அன்பை தேடி
அன்பை தேடி
பாண்டிச்சேரிக்கு ம், விழுப்புரத்திற்கும்
இடையே அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் தான் மண்டகப்பட்டு. பாண்டியிலிருந்து அவன் ஊருக்கு கிளம்பும் இரவு பத்து மணி பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். நாற்பத்தைந்து நிமிட பயணத்திற்கு பிறகு மண்டகப்பட்டு வரவே பஸ்ஸிலிருந்து மிக களைப்புடன் இறங்கினான். தெருவிளக்குகள் மிகப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. ஊர் முழுவதும் அடங்கி தூக்கத்தில் இருந்தது. ஒரு சில வீட்டில் மட்டும் தொலைக்காட்சிப் பெட்டி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. யாருமில்லாத தெருக்களில் நாய்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை. தன் வீட்டை அடைந்தவன் கதவைத்தட்டினான்.
கதவை திறந்த சௌந்தரம்மாள்
" என்னடா தீனா, நீ மட்டும் வர, எங்கடா வரலட்சுமி"
".................."
வேட்டியும், சட்டையையும் கழட்டி, லுங்கிக்கு மாறிய தீனன் என்றழைக்கும் தீனதயாளன் மௌனம் சாதித்தான்.
" எங்கடா வரலட்சுமி, உன் கூட தான வந்தா"
" ..............."
" பைத்தியக்காரி மாதிரி நான் உன்கிட்ட கேட்டிட்டுருக்கேன், நீ பதிலே சொல்லாமல் ஊமையா நிக்கிறியே"
"..............."
" இப்ப நீ எனக்கு வரலட்சுமி எங்க போனான்னு சொல்ல போறியா இல்லையா"
"................"
" இப்படி கல்லுளி மாதிரி இருந்தா எப்படிடா... பதில் சொல்லுடா தீனா"
".............."
தீனன் தன் அன்னையின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு, ஒரு கடிதத்தை தன் தாயிடம் கொடுத்தான்.
எனக்கு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை. தாயில்லாத பெண்ணான நான் என் தந்தை இறக்கும் தருவாயில் 'உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் தயவுசெய்து என் தங்கை மகன் தீனதயாளனை கல்யாணம் பண்ணிக்கொள் என்று என்னை என் தந்தை நிர்பந்த படுத்தியதால், மனமே இல்லாமல் அதற்கு சம்மதித்தேன். திருமணமாகி ஆறு மாதம் ஆகியும் ஏனோ உங்களுடன் வாழ என் மனம் சம்மதிக்கவில்லை. காரணம் தெரியவில்லை. உங்களை எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் அன்னை, அதாவது என் அத்தை, என்னிடம் நிறைய அன்பு செலுத்தினாலும், நான் எதிர்பார்த்த வாழ்க்கை எனக்கு உங்கள் வீட்டில் கிட்டவில்லை. நம் தெருவில் வசிக்கும் ஹிந்தி காரரான ராம்தேவ் உடன் எனக்கு காதல் ஏற்பட்டதால் அவனுடன் இந்த ஊரை விட்டு செல்கிறேன். இனி என் வாழ்க்கை அவனோடு தான். என்னை எங்கும் தேட வேண்டாம். போலீசிலும் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம். ஒருவேளை நான் எடுத்த முடிவு தவறாக போய் நான் திரும்பி வந்தால் என்னை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். நிச்சயம் நான் அவனுடன் சந்தோஷமாக வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எடுத்த முடிவு தவறாக போனால், நிச்சயம் உங்களை தேடி வரமாட்டேன். நான் எடுத்த முடிவு எனக்கு சரியாக படுகிறது. உங்களுக்கு இது நிச்சயம் கௌரவப் பிரச்சினை. இதற்குமேல் நான் என்ன சொல்வது. என்னை மன்னிக்கவும்.
இப்படிக்கு ,
வரலட்சுமி.
" அடிப்பாவி இப்படி பண்ணிட்டாளே, அந்த இந்திக்கார நாயோட சிரிச்சு, சிரிச்சு பேசும் போது ஏதோ நடக்கப் போகுதுன்னு என் மனசு சொல்லிச்சு. இருந்தாலும் காலம் ரொம்ப மாறிடுச்சு அப்படின்னு சுலுவா விட்டதுல இப்படி என் பையனையும் என்னையும் ஏமாத்திட்டு போயிட்டுயேடி. படுபாவி... ஓடுகாலி... நீ நல்லா இருப்பியா... நீ நல்லாவே இருக்க மாட்டே... அவன் கூட போன கொஞ்ச நாள்ல நீ எப்படி சீமிக்க போற பாரு.... என் குல கெளரவத்த கெடுத்த நீ நல்லாவே இருக்க மாட்டடி... சண்டாலி...என் பையனுக்கு துரோகம் பண்ண நீ நிச்சயமா கேடு கெட்டு போயிடுவ...."
செளந்தரம்மாள் சரமாரியாக கண் கலங்கியபடி வரலட்சுமியை திட்டி தீர்த்தாள்.
இவ்வளவும் கேட்டுக்கொண்டு இருந்த தீனன் சிலையாகவே மாறி இருந்தான்.
" ராஜா... தீனா... என் கண்ணு அவ போனா போகட்டும்டா... அடுத்த மாசமே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்டா.. அவ கடக்கிறா...ஓடுகாலி.... நீ அதை நினைத்து கவலைப் படாதே " சௌந்தரம்மாள் தன் மகனை தேற்றினாள்.
தீனன் விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருந்தான். அன்னை கூறியது ஏதும் அவன் காதில் விழவில்லை. ஆனால் வரலட்சுமி கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த வார்த்தைகள் "உங்களை எனக்கு பிடிக்கவில்லை" இந்த மூன்று வார்த்தைகள் ஈட்டியாக அவன் நெஞ்சை குத்தியது.
அடுத்த நாள் காலை சொந்த பந்தங்கள் பலர் வந்து சௌந்தரம்மாளிடம், ஓடிப்போன வரலட்சுமியை பற்றி விசாரித்தனர். சில பேர் தீனனிடம் இவ்விஷயத்தை துக்கம் என விசாரித்தனர். சௌந்தரமாளுக்கு பதில் சொல்லி, சொல்லி வாய் வலித்து விட்டது.
மூன்று மாதம் ஓடியது. வரலட்சுமி எங்குதான் சென்றாள் என்று தெரியவில்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தீனதயாளனும் சௌந்தரம்மாளும் விரும்பவில்லை.
ஒரு காலை நேரம், தோட்டத்தில் தீனனும், சௌந்தரம்மாலும், தேங்காயில் இருந்து மட்டை உரித்து கொண்டிருக்கும் சமயம், வீட்டு வாசலில் ஒரு கார் நிற்பதை பார்த்துவிட்டு சௌந்தர் அம்மாள் வாசலுக்கு ஓடிவந்தாள்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, பட்டை நடுவே சந்தனம் கலந்த குங்குமம் பொட்டாக வைத்து, கோல்டு ஃப்ரேம் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு கம்பீரமாக காரிலிருந்து இறங்கினார் சௌந்தரம்மாளின் சின்ன அண்ணன் சம்பந்தம்.
