றுக்கு விடை கிடைப்பது தான்......
பயம் ஒன்றை ஏற்றுக்கொள்வது தான்...
ஏக்கம் ஒன்று தகர்க்கப்படுவது தான்.....
குழப்பத்தில் இருந்து புத்துணர்வு பெறுவது தான்....
களைப்புற்றாலும் சலிப்படையாமல் இருப்பது தான்...
தனிமையிலும் போராடுவது தான்....
ஆசை ஒன்று நிறைவேறுவது தான்...
முடிந்தவரையில் முயற்சி செய்தோம் என்ற மனத் திருப்தியும், தற்பெருமையும் தான்......
அனுபவங்களை சேகரிப்பது தான்.....
அனுபவங்களை சேகரிப்பது மட்டும் தான்....."
நன்றி !!!