காதலின் பிரிவு - கஸல் துளிகள்

உன் பயணங்களோடு பயணிக்கப்
புறப்பட்டு வந்து நின்றேன் நான்.
என் பாதையைப் பண்படுத்தி
முட்செடிகள் நட்டுச் சென்றாய் நீ
**
வெறும் நம்பிக்கை என்னும் விளக்கில்
சுடராய் உன்னை ஏற்றி வைத்தேன்
பெருந் துரோகம் என்னும் புயலாய்
என் ஒளியைத் தூற்றி விட்டாய்.
**
என் கிழக்கை வாங்கி நீயுன்
மேற்கில் வைத்துப் பூட்டி விட்டாய்
உன் இருளின் சுவரில் எங்கே
அதன் சாவியை மாட்டி வைத்தாய்.
**
ஒரு கோடை கால வாழ்வில்
மழைக்காய் நீயோர் மேகம் தந்தாய்
அதன் கண்ணீர் வெள்ளப் பெருக்காய்
நீளு தற்கேன் சோகம் தந்தாய்.
**
என் பட்டாம்பூச்சி சிறகை ஒடித்து
ஆடை நெய்து அணிந்து கொண்டாய்
உன் பட்டுச் சேலை சொலிக்கச்
சொலிக்க தலை குனிந்து சென்றாய்.
**
என் ஒற்றைப் பயண முடிவை
மூடிய மனசால் காட்டி விட்டாய்
உன் ரெட்டை சடையில் பூவைச்
சூடியே நெஞ்சை வாட்டி விட்டாய்.
**
என் வாசல் வந்து கோலம்
போடக் காத்துக் கிடந்த இளமை
விழி வாசல் வந்து கண்ணீர்த்
துளிகள் ஜாலம் நடத்தும் நிலைமை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jun-21, 1:30 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 107

மேலே