" சௌக்கியமா தங்கச்சி, எங்க தீனன காணோம்" குசலம் விசாரித்தவரை
" வாங்கண்ணே வாங்க, உங்கள எதிர்பார்க்கவில்லை, எவ்வளவு நாளாச்சு உங்கள பாத்து. நல்லா இருக்கீங்களா. அண்ணே அண்ணி நல்லா இருக்காங்களா, பசங்க நல்லா இருக்காங்களா உள்ள வாங்க அண்ணே"
சௌந்தரம்மாள் தன் சின்ன அண்ணன் சம்பந்தத்தை உற்சாகத்தோடு உபசரித்தாள்.
" தீனா யார் வந்து இருக்கா பாருடா... உங்க சின்ன மாமா வந்திருக்கார். சீக்கிரம் வாடா"
தீனனை அவசரமாக அழைத்தாள்.
" வாங்க மாமா நல்லா இருக்கீங்களா"
தீனனின் சம்பிரதாய வார்த்தைகள்.
" நல்லா இருக்கேன்டா. எனக்கு என்னடா குறைச்சல், உன் விஷயம் கேள்விப்பட்டேன். ரொம்ப கவலையா ஆயிடுச்சு"
" அது ஏன் கேக்குற, அந்த சிறுக்கி, ஓடுகாலி, செஞ்ச காரியத்தினால் எம்புள்ள மெழுகாய் உருகிட்டான்"
" விடு சௌந்தரம் சனியன் தொலைந்ததுன்னு நினைச்சுக்கோ. தீனா என் பக்கத்துல வந்து உட்காரு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
தீனன், மரியாதை நிமித்தமாக அவர் பக்கத்தில் அமராமல் அவர் எதிரே தரையில் உட்கார்ந்தான்.
" அது ஒன்னும் இல்லை தீனா, உங்க அம்மாவுக்கு கல்யாணம் கட்டி வைக்கும் போது எங்க அப்பாரு இந்த வீட்ட உங்க அம்மா பெயருக்கு எழுதி வச்சாரு, ஆண்டவன் புண்ணியத்துல நான் இப்போ வசதி வாய்ப்போடு சென்னையில நல்லா இருக்கேன். உனக்கு தெரியுமில்ல விழுப்புரம்- திருவண்ணாமலை பக்க ரூட்டில மாம்பழப்பட்டு என்ற ஊர்ல எனக்கு ஒரு இருபது ஏக்கர் நிலம் இருந்தது. அவ்வளவும் நான் சுயமாக சம்பாதித்தது. போன வாரம் தான் அதுல 17 ஏக்கர் பைசல் பண்ணிட்டேன். மீதி மூன்று ஏக்கர் உன் பேர்ல எழுதிட்டேன். இது நீ என் தங்கச்சி பையன் என்ற அக்கறையில் எழுதினது. அதுமட்டுமல்ல என் தங்கச்சிக்கு அதுக்கு கல்யாணம் ஆன பிறகு நான் பெருசா ஒன்னும் செய்யல. இது என்னுடைய ஒரு சின்ன கைமாறு இந்தா பத்திரம். பத்திரமா வச்சுக்கோ"
சௌந்தரம்மாள் சின்ன அண்ணன் சம்பந்தம் செய்கையை எண்ணி பூரிப்பு அடைந்தாள். அண்ணனுக்கு நன்றி கூறினாள். தன் அண்ணனுக்கு தடபுடலான விருந்து சாப்பாட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள் சௌந்தரம்மாள்.
"அம்மா நான் ஒரு விஷயம் சொன்னா நீ கேட்பியா" தீனன் தன் அன்னையிடம் கேட்டான்.
" சொல்லுடா" சௌந்தரம்மாள் பதிலளித்தாள்.
" இல்ல... கொஞ்ச நாள் எனக்கு சின்ன மாமா எழுதி வச்சாரு இல்ல,அந்த மாம்பழப்பட்டுக்கு போய் அங்க விவசாயம் செய்யலாம்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்ற"
" நீ எது சொன்னாலும் சரிடா ராஜா"
" இல்ல நீ என் கூட வாயேன்"
" எனக்கு அந்த ஊர் எல்லாம் செட்டாகாது நீ மட்டும் போ. உனக்கே முதல்ல அந்த ஊர் பிடிக்குதான்னு பார்க்கலாம்"
" சரி மா ஒரு நல்ல நாளா பாத்து சொல்லு நான் மாம்பழப்பட்டுக்கு கிளம்புறேன்"
" துணைக்கு யாரை கூட்டிட்டு போக போற"
" நம்ம ராமு இல்ல"
" கூட்டிகிட்டு போடா, உன் சினேகித பயலுகல்ல, ராமு தாண்டா ரொம்ப உண்மையானவன்"
" சரிம்மா"
" டேய் தீனா, நீ மாம்பழப்பட்டு போகறதுக்கு முன்னாடி, சம்மந்த மாமா கிட்ட ஒரு போன போட்டு தகவல் சொல்லிடு என்ன"
" கண்டிப்பா அம்மா"
" உனக்கு அந்த ஊர் பிடிக்கலைன்னா, அடுத்த பஸ்லியே, நம்ம ஊருக்கு வந்திடு"
" அப்படி ஆகாதுன்னு நினைக்கிறேன்"
" சரி, சாப்பாட்டுக்கு என்னடா பண்ணுவ"
" ஊருன்னு இருந்தா ஓட்டல் கடை இல்லாமலா போகும்"
" டேய் அது குக்கிராமம் டா"
" சரிம்மா முதல்ல போய் பார்க்கிறேன், அப்புறம் மத்தத பார்த்துக்கலாம்"
" எப்படியோ அந்த ஊர் உனக்கு போகணும்னு உன் தலையில எழுதியிருக்கு, நல்லபடியா போயிட்டு, மாமா பேரை காப்பாத்து என்ன"
" கண்டிப்பா மா".
" மாமா, நான் தீனன் பேசறேன்"
" சொல்லுப்பா தீனா"
" இல்ல, நான் நீங்க எனக்கு எழுதி வச்ச, மாம்பழப்பட்டு நிலத்துல விவசாயம் பண்ணலாம்னு..."
" ரொம்ப சந்தோஷம். நல்லா பண்ணு. பம்பு செட்டு, கிணறு எல்லாம் ரெடியா இருக்கு. தண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல.
உனக்கு கொடுத்த நிலத்துல, ஒரு ஓரமா, ஒரு ஏழை குடும்பம், ஒரு ஓலை குடிசை போட்டு தங்கியிருக்காங்க. அவங்க வயிற்ற கழுவ கொஞ்சம், காய்கறி, பூ வகையறாக்கள் சிலது போட்டிருக்காங்க. மத்தபடி நீ போய் தாராளமா உனக்கு பிடித்த பயிர் வைக்கலாம். இன்னொன்னு, உனக்கு அந்த குடும்பம் அங்க இருக்கிறது பிடிக்கலைன்னா, அவங்கள, அங்கிருந்து காலி பண்ண சொல்ல, உனக்கு முழு அதிகாரம் இருக்கு, நல்லா விவசாயம் செய், எந்த உதவின்னாலும் தயங்காமல் கேளு"
" நல்லது மாமா" தீனன் பதில் அளித்தான்.
தீனனும், ராமுவும் பெட்டி படுக்கையுடன் ஒரு அதிகாலை மாம்பழப்பட்டு வந்தடைந்தனர். பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. பஸ் ஸ்டாப் அருகில் ஒரு டீ கடை இருந்தது. தீனனுக்கு டீ ,காபி சாப்பிடும் பழக்கம் இல்லை. ராமு டீ சாப்பிட்டு ஒரு பீடி பற்ற வைத்தான்.
ராமு டீ கடைக்காரரிடம் " சம்மந்த முதலியார் நிலம் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா"
" பத்த நாள் முன்னாடி கூட இங்க வந்தாரே, ஆமா அவரு தான் எல்லா நிலத்தையும் பக்கத்து ஊர் மல்லிகைபட்டு ரெட்டியாருக்கு வித்துட்டாரே"
" அது எங்களுக்கும் தெரியும், ஆனா ஒரு மூணு ஏக்கர் நிலம் மட்டும் , தோ இவன் பேர்ல எழுதி வச்சிட்டார். இவன் பெயர் தீனன், சம்மந்த முதலியாரோட தங்கச்சி பையன்"
" அப்படியா சங்கதி, கொஞ்சம் பொறுங்க, நம்ம பலராமன் அண்ணன் வந்திடுவாரு, அவருகிட்ட நீங்க என்ன கேட்டாலும் எல்லாத்துக்கும் விவரம் சொல்லுவாரு"
" அவரு யாரு"
" பலராமன் அண்ணன் நிலபத்திரம் , சொத்து பத்திரம் எழுதறதுல கெட்டிக்காரர், இந்த சுத்து வட்டாரத்துல அவரை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது"
" சரி, அவரு தினம் இங்க வருவாரா"
" ஆமாங்க, அவரு உங்கள மாதிரி பீடி பிடிப்பாரு, காலையில தினமும் நம்ம கடையில தான் டீ குடிப்பாரு, அதோ பலராமன் அண்ணனே வந்துட்டாரே"
பரஸ்பரம் ராமுவும், பலராமனும் அறிமுகப்படுத்தி கொண்ட பிறகு, ராமு , தீனனை பலராமனுக்கு அறிமுகப்படுத்தினான்.
" சம்மந்த முதலியாருக்கு அந்ந மல்லிகைபட்டு ரெட்டியாரை காட்டியதே நான் தான். நல்ல மனுசன் சொன்ன மாதிரி கமிஷன் பணத்தை கொடுத்துட்டார். இந்த தீனனுக்கு பத்திரம் பண்ணதும் நான் தான். எல்லா விவரமும் சொன்னாரு, தீனா உனக்கு என்ன உதவின்னாலும் நீ எங்கிட்ட தாராளமா கேளு" பலராமன் சொல்லி கொண்டே அந்த வயக்காட்டின் வழியாக முன்னே செல்ல, தீனனும் ராமுவும் பலராமனை பின் தொடர்ந்தனர்.
இயற்கை அன்னை பச்சை பசேல் என்று ஆடைகட்டி தீனனையும் ராமுவையும் அன்போடு வரவேற்றாள்.
" இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு சார்"
ராமு கேட்க
" அந்த தென்னந்தோப்பு தாண்டியதும், தீனனின் நிலம் தான்" பலராமன் பதில் சொல்ல, ஒரு வழியாக மூவரும் தீனனின் நிலத்தை அடைந்தனர்.
பனி பொழிவு குறைந்து. கதிரவன் உற்சாகத்துடன் எழத்தொடங்கினான்.
தீனன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.
நிலத்தின் முகப்பே அவனுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கியது.
ஆமாம், பல வகையான கனகாம்பரம், மல்லிகைப்பூ வகைகள், சாமந்தி பூ செடிகள், எண்ணற்ற வண்ணங்கள் கொண்ட ரோஜா வகைகள் என்று மலர்கள் பூத்து குலுங்க, அவனுடைய, நிலத்தின் ஆரம்பமே நந்தவனம் போல் காட்சியளிக்க, அங்கிருந்த பூக்கள் எல்லாம் இவனை பார்த்து சிரித்து இருகரம் கூப்பி வரவேற்பது போல் உற்சாகத்தில் மிதந்தான். இந்த பூந்தோட்டத்தை யார் இவ்வளவு அழகாக பராமரிப்பது. அந்த நபரை காண தீனன் மிக ஆவலாக இருந்தான்.
பூந்தோட்டத்தை தாண்டியவுடன் ஒரு சின்ன அழகான ஓலை குடிசை. குடிசையின் வாசலில், ஒரு மூதாட்டி சாணி கரைசலை தெளித்து கொண்டிருந்தாள்.
அந்த மூதாட்டி அருகே பலராமன், தீனனை அவளுக்கு தன் ஆள் காட்டி விரலால் அடையாளம் காண்பித்து, எதற்கு அங்கே வந்துள்ளான் என்பதை சுருங்க சொன்னான். அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் சம்மந்தம் முதலியார் ஏற்கவே தீனனை பற்றிய முழு விவரமும் சொல்லி
விட்டாத கூற, பலராமன் தீனன், ராமுவிடம் தன் கைபேசி எண்ணை கொடுத்த பின் அங்கிருந்து புறபட்டார்.
வாசலுக்கு சாணி தெளித்த கையோட, கோலம் போட்டு முடித்த அந்த மூதாட்டி,
" வாங்க கண்ணுகளா, உள்ள வாங்க"
என்று வாஞ்சையுடன் அழைத்தாள்.
தன் உடைமைகளை அந்த குடிசை வீட்டின் ஒரு ஓரமாக தீனனும், ராமுவும் வைத்தார்கள். " ஏன் நிக்கறீங்க தம்பிகளா, உட்காருங்க" என்று கூறிய மூதாட்டி ஒரு பாயை விரித்தாள்.
" பாக்க, ரொம்ப களைப்பா இருக்கீங்க, காப்பி தண்ணி போடறேன், ரெண்டு பேரும் குடிங்க"
" எனக்கு மட்டும் காபி தாங்க, இவன் காபி குடிக்க மாட்டான்" என்று ராமு சொல்ல
" இந்த காலத்துல இப்படி ஒரு தம்பியா, சரி ரெண்டு பேரும் உங்க காலை கடனை முடிச்சு, அதோ தெரியுதே அந்த பம்பு செட்டுல தண்ணி அருவியா கொட்டும், அதுல போய் குளிச்சிட்டு, தெம்பா வாங்க, நான் அதுகுள்ள, உங்களுக்கு இட்லியும், பொட்டு கடலை சட்னியும் செஞ்சு வச்சுடறேன்"
காலை கடனை முடித்து, மாற்று கைலியுடன் தீனனும், ராமுவும் பம்பு செட்டை நெருங்கும் சமயம், ஒரு பெண்ணின் குரல் காற்றில் பாட்டாக மிதந்து வர,
பம்பு செட்டை நோக்கி
நடந்த இருவரும் சடன் பிரேக் போட்டார்கள். ஒரு பெண் பம்பு செட்டு தொட்டியில் குளிப்பதை அறிந்து கொண்ட இருவரும், ஒரு வெப்ப மரம் முன் மறைந்து நின்றுனர்.
"கிளிய வளர்த்து பூனை கிட்ட
கொடுத்தானே எங்கப்பன்
வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நெனைச்சுட்டானே எங்கப்பன்
தெளிந்த நீரோடைன்னு
நினைச்சு பாழும் கிணத்துல
தள்ளிட்டானே எங்கப்பன்
காட்டாற்று வெள்ளத்திலே
அடிச்சு போன நானு
எப்படியோ யாரு செய்த
புண்ணியமோ
கரை தேர்ந்து தெளிந்தேனே
எங்கப்பன் செய்த
தப்பால தொலைந்த வாழ்க்கை
திரும்ப பெறுவேனா...
"தீனா, பாட்டு சோகமா இருந்தாலும் குரல் சூப்பரா இருக்கு இல்ல" ராமு கூற
" அமான்டா"
" யாரா இருக்கும் இந்த இடத்தில"
" எனக்கு மட்டும் ஜோசியமா தெரியும்"
" கொஞ்சம் கிட்ட போய் பார்க்கலாம்னா, பயமா இருக்கு, தப்பா போயிடுமோன்னு"
" நம்ம இங்க நிக்கறது அந்த பெண்ணுக்கு எப்படி தெரியப்படுத்துவது"
" அதுக்கு எங்கிட்ட ஒரு ஐடியா கைவசம் இருக்கு"
" என்ன அது ஐடியா"
" அந்த பொண்ணு பாடுச்சு இல்ல, இப்ப நீ அதுக்கு ஒரு பதில் பாட்டு பாடு"
" டேய், வம்ப விலை கொடுத்து வாங்கறதா.."
" தீனா... முதல்ல நீ ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கணும், அந்த பொண்ணு குளிக்கிறது உனக்கு சொந்தமான இடம்"
" இதெல்லாம் கிராமத்துல பார்க்க முடியுமா"
" உன்னால பாட முடியுமா, இல்ல நான் பாடவா"
" சரி நானே பாடுறேன்..."
"ஆத்தாடி பாவாடை காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட, நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து..ஊத்து..."
( இது ஒரு சினமா பாட்டு)
குளித்து முடித்து , தொட்டியில் இருந்து எழுந்த மஹாலட்சுமி, பாவாடையை நெஞ்சு வரை உயர்த்தி கட்டி, டவலை தன் இரு தோள்கள் தெரியாமல் போர்த்தி கொண்டு," யாரு அங்க பாடுவது" என்று கேட்டாள்.
" மண்டகப்பட்டு காரங்க" ராமு பதில் அளித்தான்.
" புரியலை"
" அட, என்னமா.. இந்த நிலத்துக்கு சொந்தாரங்க"
" மறைச்சு நின்னு ஏன் பாடணும், என் எதிரே பாடலாமே"
" நீ... நீங்க குளிச்சிட்டிங்களா" ராமு கேட்க
" ம்ம்ம்... வரலாம் ..வரலாம் வாங்க" மஹாலட்சுமி தைரியமாக சொன்னாள்.
" ராமு, நீ முன்னாடி போடா, நான் பின்னாடி வரேன்" தீனன் சொல்ல
" ஏன்டா"
" நீ முன்னால போடா... சொல்றேன் இல்ல.."
" ஏன் நீ பாடின பாட்டு அந்த பொண்ணுக்கு பிடிக்காம ஏடா கூடமா ஏதாவது கேட்பாண்ணு பயப்படுறியா"
" நீ முன்னால போடாண்ணா போயேண்டா.."
" போய் தொலைக்கிறேன்"
"வாங்க மண்டகப்பட்டு காரரே, பாட்டு நல்லாவே பாடுரீங்க" மஹா ராமுவை பார்த்து கூற,
" நானும், மண்டகப்பட்டு தான், ஆனா நான் பாட்டு பாடல, நான் இந்த நிலத்துக்கு சொந்தகாரனும் இல்ல"
" அப்போ, அந்த பாட்டு பாடியது யாரு"
" டேய், தீனா வாயேன்டா.. வந்து உன் திருமுகத்தை காண்பியேன்டா"
தீனன், நிதானமாக நடந்து வந்து அவள் முன் தலை குனிந்து நின்றான்.
" ஏன் உங்க நண்பர் ஏதும் பேச மாட்டாரா"
மஹா கேட்க,
" இல்ல, ஒரு வித கூச்சம் தான்"
ராமு கூறினான்.
மஹாலட்சுமி தீனனின் உடல் மொழியை பார்த்து கடகட வென சிரித்து விட்டாள்.
" நான், தான் கிழவியோட பேத்தி, நீங்க குளிங்க..."
என்று கூறியவள் அங்கிருந்து கிளம்பியவள்,
நான்கு அடி எடுத்து வைத்தவள், திரும்பி பார்த்தாள், தீனன் அவளையே பார்த்து கொண்டிருக்க, பார்வைகள் ஒரு நோடிக்கு மேல் சங்கமிக்க, தீனன் ஏனோ மீண்டும் தலை குனிந்து கொள்ள, அவள் பூரிப்புடன் சிரித்து கொண்டே சிட்டாக குடிசையை நோக்கி ஓடினாள்.
மூதாட்டி பூக்களைப் பறித்து கொண்டிருக்க,
குளித்து முடித்த ராமுவும், தீனனும் டிபன் சாப்பிட தயார் ஆனார்கள்.
" உள்ள போங்க கண்ணுகளா, மஹா உங்களுக்கு இட்லி பரிமாறுவா" மூதாட்டி கூற, தீனனும் ராமுவம் குடிசைக்குள் நுழைந்தனர்.
பாயை நான்காக மடித்து போட்ட மஹா,
" உட்காருங்க, இட்லி கொண்டு வரேன்"
ரெண்டு பேருக்கும் எதிரே டிபன் சாப்பிடும் அளவுக்கு வாழை இலை போட்டு, அதில் மல்லிகை பூ என இட்லி வைத்தாள். பொட்டு கடலை சட்னி இட்லியின் தலை மேல் ஊற்றினாள்.
ராமுவுக்கு ஏக பசியான்னு தெரியவில்லை, மின்னல் வேகத்தில் ஐந்து இட்லியை சட்னியுடன் கலந்தடித்தான். இலை காலியானதை பார்த்த மஹா, மீண்டும் ராமுவின் இலையில் ஐந்து இட்லி வைத்து சட்னி அதன் மேல் நிறையவே ஊற்றினாள்.
தீனன் மிக பொறுமையாக சுவைத்து இட்லியை சாப்பிட்டான்.
" மஹா, இந்த மாதிரி இட்லி சட்னி என் வாழ்நாள்ல சாப்பிட்டது இல்ல, அதுவும் இந்த பொட்டுகடலை சட்னி, ஆஹா பிரமாதம்" ராமு புகழ்ந்து தள்ளினான்.
" நீங்க சொல்றீங்க, உங்க நண்பர் ஒன்னுமே சொல்லலியே"
தலையை குனிந்து இட்லியை சுவைத்து சாப்பிட்டு கொண்டிருந்த தீனன் மஹாவின் கண்களை நேராக பார்த்து
" இட்லி சட்னி மட்டும் பிரமாதம் இல்ல, நீங்க பரிமாறிய விதமும் அருமை" என்றான்
மஹாவுக்கு தீனனின் உண்மையான பாராட்டு அவள் உடலேங்கும் சந்தோஷ ரேகை பரவ காரணமாக இருந்தது.
மிக பெரிய ஏப்பம் விட்டபடி ராமு சாப்பிட்டு எழுந்தான்.
தீனன் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை.
சாப்பிட்டு கொண்டிருந்த தீனன் எதார்த்தமாக தலை நிமிர, மஹா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்பதை பார்த்து, அவனும் அவளையே பார்த்தான். இம்முறை கிட்டதட்ட இவர்களின் பார்வைகளின் பரிமாற்றம் ஒரு நிமிடம் நீடித்தது.
மூதாட்டி உள்ளே வர, இருவரும் பார்வையின் அலைவரிசையை தற்காலிகமாக துண்டித்தனர்.
" மஹா உனக்காக இரண்டு பெண்டுக காத்துகிடக்கு, நீ இன்னைக்கு அவங்க கூட மல்லாட்டை புடுங்க போற இல்ல"
" ஆமாம் கிழவி, இதோ கிளம்பிட்டேன்"
" மத்தியானம் சோத்துக்கு என்ன செய்வடி"
" அங்கே களியும், கருவாடு கொழம்பும் கொடுப்பாங்க, அது அந்த நேர பசிக்கு தேவாமிர்தம் கிழவி"
" சாயந்திரம் நேரம் கடத்தாம சுருக்கா வந்திடு என்ன"
" சரி கிழவி, நான் போயிட்டு வரேன்" என்று மஹா கூறிகொண்டே ரேஸ் குதிரை போல் துள்ளி ஓடிய படியே, திரும்பி இன்னோரு முறை தீனனை பார்த்தவாறு குதூகலத்துடன் " கிழவி நான் போயிட்டு வரேன் " என்றாள்.
ராமு, தீனனின் தோள் மீது கைபோட்டு அவனை வெகு தூரம் அழைத்து சென்று
ஒரு நிழல் தரும் மரத்தடியில் நின்று
தீனனை பார்த்து" என்னடா, பசுமை புரட்சி செய்வேன்னு பார்த்தா, காதல் புரட்சி பண்ணுவ போல"
" நீ என்ன சொல்ற ராமு"
" டேய் எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன்"
" என்ன அப்படி பெருசா பார்த்துட்ட"
" இப்படி தாண்டா மனசு அலையும், நாம தான் கட்டுப்படுத்தணும்"
" நீ என்ன சொல்ல வர"
" சும்ம நடிக்காதடா, அந்த அரேபிய குதிரை மஹா உன்னை பாக்கறதும், நீ அவளை விழுங்கிட மாதிரி பார்க்கறதும், இது எங்க போய் முடியுமோ தெரியலையே"
" டேய் நீ ரொம்ப கற்பனை பன்ற"
" தீனா, மனச தொட்டு சொல்ல, அந்த மஹா மேல உனக்கு ஒரு கிக் இல்ல"
" ............."
" தம்பியாரே, பத்தியா மெளனம் சாதிக்கிற, எவ்வளவு டாவு கதை நம்ம கிராமத்துல பாத்திருக்கேன்"
" ஆமாம், மஹாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
" அப்படி போடு அருவாள, தீனா இதெல்லாம் உனக்கு சரிவருமா, நீ யாரு, உங்க மாமா யாரு, எவ்வளவு கெளரவமான குடும்பம், உனக்கு நான் துணையா வந்தது விவசாயம் பண்ண, கடைசியில உன் காதலுக்கு நானும் காரணம்னு எனக்கு கெட்ட பெயர் சம்பாரிச்சு கொடுத்துதிடுவ போல இருக்கே"
" நீ ரொம்ப யோசிக்கிற"
" டேய், யோசிக்காம என்ன செய்ய சொல்ற, அந்த கிழவி யாரு, அந்த பொண்ணு மஹா யாரு, எந்த ஊரு, அட சாதி விடுப்பா.. வழி , வாய்க்கா... எதுவுமே தெரியாம, இவரு அந்த பொண்ண டாவு கட்டுவாராம், இதெல்லாம் நம்ம மாதிரி குடும்பத்துக்கு செட் ஆகாது தீனா"
" சரி, எனக்கு எல்லா விதத்துலேயும் செட் ஆகுமுன்னு தானே, என் மூத்த மாமன் பொண்ணு வரலட்சுமிய என் தலையில கட்டினாங்க, இப்ப என்ன ஆச்சு, அவ என்ன விட்டு ஓடியே போயிட்டா... இதுக்கு உன் பதில் என்னடா"
" டேய் வரலட்சுமி சமாச்சாரம் முடிஞ்சு போன விஷயம். அதை சுத்தமா மறந்திடு.
நீ இப்போ புதிய மனுசன். உனக்கு அந்த மஹா பத்தி ஏதாவது தெரியுமா"
" டேய் உன்னை அடிச்சுடுவேன், வந்ததிலிருந்து, உன் கூடவே தானே இருக்கேன், அப்ப எனக்கு மட்டும் அவ கதை எப்படி தெரியும், அறிவு கொழுந்துடா நீ"
" சரி, என் கூடவே தான் இருந்த, ஆனா அவ போட்ட தூண்டியல்ல மீனா சிக்கிட்டியே"
" கவலை படாதே ராமு, எல்லாம் நல்லதுக்கே"
" நீ சொல்ற, சம்மந்த மாமா உன்னை சொக்க தங்கம்னு நினைக்கிறார், நீ பித்தளைன்னு பல்ல இளிச்சிடாதே"
" என் ராமு இருக்க எனக்கு என்ன பயம்"
" டேய் ராஸ்கோல் எனக்கு பொறுப்ப அதிகமாக்குறியே, அது சரி தீனா இன்னைக்கு ராத்திரி எங்க நம்ம இரண்டு பேரும் தூங்கறது."
" குடிசை வாசல்ல, படுத்துக்குவோம்"
" டேய், பனி பிச்சு உதரிடும், குளிர் அள்ளிடும், அப்புறம் உடம்பு கெட்டு போயிடும்"
" அப்ப, குடிசை உள்ள, அது சரி வருமா"
" அது பெரிய அரண்மனை பாரு, நம்ம படுக்க இடம் இருக்காது, அப்படியே அட்ஜஸ்ட் பண்ணி படித்தோம்னா, ......"
" ஏன்டா அப்படி பார்க்கிற"
" இவரு குழந்தை வாய்ல விரல் வச்சா சப்ப தெரியாது பாரு"
" நான் அவ்வளவு நாகரீகம் இல்லாதவன்னு நினைச்சியா, என்ன அவ்வளவு தான் நீ என்ன புரிஞ்சிகிட்ட இல்ல"
" தம்பியாரே, ஏற்கனவே கண்ணால கனெக்சன் ஆயிடுச்சு, இந்த விஷயத்துல யாரையும் நம்ம முடியாது"
" அப்ப என்ன செய்யலாம்"
" இது சரியான கேள்வி, பலராமன் அண்ணன் நம்பருக்கு போன் போட்டு அந்த குடிசை பக்கதுலேயே ஒரு சின்ன ஓலை குடிசை புதுசா கட்ட மூங்கிள், கயிறு, தென்னங்கீற்று ஓலையோட, உடனே ஆட்களை அனுப்ப சொல்லு"
" நல்ல ஐடியா"
" தாமதிக்காம போனை உடனே போடு"
பகல் பதினோரு மணிக்கு ஆரம்பித்த குடிசை அமைக்கும் பணி ஆட்கள் அதிகம் பேர் வேலை செய்ததால் மாலை ஆறுமணிக்கெல்லாம் ஒரு ஆழகான சின்ன குடிசை வீடு ரெடி ஆனது.
மதிய சாப்பாடு மூதாட்டி எவ்வளவு வற்புறுத்துயும், தீனனும், ராமுவும் தங்களின் குடிசை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தியதால் வேண்டாமென்று கூறிவிட்டார்கள்.
தீ பந்துபோல் இருந்த பகலவன் அதோ அந்த புதருக்குள் கொஞ்சம், கொஞ்சமாக ஒளிந்து கொண்டு திருடன், போலீஸ் விளையாட்டு விளையாட தயார் ஆனான். பெண் காவல் ஆய்வாளர் நிலவு மகள் வானிலிருந்து , தன் நட்சத்திர கான்ஸ்டபிள்கள் உடன் மறைந்து கொண்ட பகலவனை தேடுதல் வேட்டையை தொடங்கினாள்.
அந்திவானம் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ள, கீழ்வானம் சிவந்து விழாக்கோலம் பூண்டது.
பறவைகள் தன் கூடு தேடி வந்தன.
காலையிலிருந்து மாலை வரை குடிசை கட்டும் பணியில் தீவரம் காட்டிய தீனனும், ராமுவும் முகம், கை, கால் கழுவி பின் வேறு உடை அணிந்து , புதிய குடிசைக்கு முன்னால் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
மின்னல்போல் அந்த இடத்துக்கு தன் வேலை முடித்து வந்த மஹா, மிக ஆச்சரியமுடன் அந்த புதிய ஓலை குடிசை பார்த்தாள்.
" கிழவி, இவங்களுக்கு காபி தண்ணி போட்டு கொடுத்தியா" என்று கேட்டு கொண்டே தீனனை பார்த்து புன்னகைத்தாள். கண்களா அல்லது காந்தமா. இவளை பார்க்கும் போது மனசுக்குள் மத்தாப்பு கொளுத்துது. நெஞ்சமெல்லாம் இனிக்குது. சேற்றில் பிறந்த செந்தாமரை. என் பூலோக ரம்பை. ஆஹா! அழகு இவளிடம் கொட்டிக் கிடக்கிறது.
"டேய் ராமு, அவள் பார்வை ஒன்று போதுமே, என்னை கவுத்துட்டாடா.. மனசுக்குள் தீனன் சொல்லி கொண்டான்.
" ராமு தம்பி மட்டும் காபி கொடுத்தேன், தீனன் தம்பி காபி தண்ணி குடிக்கிற பழக்கம் இல்லியாமே" கிழவி மஹாவுக்கு பதிலளித்தாள்.
" ஜவ்வரிசி பால் பாயாசம் போட்டு தரவா" தீனனை நேரடியாகவே கேட்டாள்.
" ............."
" பதில் சொல்லுங்க"
" எதுக்கு உங்களுக்கு சிரமம்"
" உங்களுக்கு பாயாசம் பிடிக்குமா"
" பிடிக்கும்"
" இதோ பத்தே நிமிஷத்துல பாயாசம் ரெடி பன்றேன்"
" மஹா, அப்படியே பாயாசத்தில காய்ந்த திராட்சை போட்டிரு" ராமு சொன்னான்.
" உலர்ந்த திராட்சை மட்டும் அல்ல, ஏலக்காயும் உண்டு அண்ணா" என்று ராமுவுக்கு மஹா பதில் சொன்னாள்.
சில நிமிடங்களில் பால் பாயாசம் ரெடி.
ஒரு தட்டியில் இரண்டு டம்பளிரில் ஜவ்வரிசி பால் பாயாசம் தீனனுக்கும், ராமுவுக்கும் பரிமாறினாள் மஹா.
ருசி குறித்து என்ன சொல்ல போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்தாள் மஹா.
" தங்கச்சி, இது மாதிரி பாயாசம் என் வாழ்நாளில் சத்தியமா டேஸ்ட் பண்ணதில்ல. இது பாயாசம் இல்ல அமிர்தம்." ராமு புகழ்ந்து தள்ளினான்.
தீனன் மஹாவின் கண்களை தைரியமாக பார்த்து இது பாயாசம் இல்லை பார்புகழும் மணிமேகலை வழங்கிய அள்ள, அள்ள குறையாது கொடுக்கும் சுவைமிகு அமுதசுரபி என்றான்.
தீனன் பாராட்டு மஹாவை வானில் பறக்க செய்தது. குடிசைக்குள் சென்ற மஹா
"ராத்திரிக்கு என்ன செய்ய கிழவி".
" சாதம் வடிச்சுடு, நேத்து வச்ச கருவாடு குழம்பு இருக்கு"
" சரி அவங்கல ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்"
குடிசையை விட்டு வெளியே வந்த மஹா
" ராமு அண்ணா, ராத்திரிக்கு சாதம், கருவாடு குழம்பு போதுமா"
" தாராளமா போதும். வெல்லாதி வெள்ளம். கருவாடு கொழம்பா, ஜமாய்ச்சுடலாம்" ராமு உற்சாகத்துடன் பதில் அளித்தான்.
உதட்ரோர புன்னைகையை தீனன் மீது வீசிய மஹா இரவு சமையலுக்கு தயார் ஆனாள்.
புது இடம் என்பதால், தீனனுக்கு உறக்கம் வரவில்லை. ராமு அடித்து போட்ட மாதிரி நல்ல குறட்டைவிட்டு தூங்கிவிட்டான். தீனன் செல் போனில் மணியை பார்த்த போது இரவு சரியாக மணி ஒன்று.
தூக்கம் வராததால், குடிசைக்கு வெளியே உள்ள கயிற்று கட்டிலில் கைலியை இடுப்புவரை கட்டியவன், சட்டைக்கு பதில் கைவைத்த வெள்ளை பனியன் அணிந்திருந்தான். பனி பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானில் நிலவு மிக அழகாக மேகத்தின் வூடே புகுந்து, புகுந்து கண்ணாமூச்சு ஆட்டம் விளையாடியது. சுவற்று கோழி சத்தம் தவிர்த்து அப்படி ஒரு நிசப்தம். ஏங்கோ ஒரு நரி ஊளை இடுவது சில சமயம் கேட்க செய்தது. சில்லென்ற பனி காற்று வீசியது. தீனன் அந்த ஒரு ரம்மியமான சூழ்நிலையை ரசித்துயிருந்த சமயம், தன் குடிசையில் இருந்து வெளியே வந்தாள் மஹா. வெளியே வந்தவள் தீனனை பார்த்த பின் குடிசைகுள் செல்ல முயன்றவளை, அவள் எதற்காக வந்திருப்பாள் என்று புரிந்து கொண்டவன், நான் என் குடிசைக்குள் போறேன், நீங்க உங்க வேலைய பாருங்க என்று தன்னுடைய புது குடிசைகுள் புகுந்து கதவை மூடினான்.
தன் உடல் உபாதையை முடித்த மஹா தன் குடிசைக்குள் போகாமல் கயிற்று கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.
" பாவம் எதுக்காக வெளியே உட்கார்ந்தாரோ, நாம அவருடைய தனிமையை கெடுத்துட்டோம்" என்று வாய் விட்டு சொன்னவள், மிக தைரியமாக," நான் உள்ளே போறேன், நீங்க வெளிய வாங்க " என்றாள் தீனன் காதில் விழும்படி.
" கதவை திறந்து வெளியே வந்த தீனன், ஒரு நிமிஷம் மஹாலட்சுமி" என்றான்.
தீனன் திருவாயில் இருந்த தன் பெயர் முதல் முறையாக ஒலித்தவுடன் தன் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உணர்ந்தாள் மஹா. இதயத்தை பூக்களால் வருடிய சுகம்.
தீனன் சொல்லுக்கு கட்டுபட்டு சிலையாக அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்.
தீனன், மஹா அருகே வந்து அமர்ந்தான்.
பனி பொழிவு இருவர் உடலையும் நடுங்க வைத்தது. நான்கு கண்களும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் காதலை பொழிந்து தள்ளியது.
மாநிறத்து அழகின் மாநாடு
என்னெதிரே
தேவதை கூட்டத்து தலைவி
என்னெதிரே
வானத்து வெண்ணிலவு கால்
முளைத்து
தரையில் என்னெதிரே
கானகத்து சொப்பன சுந்தரி
கயிற்று கட்டிலில் என்னெதிரே
தாமரை முகத்தாள் தடாகத்தில்
எழுந்து வந்து தயக்கமுடன் என்னெதிரே
"கவிஞரே போதும்... நான் உங்கள் கவிதைக்கு தகுதி ஆனவளா"
" கண்டிப்பாக மஹா, நான் வாழ்நாளில் பார்த்தவுடன் எனக்கு படித்த முதல் பெண் நீ தான்"
என்று மஹாவின் கரம் பிடித்தான் தீனன்.
தீனன் கரம் பிடித்தவுடன் மஹாவின் உடலேங்கும் மின்சாரம் பாய்ந்தது.
ஆனந்த பிரவாகம் உடலேங்கும் ஓடியது.
" மஹா நான் உன்னை விரும்புகிறேன்"
தீனன் சொல்ல
" இந்த வார்த்தை மஹாவின் காதில் விழுந்தவுடன், அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. அவள் உயிர் ஒரு நொடி போய் வந்தது போல் உணர்ந்தாள்.
" ஏன் கண் கலங்கற"
" .............."
" மஹா....."
"............."
" ஏன் என்ன பிடிக்கலையா..."
" எனக்கு இந்த உலகத்துல உங்கள மட்டும் தான் பிடிக்கும்"
என் உயிரில் கலந்துவிட்ட உறவே. மனதிற்குள் தீனன்.
" பின்ன ஏன் கண் கலங்கற"
" என்னை பத்தி முழுசா தெரியாம, நீங்க ஆசைய உங்க மனசுல வளர்த்துடீங்க"
" அது என்ன பெரிய புராணம், உன்னை பற்றி"
" .........."
" சொல்லு மஹா.. அது என்ன உன் வரலாறு"
" எனக்கு தாய் கிடையாது, தகப்பன் மட்டும் தான். என்னை வளர்த்தது எல்லாம், இந்த கிழவி தான். இது எங்கம்மாவோட அம்மா.
நான் பத்தாம் வகுப்பு பெயில் ஆகிட்டேன். அதுக்கு மேல படிக்கல. கிழவி கூட கழனி வேலைக்கு போய் கழனி காட்டு வேலையை நல்லா கத்துகினேன். பதினெட்டு வயசுல, எனக்கு திருமணம் ஆச்சு. மாப்பிள்ளை அப்பாவுக்கு தூரத்து சொந்தம். அவன் ஒரு லாரி டிரைவர். நானும் , அவனும் விழுப்புரத்துல தான் எங்க திருமண வாழ்க்கையை ஆரம்பிச்சோம். மாசம் பத்து நாள் தான் எங்கூட விட்ல இருப்பான். நிறைய குடிப்பான். குடிச்சிட்டு காரணமே இல்லாம நிறைய அடிப்பான். ஒரு நாள் காலையில ஒரு மலையாள பொம்பளயை கூட்டியாந்து இவ தான் என் முதல் சம்சாரம்னு சொன்னான். அது மட்டும் இல்ல, இரண்டு குழந்தைங்க வேற இருக்கிறது என்றான். வாழ்க்கையில ஏமாந்துட்டேன்னு அழகை, அழகையாக வந்துச்சு. என்ன பண்றது எனக்கு தெரியில . கிழவிகிட்ட சொன்னேன். அவளும் எனக்கு மேல அழுதா தீர்த்தா. சரி தலை எழுத்துன்னு அந்த மலையாள பொம்பள, குழந்தைங்க கூட ஆறு மாதம் ஒன்னா அந்த நாயோட குடும்பம் நடத்தினன். அவன் திருந்தல, குடி, சிகரெட், கஞ்சா ,
சூதுன்னு எல்லா கெட்ட பழக்கத்துக்கும் அடிமை ஆயிட்டான். ஒரு நாள் மயக்கம் போட்டு வீட்ல விழுந்தான். பரிதாபபட்டு ஆஸ்பிடல் கூட்டிட்டு போனோம், மஞ்சள் காமாலை முத்திடுச்சு, ஆள் தேர மாட்டான்னு டாக்டர் சொல்லட்டாரு. ஒரு நாள் செத்து போயிட்டான். அவன் செத்த சில நாட்கள்ள என் அப்பாவும் மேல போயிட்டார்.
அப்புறம்...... தனிமரமா நின்ன எனக்கு திரும்பவும் கிழவி தான் ஆதரவு."
ஒரு மிக பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக நினைத்தாள் மஹா.
சில நிமிடங்கள் அவளையே பார்த்த தீனன்" மஹா உன் வாழ்க்கையில இவ்வளவு சோகமா, நம்பவே முடியில, ஆனா இனி உன் வாழ்க்கையில் வசந்தம் தான். நீ என்னை ஏத்துகிற பட்சத்தில்"
" நீங்க தான் என்னை ஏத்துக்கனும், உங்கள நான் ஏத்துக்கனுமா"
" என்னை பற்றி உனக்கு..."
" உங்க மாமா எல்லாமே கிழவிகிட்ட சொல்ல நான் கேட்டேன், அந்த பொண்ணு எடுத்த முடிவு சரியா, தவறான்னு சொல்ற இடத்துல நான் இல்ல, அறியாத வயசுல அவரத்துல ஆழமா சிந்திக்காம அவ எடுத்த முடிவு, அவ நிலையில் இருந்து பார்த்தா அது சரின்னு கூட படலாம், கூட்டத்தோட கூட்டமா உங்க நிலையில் இருந்து பார்க்கும் போது அது தவறு, உங்களுக்கு பண்ண துரோகம். மறப்பது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம். என் தீனன் எப்பவுமே எனக்கு தெய்வம்.
