சாலையோர சத்தங்கள்
உட்கார விரிப்பில்லை
உறக்கம் கொள்ள வழியுமில்லை
சாலையின் இரைச்சலிலே
சாயவும் நிழலில்லை..
புத்துயிர் கொண்ட உயிர்
புழுதியில் புதைகிறது..
வசியத்தால் வசமாகாது
வாழ வழியும் பிறக்காது
வழியிலா வாழ்வுதனில்
வறுமையெனும் வலியகரம்
வாள் வீசி சிறைபிடிக்க...
வண்ணசித்திரம் ஒன்று
வழியின்றி தவிக்கிறது..
கசங்கிய கந்தல் உடையில்
கண்ணீர் மல்க நிற்கிறது..
நரம்புகள் தளர்ந்து போக
நா வறண்டு தாகமெடுக்க
நீரில்லா ஏக்கத்தில்
நிலைதடுமாறி கீழே விழ..
கரம் ஒன்றைத் தேடி அது
கனவுலகில் வாழ்கிறது...
வேதனைகள்
வெப்பமாய் தாக்கி..
வாழ்வின் பாதைகளை
அனலாய் மாற்றி..
யாதும் இழந்து
முதுகும் கூனிந்து
பணமின்றி பரிதாபமாய்
இயலாமையில் சோர்ந்துபோய்
இளமையில் வெந்துபோய்..
குணம் மாறும் குழந்தைகள் -இங்கு
பிணம் ஆக்கி விடாமல்
காத்து நீ கரம் நீட்டு -அவர்களின்
வயிற்றுக்கு ஈரம் காட்டி
பசியினை தூரம் ஓட்டு..