ஓட ஓட விரட்டினால்

நமது நடையப்பர் அமைதியான நேரத்தில் பெரிய தெருவில் கையில் ஒரு தடியுடன் மெதுவாக நடை பழகிக்கொண்டிருந்தார். மதியம் மூன்று மணி என்பதால் அதிகம் வண்டி போக்குவரத்துக்கு இல்லை. மக்கள் நடமாட்டமும் அதிகம் இல்லை. இருமருங்கும் உள்ள வீடுகளையும், கடைகளையும் பார்த்து ரசித்த வண்ணம் நடையப்பர் சென்று கொண்டிருந்தார்.

திடீரென பின்னல் எதோ சத்தம் கேட்டு நடையப்பர் திரும்பி பார்த்தார். ஒரு நாய் வேகமாக அவர் பின் ஓடி வந்தது. நம்மவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கையில் தடியுடன் ஓட ஆரம்பித்தார். நாய் வேகமாக பின்னால் ஓடி வந்தது. இன்று நாய் கடி நிச்சயம் என்று நினைத்து அவர் பயந்தபோது, அந்த நாய் அவரை தாண்டி முன்னால் ஓடியது. நடையப்பர் நிம்மதி பெரு மூச்சு விட்டார். நடையை தொடர்ந்தார். மீண்டும் ஏதோ ஒன்று பின்னல் ஓடி வருவதை உணர்ந்த அவர் பின்னல் திரும்பி பார்த்தார். ஒரு பெரிய குரங்கு பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அவர் நினைத்தார் " நாயிடமிருந்து தப்பினோம் ஆனால் இந்த குரங்கிடம் தப்ப முடியுமா". குரங்கு அவருக்கு வெகு அருகாமையில் வந்து விட்டது. நம்மவருக்கு திக்கு திக்கு என்று இதயம் வேகமாக அடித்து கொண்டது. அடுத்த நொடி குரங்கு அவரை தாண்டி முன்னே பாய்ந்து சென்றது. அது முன்னே சென்ற நாயை துரத்தி சென்றது. அப்பாடா, நல்ல வேளை என்று நினைத்து ஆறுதல் அடைந்தார் நடையப்பர். நடையை தொடருவோம் என்று மெல்ல முன்னே செல்ல ஆரம்பித்தார். இன்னொரு பெரிய சத்தம் கேட்டு கழுத்தை மெதுவாக திருப்பி பார்த்தால் , ஒரு பெரிய எருமை மாடு ஓடி வந்தது. இதென்னடா வம்பாக போய் விட்டது என்று நம்மவர் பயந்து போய் கொஞ்சம் ஓரம் கட்டினார். அடுத்த கணம் அந்த எருமை அவரை தாண்டி முன்னே துள்ளி ஓடியது. அது முன்னே செல்லும் குரங்கை துரத்தி செல்கிறது என்று அறிந்தார் நடையப்பர். இதென்னடா ஆச்சரியமாக உள்ளது. நாய், குரங்கு மற்றும் எருமை ஒன்றை ஒன்று துரத்தும் விந்தை என்று எண்ணினார்.

அப்போது தான் அவர் கவனித்தார், தன் வீடு உள்ள சந்தை தாண்டி வெகு தூரம் வந்து விட்டோம் என்று.சரி இனி திரும்பி நடக்கலாம் என்று நினைத்தபோது, பின்னல் சல சல என்று ஒரு சத்தம் கேட்டது. மீண்டும் கழுத்தை ஒடித்து திருப்பி பார்த்தார் நடையப்பர். ஒரு நபர் கையில் ஒரு சின்ன பையுடன் ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தார். எங்கே அந்த நபர் தம்மை தாக்குவாரோ என்று பயந்து அவர் முன்னே ஓடத்துவங்கினார்.உடனேயே கையில் பையுடன் ஓடி வந்த நபர் இவரை கடந்து முன்னே ஓடினான். அப்பாடி, ஒரு வழியாக தப்பித்தோம். முன்னாடி ஓடும் எருமையை தேடித்தான் இவர் கையில் பையுடன் ஓடுகிறாரோ என்று நினைத்தார்.அதே நேரத்தில் அவன் ஒரு திருடனாக இருக்க கூடும் என்றும் சந்தேகித்தார். அப்போது தான் கத்தி போய் வால் வந்த கதையை போல், பின்னல் இன்னொருவர் ஓடி வந்து கொண்டிருந்தார். வந்து கொண்டிருப்பவர் ஒரு போலீஸ்காரர் என்பதை அவர் அணிந்துள்ள உடையை கண்டு, கண்டுகொண்டார். " ஓஹோ , நாம் நினைத்தது சரிதான், முன்னால் பையுடன் ஓடும் திருடனை பிடிக்க இந்த போலீஸ் ஓடி வருகிறார்" என நினைத்தார் நம்மவர். சரி, நமக்கு எதற்கு, வீடு திரும்புவோம் என்று கொஞ்சம் ஓரம் கட்டி திரும்ப ஆரம்பித்தார். அப்போது பின்னே வந்த போலீஸ்காரர் இவர் அருகில் வந்து விட்டார். என்னே ஆச்சர்யம், அந்த போலீஸ்காரர் நடையப்பரை சமீபத்தில் பார்த்த உடன் கொஞ்சம் தடுமாறினார். நடையப்பர் அவரை பார்த்து உடனே அடையாளம் கண்டு கொண்டு விட்டார். உடனே அந்த போலீஸ்காரர் அவர் வந்த வழியே ஓட்டம் எடுக்க ஆரம்பித்தார். நடையப்பர் போலிஸ்காரரை துரத்த ஆரம்பித்தார். போலீஸ்காரர் மிக விரைவாக ஓடினார். நடையப்பரும் அவரால் முடிந்த வேகத்தில் போலீசை துரத்தினர். என்னடா, போலீஸ் திருடனை துரத்த போய், இப்போ போலீசை இன்னொருவர் துரத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஏன், இருக்காது? நிச்சயமாக இருக்கும்.

முன்னே ஓடும் போலீஸ்காரரின் பெயர் ராஜு. அவர் நடையப்பரிடமிருந்து ஆறு மாதங்களுக்கு முன்னாள் 25000 ரூபாய் கடனாக வாங்கி சென்றார், ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக. பாவம், சரியான சம்பளம், கிம்பளம் கிடைக்கவில்லை என்பதாலோ, ராஜுவால் அந்த பணத்தை நடையப்பருக்கு மீண்டும் தர முடியவில்லை. நடையப்பர் நிறைய தடவை போன் செய்தபொது, இன்னும் ஒரு வாரத்தில் தருகிறேன் என்று நான்கு மாதங்களாக சொல்லி கொண்டிருக்கிறார். இப்போது ராஜுவை நேரிலே பார்த்து விட்டார். விடுவாரா நம்ம நடையப்பர். போலீஸ் ஓடுகிறார், நடையப்பர் அவரை துரத்தி ஓடுகிறார்..அவர் ஓடுகிறார் ,இவரும் ஓடுகிறார்.

நாய் ஓடுகிறது, குரங்கு ஓடுகிறது, எருமை ஓடுகிறது, திருடன் ஓடுகிறான், போலீஸ் ஓடுகிறார், நடையப்பர் ஓடுகிறார், முடிவில் யார் யாரை பிடிக்க முடிந்தது. எனக்கு தெரியாதுங்க. உங்க யாருக்காவது தெரிந்தால் எனக்கு தகவல் சொல்லுங்க.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jul-21, 1:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 130

மேலே