மீண்டும் நான்கு கண்களும் சங்கமிக்க, கரங்கங்கள் உரிமையுடன் கோர்த்து கொள்ள, தீனன் ஆண் மகனாக அவளை வாரி தன்னுடன் அணைத்து கொண்டான்.
"விடிய போகுது, போய் தூங்கலாமா"
" தூங்கலாமே"
" அப்ப என்னை விடுங்க"
" ஏன்"
" இப்படி கட்டிபிடிச்சா எப்படி போய் தூங்கிறது"
விலக மனமில்லாமல் இருவரும் விலகினர்.
தூங்கிக்கொண்டிருந்த தீனனை, ராமு தன் கால்களால் எட்டி உதைத்தாள்.
நல்ல தூக்கத்தில் இருந்த தீனன் விழித்துக்கொண்டான்." ஏண்டா தூக்கத்தை கெடுக்கிற" தீனன் ராமுவை பார்த்து கேட்க,
" ஹலோ தம்பியாரே, மணி இப்போ எவ்ளோ தெரியுமா காலை ஒன்பது"
" உண்மையாவா சொல்ற"
" சொல்ல மாட்ட, சரி உங்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியதா"
" நீ என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல"
" எப்படிடா புரியும் நீ மிதப்பில் இருக்கிற"
" சுத்தி வளச்சி பேசாதடா"
" எல்லாம் பார்த்தேன். விடிய, விடிய நீயும் அந்த அரேபிய குதிரையும் அடிச்ச லூட்டிய"
" பாத்தியாடா"
" பின்ன பாக்காம, அப்படி என்னடா பனியில லவ்வு, மனுஷன் இங்கே ரெண்டு மணியிலிருந்து ஒன்னுக்கு முட்டிக்குன, தவியா தவிச்சு உடல் உபாதையை வெளியேற்றலாம்ன்னு, வெளியில வந்து பார்த்தா அசராம லவ் பண்றீங்க"
" கடைசில போனியா, இல்லையா"
" பார்த்தேன். நீங்க முடிக்கிற மாதிரி தெரியல, உங்க ரெண்டு பேரை தாண்டி தான்டா நடந்து போனேன், எங்க....
நீங்க பண்ற லவ்ஸ்ல, உங்களுக்கு சுனாமி வந்தா கூட தெரியாது போல"
" மன்னிச்சுக்க ராமு"
" சரி ஒப்பந்தம் கையெழுத்து ஆச்சா"
" ஆமாடா நான், முடிவு பண்ணிட்டேன். மஹா தான் என் எதிர்காலம்"
" சரி இந்த விவசாயம், இந்த மூனு ஏக்கர் நிலம், சம்பந்தம் மாமா, எல்லாம் ஞாபகம் இருக்கா"
" பாத்தியா, சமயம் பார்த்து காலை வார"
" அப்ப அந்த மூணு ஏக்கர்ல என்னடா பண்ணப் போற"
" ராமு நீயே ஒரு நல்ல யோசனை சொல்லு"
" எனக்கு ஒன்னும் தோணலடா, காரணம் இந்த ஊரோட மண் வளம் பற்றி நாம இன்னும் தெரிஞ்சுகில்ல"
ராமுவக்கு காபியும், தீனனுக்கு பாலும் கொண்டு வந்த மஹா, இவர்கள் இருவரும் பேசி கொண்டிந்ததை கேட்டு,
" உங்க விவாத்துல நானும் கலந்துக்கலாமா"
தீனன் மஹாவை ஆச்சரியமுடன் பார்த்தான்.
" தாராளமா தங்கச்சி" ராமு சம்மதிக்க
" அண்ணா, மூனு ஏக்கர்ல , ரெண்டரை ஏக்கர்ல கரும்பு போடலாம், கரும்பு இந்த மண்ணுக்கு தகுந்த பயிர். ஒரே ஒரு வருஷத்தில கைமேல பலன் தரும். எனக்கு கரும்பு சாகுபடியில் நல்ல அனுபவம் இருக்கு. பாரம்பரிய முறைப்படி செய்ற கரும்பு சாகுபடி பற்றியும் தெரியும். இப்ப நவீனமா பண்ற கரும்பு சாகுபடியும் தெரியும். கரும்பு சாகுபடிக்கு முதல் மூணு மாசம் கஷ்டப்பட்டு உழைத்தா, ஒரு வருஷத்துல, இந்த ரெண்டர ஏக்கர் நிலத்துல, கண்டிப்பா 70 டன்னிலிருந்து 80 டன் வரை கரும்பு கிடைக்கும். இப்படி ஒரு நல்ல மகசூல் வேற எந்த பயிர்லயும் கிடைக்காது. உங்களுக்கு தெரிந்த கரும்பாலை அதிகாரிங்க கிட்ட தொடர்பை ஏற்படுத்தி இந்த மாதிரி நாங்க ரெண்டரை ஏக்கரில் கரும்பு வைக்கப் போறோம் அப்படின்னு சொன்னா அவங்க அதற்கான உரம், மருந்து எல்லாம் நமக்கு தருவாங்க. சாகுபடி செய்த கரும்பு அவங்களே நல்ல விலைக்கு எடுத்துப்பாங்க. நம்ப கரும்பு விளைவிக்கும் போது கரும்பு ஆலையில் இருந்தும் சில அதிகாரிகள் வந்து நமக்கு சில நல்ல,நல்ல ஆலோசனை கொடுப்பாங்க. ஆனா கரும்பு பயிருக்கு தண்ணி ரொம்ப முக்கியம். அதுவும் சொட்டுநீர் பாசன வசதி பண்ணா அதுவே கரும்பு சாகுபடிக்கு சால சிறந்தது"
" அப்புறம் என்ன தங்கச்சி ஒரு
" வீடும் வயலும்" கிளாஸ் எடுத்துட்ட,
டேய் தீனா மஹா உனக்கு எதிர்கால மனைவி மட்டும் இல்லடா, நீ செய்யப் போகும் விவசாயத்துக்கும் அவளே எஜமானி, அவ தான் இனி உன் வீட்டு மஹாலட்சுமி"
" போங்கண்ணா என்ன ரொம்ப புகழாதீங்க, ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன்"
தீனனையும், மஹாவையும் பக்கத்து பக்கத்தில் உட்காரச் சொன்னாள் ராமு.
"நான் சொல்றத நல்லா கேட்டுக்குங்க, இன்னும் ஒரு வாரத்துல மஹா நீ சொன்ன மாதிரி கரும்பு போட்டுவிடலாம். இன்றிலிருந்து மூணாவது மாசம் தை. பொங்கல் கழிச்ச கையோட, தீனன்
அம்மா சௌந்தரம்மாள் அனுமதியோடு சம்பந்தம் மாமா தலைமையில் உங்க ரெண்டு பேருக்கும் டும் டும் டும் டும். சௌந்தரம்மாவை சம்மதிக்க வைக்கிறது என்னோட வேலை. ரெண்டு பேருக்கும் சந்தோஷமா"
தீனனும், மஹாவும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
- பாலு.