உள்ளம் தளராத வீரம் உடையான் விறல்வேந்தனாய் நின்று தீரமே செய்வன் - வீரம், தருமதீபிகை 802

நேரிசை வெண்பா

உள்ளம் தளரா(து) உறுதி குலையாது
வெள்ளமென அல்லல் மிடைந்தாலும் - தள்ளரிய
வீரம் உடையான் விறல்வேந்த னாய்நின்று
தீரமே செய்வன் தெளிந்து! 802

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அல்லல் பல அடைந்தாலும் நல்ல வீரமுடையவன் உள்ளம் தளராமல் உறுதி குலையாமல் அரிய காரியங்களை ஆராய்ந்து செய்து யாண்டும் வெற்றி வேந்தனாய் விளங்கி நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயர்ந்த உள்ளத் திண்மை சிறந்த பண்பாடுகளால் அமைந்து வருகிறது. நேர்மை, வாய்மை முதலிய புனித நீர்மைகள் உடையவர் நல்ல மனவுறுதி யுடையராய் மகிமை தோய்ந்து வருகின்றார், கள்ளம், கபடு, கரவு முதலிய இழிவுகள் உடையவர் எவ்வழியும் கோழைகளாய் இழிந்து நிற்கின்றார். சிறிய இயல்புகள் மருவிய அளவு மனிதன் பெரிய மேன்மைகளை இழந்து விடுகின்றான். அச்சமும் திகிலும் அவனை உச்சமாய்ப் பற்றிக் கொள்ளுகின்றன. கொச்சைகள், பேடிகள், கோழைகள் என எள்ளி இகழப்படுபவர் இழிவான பழிகளோடு அழிவுறுகின்றனர். வீர தீர. சூரர் என்பவர் விழுமியராய் விளங்குகின்றனர்.

ஆண்மை, தீரம், அஞ்சாமை என்னும் மொழிகள் மேன்மையான ஒளிகளை யாண்டும் வீசி நிற்கின்றன. ஆண்டகை, தீரன், அருந்திறலாளன் என உலகம் உவந்து புகழ நேர்ந்தவர் உயர்ந்த குல வீரராய் ஒளிபெற்று நிற்கின்றார். ஆண்டகை என இராமனைக் காவியப் புலவர்கள் யாவரும் ஆவலோடு கூறி வருவது அவனது அருந்திறலாண்மைகளை வியந்து மகிழ்ந்தேயாம். அரிய கடல் கடந்து பெரிய போர் புரிந்து கொடிய நிருதர் குழுவை அடியோடு முடிய நூறியுள்ள அவ்வீரனது ஊக்கமும் உறுதியும் உரையிடலரியன. வேந்துக்கு உரிய உயர் நீர்மைகள் யாவும் அவ்வேந்தனிடம் எவ்வழியும் திவ்விய ஒளிகளை வீசியுள்ளன. அஞ்சாத ஆண்மை எஞ்சாத மேன்மையாய் நின்றது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்(கு) இயல்பு. 382 இறைமாட்சி

மன்னனிடம் மன்னியிருக்கவுரிய குணநலங்களைத் தேவர் இன்னவாறு குறித்திருக்கிறார். அஞ்சாமையைத் தலைமையாக முதலில் நிறுத்தியதால் அரசுக்குக் தனி உரிமையான அதன் நிலைமை தெரிய வந்தது. அஞ்சுதல் - மனம் கலங்குதல். கலங்கிய நீரில் உருவம் சரியாய்க் காண இயலாது; அதுபோல் நிலைகுலைந்த நெஞ்சு எதையும் செய்ய இயலாது. மனத்திண்மையோடு மருவியுள்ளவனே வினைகளைத் திண்மையாய்ச் செய்து வியன் பயன் காண்கிறான். மேன்மையாய் ஆளவுரிய அரசனிடம் அரிய பல பான்மைகள் மருவியிருந்த போதுதான் அந்த ஆட்சி சிறந்து விளங்கிவரும். உரிய நீர்மைகள் உயர் சீர்மைகளாகின்றன.

