எழுத்தால் வாழ்வார் என்றும் கிரா கவிஞர் இராஇரவி

எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !



மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காமல்
மழையை ரசிக்க பள்ளிக்கூடம் செல்லாதவர்!

ஏழாம் வகுபுப் வரை மட்டுமே படித்திட்ட போதும்
எட்டாத உயரத்தை இலக்கியத்தில் தொட்டவர்!

சிறுகதை புதினம் நாவல் கட்டுரை என
சிறப்பாக வடித்திட்ட சகலகலா வல்லவர்!

ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன
ஆங்கிலேயரும் படித்து வியந்து பாராட்டினர்!

கௌரவ பேராசிரியராக பாடம் நடத்தியவர்
கௌரவத்தை கரிசல் பூமிக்கு பெற்றுத் தந்தவர்!

கரிசல் மண் பேச்சு வழக்கு அகராதி எழுதியவர்
கரிசல் மண் பண்பாட்டை கரைத்துக் குடித்தவர்!

சாகித்ய அகதெமி விருதினை வென்றவர்
சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திக் காட்டியவர்!

இறுதி மூச்சு உள்ளவரை எழுதி வந்தவர்
எழுதி கையெழுத்திலும் படைப்புகள் வெளியிட்டவர்!

வாழ்ந்திட்ட புதுவைக்கும் புகழ் சேர்த்தவர்
வசதிகளை விரும்பாத எளிமையின் சிகரம் அவர்!

கர்வம் துளியும் இல்லாத கண்ணிய மனிதர்
கடைக்கோடி மனிதனுக்கும் புரியும்படி எழுதியவர்!

எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாதவர்
எழுதியபடி எளிய வாழ்வு வாழ்ந்த வலியவர்!

எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டுமென
இலக்கணம் வகுத்துத் தந்த நல்லவரே!

மனதில் பட்டதை அப்படியே எழுதி எழுதி
மனங்களில் இடம்பிடித்தாய் வாழ்வாய் என்றும்!

நூற்றாண்டு கடந்து வாழ்வாய் என்று இருந்தோம்
நூற்றாண்டுக்கு முன் மூச்சை நிறுத்திக் கொண்டாய்!

உடலால் உலகை விட்டு மறைந்துவிட்ட போதும்
உன்னத எழுத்துக்களால் என்றும் வாழ்வார்!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (19-May-21, 8:05 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே