மனசாவியை கண்டேன், மனஅமைதி கொண்டேன்

கண் மூடினேன் உறங்க, மனம் திறந்தது கண் விழித்து
நினைவின் கதவை மூட நினைத்தேன், சாவி கிடைக்கவில்லை
சாவியை தேட கண் விழித்தேன், இருட்டில் ஒன்றும் தென்படவில்லை
இருட்டை விலக்க விளக்கை ஏற்றினேன், இருட்டு தொலைந்து விட்டது
தொலைத்த சாவி எங்கே என்று தேடுவேன், முன்னறையிலா, பின்னறையிலா
வீட்டு சாவி என்றால் உள்ளது கைவசம், மனதின் சாவி எங்கே உள்ளது?
அப்போது ஞாபகம் வந்தது, மனதின் சாவி மனதில் தானே இருக்கும் என்று
விளக்கை அணைத்தேன், படுத்தேன், மீண்டும் கண் மூடினேன்
லேசாக மனது திறந்தது, உடனே சட்டென உள்ளே நுழைந்தேன்
உள்ளே துழாவினேன், கவலை, வெறுப்பு, பொறாமை போன்ற
தட்டு முட்டு சாமான்கள் கிடைத்தது, அவைகளை நாலு சாத்து சாத்தினேன்
தட்டு முட்டு சாமான்கள் அங்கங்கே ஓடி ஒளிந்து கொண்டன
பிறகு கவனமாக அமைதி என்கிற பெட்டியை கண்டு பிடிதேன்
மென்மையான சாந்தமான மனதுடன் மெல்ல அதை திறந்தேன்,
கிடைத்தது அமைதி என்கிற மன சாவி, அதை கொண்டு பூட்டினேன் மனதை
மீண்டும் கண் மூடினேன், அமைதியின் பிடியில் என்னை கொடுத்தேன்
உறக்கத்தின் அன்னை, என்னை மடியில் சாய்த்து உறங்க வைத்தாள்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jul-21, 8:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 52

மேலே