அனுகீதை என்னும் அரிய நூலில் அரச நீர்மைகள் வரிசையாய்க் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை .மேல் நாட்டாரும் விரும்பி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். வேந்தின் இயல்புகள் விழைந்து கொள்ள வந்தன;

Nobility, enlightenment, courage, forgiveness, truth, equability, absence of fear, absence of stinginess, straightfor: wardness, purity, dexterity, valour. - Anugita

'பெருந்தன்மை, தெளிவு, தைரியம், சகிப்பு, சத்தியம் சமநோக்கு, அஞ்சாமை, உலோபம் இல்லாமை, நேர்மை தூய்மை, சாதுரிய சாகசம், வீரம்” என்னுமிவை நல்ல அரசுக்கு உரிய தன்மைகளாம். இவை இங்கே கருத வுரியன.

தனக்கு உரிமையான இனிய இயல்புகள் நன்கு அமைந்துள்ள அளவுதான் எந்த வேந்தனும் ஒளி பெற்று உயர்ந்து வருகிறான். உள்ளம் தளராத உறுதியும் தரும நீதியும் அரசியலுக்கு உயர் மகிமைகளை அருளுகின்றன. அந்நீர்மைகள் தோய்ந்த அரசனை உலகம் உவந்து போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றது.

அரசியல் பிழையா(து) அறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்;
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே!
முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொ(டு)
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்(கு) அஞ்சிப் பணிந்தொழு கலையே!
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை. - மதுரைக் காஞ்சி

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனுடைய நிலைமை நீர்மைகளை இது குறித்துள்ளது. மாங்குடி மருதனார் என்னும் சங்கப் புலவர் இக்கோமகனுடைய குண நலங்களையும் அரசியல் முறைகளையும் நெறிகளையும் சுவையாகப் பாடியிருக்கிறார்.

இனிய அமிர்தத்தோடு உயர்ந்த பொன்னுலக வாழ்வு கிடைப்பதாயினும் பொய் பேச மாட்டான்; இவ்வுலகத்தோடு சிறந்த தேவர்கள் திரண்டு வந்தாலும் பகைவர்க்கு அஞ்சிப் பணிய மாட்டான் என்றதனால் இவனது சத்திய நிலையையும் சித்தத்தின் திடத்தையும் உத்தம வீரத்தையும் ஓர்ந்துணர்ந்து கொள்கிறோம். நீதிமன்னர் நித்திய சோதிகளாய் நிலவுகின்றனர்.

இத்தகைய மேலான அரசரை இந்நாடு முன்னம் பெற்றிருந்துள்ளதை நினைத்து வியந்து நெஞ்சம் களிக்கின்றோம். பொய், நீசம் என நீங்கி யாண்டும் எவ்வழியும் மெய்யே பேசி மேன்மை நீண்ட அந்தப் பாண்டியன் ஆண்டு வந்த நாட்டிலே இன்று பொய் பரவியிருக்கும் புலை நிலை குலை நடுங்கச் செய்கின்றது.

நாணாமல் பொய்பேசி நாசமாய்ப் போகின்ற
..நாட்டார் என்று
கோணாமல் நிலைதெரிந்து குடிகேட்டின் புலையுணர்ந்து
..கொள்வார் அம்மா!

என்று பாரத மாதாவிடம் ஈர நெஞ்சினர் இங்ஙனம் இரங்கி முறையிட்டுக் கரைந்து வருகின்றனர். தகுதியான அரசர் இந்நாளில் இல்லையாயினும் ஒவ்வொருவரும் அரச நீர்மை தோய்ந்து இந்நாட்டு மன்னராகலாம். மேன்மையாய் உயர்வதும் கீழ்மையாய் இழிவதும் அவரவர் இயல்பாலேயாம். நல்ல மனம் கெட்டதானால் பொல்லாத வினை ஒட்டிக் கொல்லும். ’தன்வினை தன்னைச் சுடும்’ என்பது நெடிய பழமொழி. அவனவன் கேட்டுக்கு அவனவனே யாண்டும் பூரணமான காரணன் ஆகின்றான்.

Our destiny in our hands; On the new road, we must now go forward - Alexis carrel

"நமது விதி நம் கையில் உள்ளது; புனிதமான புதிய வழியில் இனி நாம் மேலே போக வேண்டும்' எனப் பிரஞ்சு தேசத்து விஞ்ஞானி இங்ஙனம் மெய்ஞ்ஞானம் கூறியிருக்கிறார்.

நல்ல வீரம் தோய்ந்து உள்ளம் புனிதமாய் உயர்ந்து கொள்க; எல்லா மேன்மைகளும் உன்னை உவந்து கொள்ளும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Apr-21, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே