பெற்றோரின் மகிமை
இரண்டாம் வகுப்பு ஆசிரியர் வேதபுரி தன் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தார் "அன்னை, அம்மா, தாய் இந்த வார்த்தைகள் அனைத்தும் நடமாடும் தெய்வமான தாயாரை குறிக்கிறது. தந்தை, அப்பா, இந்த இரு வார்த்தைகளும் ஒருவரின் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக விளங்கும் தந்தையரை குறிக்கிறது. நமது வாழ்க்கையின் இரு கண்களை போன்றவர்கள் நம்மை ஈன்றெடுத்து நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் நம் அருமை பெற்றோர்கள். இதை நீங்கள் அனைவரும் ஒப்பு கொள்வீர்கள் தானே?
மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் " ஆமாம் சார்" என்று ஆசிரியரின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டனர் , ஒரே ஒரு மாணவனை தவிர. அந்த மாணவன் எதுவுமே அவன் காதில் விழாதது போல் அமைதியாக இருந்தான். வேதபுரி அந்த மாணவனை பார்த்து கேட்டார் " மணி வண்ணா, நான் சொல்வதை உன்னால் ஏற்று கொள்ள முடியவில்லையா?. மணிவண்ணன் எழுந்து நின்றான். அனைத்து மாணவர்களும் அவனையே உற்று நோக்கினார்கள். அவன் சொன்னான் " சார், எனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. நான் எப்படி கூற இயலும், பெற்றோர்கள் நமக்கு தெய்வம் போல என்று" ஆசிரியர் உட்பட வகுப்பில் அனைவரும் மணிவண்ணனை அனுதாபத்துடன் நோக்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வேதபுரி அவரது வகுப்பில் தாய் தந்தையரின் புகழ் படுவதை நிறுத்தி கொண்டார். தன் வகுப்பில் ஒரு அனாதை மாணவன் இருந்தாலும் கூட , இப்படி பட்ட வார்த்தைகள் அந்த மாணவனின் மனநிலையை பாதிக்கும் என்று அவர் நினைத்தார்.
உணவு இடைவெளியில் அவர் மணிவண்ணனை தன் அறைக்கு அழைத்து அவனுடன் பேசினார். மணி வண்ணன் சிறு வயதிலிருந்தே ஒரு அனாதை விடுதியில் இருக்கிறான் என்பதை அறிந்தார். அனாதை விடுதியின் பொருளாதார பற்றாக்குறை காரணமாக இரவு ஒரு வேளை மட்டுமே அவனுக்கு உணவு கிடைக்கிறது என்பதை அறிந்தார். மதியம் பள்ளியில் அரசாங்கம் வழங்கும் உணவு கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் மணிவண்ணன் வாரத்தில் இரண்டு நாட்கள் வெளியில் சென்று எவர் வீட்டிலாவது அவனால் முடிந்த வேலைகள் செய்து கிடைக்கு பணத்தை அனாதை விடுதிக்கு கொடுத்து வருகிறான் என்பதும் தெரிந்தது. எப்படி பட்ட வேலைகளை நீ செய்கிறாய் அன்று வேதபுரி கேட்டதற்கு " வீட்டை பெருக்கி, தண்ணீரால் சுத்தம் செய்தல், ஒட்டடை அடித்தல், பழைய சாமான்களை அப்புறப்படுத்துதல், தோட்டத்தில் மரம், செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், இரண்டு நான்கு சக்கர வாகனங்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்தல், சிறு குழந்தைகளை கவனித்து கொள்ளுதல், இப்படி பலதரப்பட்ட வேலைகளை செய்து வருகிறேன் சார்" என்றான் மணி வண்ணன். வேதபுரி சொன்னார் " மணி வண்ணா, உனக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். என்னுடைய ஒரே மகளை நான் ஒரு அனாதை விடுதியிலிருந்துதான் எடுத்து வந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் சொன்ன பிறகு நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்." இதை கேட்டு மணிவண்ணன் திகைத்து போனான். வேதபுரி தொடர்ந்தார் " மாலதி என்வீட்டுக்கு வருகையில் இரண்டு வயது. இப்போது ஐந்து வயது குழந்தை. அவளுக்கு தான் அனாதை என்பது இன்னும் தெரியாது, நாங்கள் அவளை இரண்டு வயதிலேயே தத்து எடுத்துக்கொண்டதால்.சரி மணி வண்ணா. நேரமாகிவிட்டது, நீ வகுப்புக்கு செல்"
சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தது. ஒரு நாள் , ஞாயிறு அன்று மணிவண்ணன் வேறு ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அங்கே வேதபுரி ஆசிரியர் தன மனைவியுடன் வந்தார். மணி வண்ணனை கவனித்து விட்டு " அட, இன்று நீ இங்கு தான் வேலை செய்கிறாயா. உனக்கு இன்று வேலை அளித்தவர் எனது இனிய நண்பர் காசிநாதன். அவர் தனியார் துறை கம்பெனியில் வேலை பார்க்கிறார்." மணி வண்ணன் ஆசிரியரை கண்டதும் மிகவும் மகிழ்ந்தான். கடந்த இரண்டு மாதங்களாக அவர் அவனுக்கு பல உதவிகள் செய்து வந்தார். பின்பு வேதபுரி காசிநாதனுடன் அளவளவினர். மணி வண்ணனை பற்றிய விவரங்களை அவரிடம் சொன்னார். அப்போது "காசிநாதா , உனக்கு தெரிந்தவர்கள் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் எவரேனும் இருப்பின் மணி வண்ணனை தத்து எடுக்க சொல். மிகவும் நல்ல பிள்ளை. பாவம் அவன் சிறு வயதில் எப்படியெல்லாம் உழைத்து சுயநலம் இல்லாமல் அவன் தங்கி இருக்கும் அனாதை விடுதிக்கு கொடுத்து உதவுகிறான்."
காசிநாதனும் நிச்சயம் தன்னால் முடிந்ததை செய்வதாக உறுதி அளித்தார். மேலும் ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் காசிநாதன் தன மனைவியுடன் வேதபுரி வீட்டிற்கு சென்றார். " வேதபுரி, உனக்கும் மணி வண்ணனுக்கும் நல்ல ஒரு செய்தி . எனது உயர் அதிகாரி முத்து என்பவர் மணி வண்ணனை தான் தத்து எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் நேரில் ஒரு முறை அவன் விடுதிக்கு சென்று அவனை பார்த்து பேசியபின் இதை நிச்சயம் செய்வதாக கூறினார். வரும் ஞாயிறு அன்று மணி வண்ணனை வெளியே வேலைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருக்க சொல் என்று கூறினார். வேதபுரிக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வாறே செய்வதாக கூறினார்.
ஞாயிறும் வந்தது. முத்து அவர் மனைவியுடனும், காசிநாதனுடனும் அனாதை விடுதிக்கு சென்றார். விடுதியை நடத்தும் உறுப்பினர்களுடன் பேசி மணி வண்ணனை காண விரும்புவதாக கூறினார். மணி வண்ணனை சந்தித்து அவனுடன் முத்துவும் அவன் மனைவியும் தனிமையில் பேசினார்கள். பின்னர் முத்து விடுதியின் செயலாளரை சந்தித்து தான் மணி வண்ணனை தத்து எடுத்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். செயலாளர் தனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு தனிமையில் மற்ற சிலருடன் நேரிலும் சிலருடன் போனிலும் பேசினார். பதினைந்து நிமிடங்கள் கழித்து முத்திவிடம் வந்து சொன்னார் " மன்னிக்க வேண்டும். மணி வண்ணனுக்கு நீங்கள் ஆதரவு தர முன்வந்ததிற்கு மிக்க மகிழ்ச்சை. ஆனால் தற்போது இந்த விடுதி இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் நாங்கள் அவனை உடனடியாக உங்களுடன் அனுப்ப இயலாது. வாரத்தில் இரு நாட்கள் மணிவண்ணன் வெளியில் சென்று வேலைகள் செய்து கொஞ்சம் பணம் கொண்டு வருகிறான். இவனை போல் வேறு ஆறு சிறுவர்களும் வெளியில் சிறு சிறு வேலைகள் செய்து கொஞ்சம் பணம் கொண்டு வருகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் இவர்கள் ஏழ்வரும் இந்த விடுதிக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள். விடுதியின் பொருளாதாரம் கொஞ்சம் சீரானவுடன் நிச்சயம் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். நீங்கள் அப்போது வந்து மணி வண்ணனை கூட்டி செல்லலாம். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைவதில் எங்களுக்கும் மிகவும் சந்தோஷமே."
அப்போது, உடன் இருந்த காசிநாதன் செயலாளருடன் கொஞ்சம் தனிமையில் பேசினார்." மாதத்தில் மணி வண்ணன் எவ்வளவு பணம் உங்களுக்கு சம்பாதித்து கொடுக்கிறான்? கொஞ்சம் யோசித்து விட்டு செயலாளர் சொன்னார் " கிட்ட தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாய்". காசிநாதன் சொன்னார் " சார், நான் உங்களுக்கு மாதா மாதம் இரண்டாயிரம் கொடுக்கிறேன்.இப்போதே இந்த மாதத்திற்கான இரண்டாயிரத்தை கொடுக்கிறேன். நீங்கள் மணி வண்ணனை முத்துவின் பராமரிப்பில் இருக்க உதவுங்கள்." செயலாளர் மீண்டும் மற்றவர்களுடன் பேசி ஆலோசித்தார். பிறகு காசிநாதனிடம் சொன்னார் " சார், உங்களின் கனிவான உள்ளத்திற்கு மிக்க நன்றி. ஆனால் ஒவ்வொரு மாதமும் உங்களிடமிருந்து பணம் கிடைக்கும் என்று எப்படி நம்புவது? காசிநாதன் உடனே கூறினார் " இதோ இந்த தங்க செயினை வைத்து கொள்ளுங்கள். இது இப்போதைய விலையில் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பெறும். இதை செக்யூரிட்டி டெபாசிட்ஆக வைத்து கொள்ளுங்கள். நான் ஒரு வேலை இரண்டாயிரம் ரூபாயை தரவில்லை என்றால் இந்த செயினை நீங்கள் விற்று காசை எடுத்துக்கொள்ளலாம்."
அடுத்த அரை மணியில் மணி வண்ணன் முத்து தம்பதியுடன் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டான். காசிநாதன் வேதபுரிக்கு போன் செய்து நடந்த விவரங்களை சொன்னார். வேதபுரிக்கு மெய் சிலிர்த்தது. " காசிநாதா , என்ன ஒரு உதவும் பெருந்தன்மை! உன்னை என் நண்பனாக பெற்றதை என் பாக்கியமாக கருதுகிறேன்"
மணி வண்ணன் இப்போது முத்து தம்பதியினரின் மகன். இவர்களுக்கு சொந்த வீடு, கார், சௌகரியங்கள் எல்லாம் இருந்தது. முத்துவுக்கு தான் ஏதோ ஒரு சொர்க லோகத்திற்கு சென்றது போல் நினைவு. இந்த எதிர்பாராத மிக இன்பமான சூழ்நிலையை சரிசெய்து கொள்ள அவன் திணறினான். தம்பதியினர் இருவருமே மணிவண்ணனை மிகவும் நேசித்தார்கள். அவன் நலனில் மிகவும் அக்கறை காட்டினார்கள். மூன்றாம் வகுப்புக்கு சென்ற உடன் முத்து அவனை வேறு ஒரு பள்ளியில் சேர்த்தார். மிகவும் புகழ் வாய்ந்த நல்ல பள்ளி அது. அங்கே அவனுக்கு காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. முதல் நாள் முதல் வகுப்பில் அவன் ஏனைய முப்பத்திஒன்பது மாணவர்களுடன் அமர்ந்து இருக்கையில், வகுப்பின் உள்ளே நுழைந்தது, வேறு யாரும் இல்லை. அவன் மிகவும் மதிப்பும் மரியாதையும் செலுத்தும் வேதபுரி ஆசிரியர் தான். அவரை கண்டவுடன் பூரித்து போனான் மணி வண்ணன். வேதபுரி அனைவருக்கும் அவரை பற்றிய விவரத்தை கூறி விட்டு மணி வண்ணனை தனி ஒரு புன்னகையுடன் நோக்கினார். " நீ இந்த பள்ளியில் தான் சேரப்போகிறாய் என்பதை நான் மும்பே அறிவேன். உனக்கும் நல்ல நேரம் எனக்கும் கூட" என்றார்.
பிறகு பாடத்தின் இடையில் " என் அருமை மாணவர்களே, நீங்கள் அனைவரும் இந்த புகழ் வாய்ந்த பள்ளி கூடத்தில் படிப்பது உங்கள் பெற்றோர்களின் பேரன்பால்தான். அவர்கள் தான் உங்களுக்கு நடமாடும் தெய்வங்கள். என்ன நான் சொல்வது சரிதானே? வகுப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து " ஆமாம் சார்" என்றார்கள். வேதபுரி முன்னதாகவே அவரது வகுப்பின் மாணவர்களை பற்றி விசாரித்து, அனைவருக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அறிந்த பின்னரே, மேற்கூறிய வார்த்தைகளை மிகவும் நம்பிக்கையுடன் மாணவர்களிடம் உரைத்தார்.
ஆமாம் என்று மிகவும் கம்பீரமாக ஒலித்த குரல் யாராக இருக்கும், மணிவண்ணனைத்தவிர.
ஆனந்த ராம்