நான் இங்கு வந்ததின் காரணம் என்ன
பெற்றோர்களுக்கு பிள்ளையாய் பிறந்தேன்
அவர்கள் போட்ட பிச்சையில் வாழ்ந்தேன்
இப்போது பெற்றோர்களை இழந்தேன்
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
என் குழந்தை பருவத்தை அறியேன்
பள்ளியில் பயின்றதையும் அறியேன்
கல்லூரி எதற்கு சென்றேன்? புரியேன்
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
இளமையில் நண்பர்கள் இருந்தார்கள்
பொறுப்பில்லை,என்னுடன் திரிந்தார்கள்
இப்போது அவர்கள் எங்கே? தெரியாது
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
கல்லூரியில் நானும் சென்று படித்தேன்
ஒரு சில பாடங்களை கற்று அறிந்தேன்
அதனால் பட்டம் ஒன்றையும் பெற்றேன்
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
ஒருவருடம் அலைந்த பின் ஒரு வேலை
முதல் வருடம் மாதம் 300 ரூபாய் சம்பளம்
இரண்டாம் வருடம் 400 ரூபாய் சம்பளம்
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
படிப்பின் அடிப்படையில் வேறு வேலை
ஊரை விட்டு ஊர் சென்று உத்தியோகம்
1000 ரூபாய் சம்பளம் வடக்கில் வேலை
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
ஐந்து வருடம் ஆன பின் திருமணம்
பின் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை
குடும்ப பொறுப்புடன் கடமை பொறுப்பு
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
வேலையில் பதவி சம்பள உயர்வு
இடையே இன்பம் துன்பம் பகிர்வு
சுதந்திரமான இன்பம் மிக குறைவு
நான் இங்கு வந்ததின் காரணம் என்ன?
60 ஐ கண்டேன் ஆறுதல் கொண்டேன்
ஓய்வு பெற்று சுதந்திரம் பெற்றேன்
என்னை மிக அன்பாக நேசிக்கிறேன்
இதுதான் நான் இங்கு வந்த காரணம்!
இப்போது நேரத்திற்கு அடிமை இல்லை
நேரம்தான் எனக்கு இப்போது அடிமை
சுதந்திரமான இனிமையான தனிமை
இதுதான் நான் இங்கு வந்த காரணம்!
பக்தி இருந்தால் கும்பிடுகிறேன்
சக்தி இருந்தால் தியானிக்கிறேன்
புத்தி உதவினால் எழுதுகிறேன்
இதுதான் நான் இங்கு வந்த காரணம்!
அறுசுவை உணவை ரசிக்கிறேன்
பலசுவை தமிழை ருசிக்கிறேன்
பாடல்கள் பாடி இசைக்கின்றேன்
இதுதான் நான் இங்கு வந்த காரணம்!
பழைய கவலைகள் தரும் பயம் ஏதும் இல்லை
புதிய கலைகள் தரும் இனிய பயன்கள் உண்டு
பாராட்டுகள் கிடைப்பின் மனம் மகிழ்கிறேன்
சீராட்டுகள் இல்லை எனினும் நெகிழ்கிறேன்
இதுதான் நான் இங்கு வந்த காரணம்!
நண்பர்கள் தேடி வந்தால் கூடி களிக்கிறேன்
யாரும் இல்லை என்றாலும் லயிக்கிறேன்
பொன்னுலகம் வெளியே என் உலகம் உள்ளே
நாளை நான் இருப்பேனா, சத்தியமாக அறியேன்
நாளையை பற்றிய சிந்தனை இனி எனக்கு ஏன்?
ஆனந்த ராம்