வரை கோட்டிற்குள் மனம்
வரை கோட்டுக்குள் மனம் ...
சன்னல் கம்பியில் முகம் புதைத்து
சலனமற்ற சாலையை வெறித்தது விழிகள்...
சன்னமாய் பேசி கன்னத்தில் முத்தமிட்டது
அந்த வெப்பச்சலன மழைக்காற்று.....
முகத்தில் தெறித்த நீர்திவலைகள்...
எண்ண அலைகளாகி
இலக்கற்று எங்கெங்கோ மோதி
வண்ணக் கலவைகளை வாரி சுமந்து வந்து
வசந்த நினைவுகளை காட்சியாய் சாசனப்படுத்திட.....
சாட்சியாய் எங்கிருந்தோ ஒரு ஒற்றைக் குயிலோசை
இதயக் கூண்டில் ஏறி விம்மலாய் முணங்கியது....
ஈரக் காற்றை உள்வாங்கிய சுவாசமோ
அனிச்சையாய் அதை வெளியேற்ற
காதோரம் ஒதுங்கிய கற்றை நரைமுடியில்
கட்டவிழ்ந்த ஒற்றை முடி
விழித்திரையில் முன்னின்று உறுத்தியது....
கடமைகள் கண்முன்னே படர்ந்தது..
சாட்சியை சாந்தப்படுத்தி
காட்சியை கரையவிட்டேன்....
கட்டுண்ட பறவையாய் மனம்
வரை கோட்டுக்குள் சிறகடிக்கத் தொடங்கியது.....
கவிதாயினி அமுதா பொற்கொடி