தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள் நூல் ஆசிரியர் கவிதாயினி பவித்ரா நந்தகுமார் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்!

நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பாவைமதி வெளியீடு, எண் 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81. பக்கங்கள் : 88, விலை : ரூ.100
******
கவிதாயினி பவித்ரா நந்தகுமார் அவர்கள் தினமலர் என் பார்வையில் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி வருபவர். கதை, கவிதை, கட்டுரை என சகலகலாவல்லியாக உள்ளார். இவரது கணவர் நந்தகுமார் அவர்களும் இவரது இலக்கியப் பயணத்திற்கு துணை நிற்கிறார். அவர்தான், அலைபேசியில் பேசிவிட்டு இந்த நூலை மதிப்புரைக்காக அனுப்பி வைத்தார். இப்படி ஒரு கணவர் இருப்பது பவித்ரா நந்தகுமாருக்குப் பெருமை.

சங்க காலத்தில் 32க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். இன்று பெண் கவிஞர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். எழுதினாலும் நூலாக வெளியிடுவது, கணவர் துணை நிற்பது அரிதிலும் அரிதாகவே நடக்கின்றன. திருக்குறளில் வரும் இன்பத்துப்பால் போல இந்த நூல் முழுவதும் இன்பக்கவிதை வடித்துள்ளார். இந்நூலை இணையர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டும். வாசித்தால் ஊடல் விலகி கூடல் பிறக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார்.

படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் இன்ப நினைவுகளை அசைபோட வைக்கும் விதமாக கூடல் கவிதைகளை, கரை கடந்து விடாமல் மிக மென்மையாகவும், மேன்மையாகவும் தேர்ந்த சொற்களின் மூலம் கவி விருந்து வைத்துள்ளார். நூல் வடிவமைத்த இனிய நண்பர் கன்னிக்கோவில் இராசாவிற்கும், சிறப்பாக பதிப்பித்துள்ள பாவைமதி தோழி வான்மதி அவர்களுக்கும் பாராட்டுகள். காதல் கவிதைகளுக்கு பொருத்தமான படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர், பாராட்டுகள்.

காதல் கவிதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர் தபூ சங்கர். இந்நூல் ஆசிரியர் பவித்ரா நந்தகுமார் அவர்களை "பெண் தபூ சங்கர் "என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு ரசனையோடு
உணர்ந்து ஆய்ந்து அறிந்து கவிதைகள் வடித்துள்ளார்.

உன் கண்கள்
எனை மேய
ஆயத்தமாகும்
தருணத்திலேயே
கன்னத்தில்
நலங்கிடுகிறது
வெட்கம்!

தலைவன் பார்க்கும் போதே தலைவியின் கன்னம் சிவக்கும் நாணத்தை சங்க காலத்து காட்சி விளக்கம் போல வடித்த விதம் அருமை.

என் நிறம்
என் மீது
ஒட்டிக் கொள்ள போகிறது
சமயத்தில்
அத்தனை
நெருக்கம் !

யாரின் நிறமும் யாருக்கு ஒட்டி விடாது என்பது உண்மை. கவிதைக்கு பொய்யும் அழகு தான். நிறம் ஒட்டிக் கொள்ள போகிறது என்பது நல்ல கற்பனை.நெருக்கம் பற்றிய ரசனை மிக்க கற்பனை நன்று.

வீணையை நான்
வாசிக்கையில் எல்லாம்
நீ என்னை மீட்டிய ஞாபகம்!

தலைவி வீணை வாசிக்கும்போது கூட தலைவன் தன்னை மீட்டியது நினைவிற்கு வரும் இயல்பை, உணர்வை உள்ளதை உள்ளபடியே கவியாக்கியது சிறப்பு.

நீ என்னிலிருந்து
விடுவித்துச் செல்லும்
போதெல்லாம்
இன்னும் இன்னும்
அழகாகிறேன் நான்!

தலைவன் தலைவி கூடல் காரணமாக, அந்த சிற்றின்பத்தின் விளைவாக தலைவியின் அழகு இன்னும் இன்னும் கூடி விடுகின்றது என்ற அறிவியல் உண்மை அழகுக் கவிதையாக வடித்தது சிறப்பு.

உன்னுடைய பிரபஞ்சம் என்பது
முழுக்க முழுக்க
என் மேனியாக மட்டுமே
இருக்கிறது!

தலைவன் தலைவியிடம் என் உலகமே நீ தான் என்று தஞ்சம் அடைந்து, மஞ்சம் கானும் இயல்பை கவிதையாக வடித்தது சிறப்பு.
முப்பதாவது / திருமண நாளை / கொண்டாடும்

வேளையிலும்
முதல் இரவு
குறித்து
பேசுகிறாய்
ஞாபகமிருக்கிறதா உனக்கு?

முதலிரவு அன்று பேசிய முக்கியமான உரையாடல்கள் முப்பது ஆண்டுகள் கழித்தும் நினைவில் இருப்பது மட்டுமல்ல, மூச்சு உள்ளவரை மறக்காமல் எல்லோருக்கும் நினைவு இருக்கும். உண்மையை கவிதையாக்கியது நன்று.

படித்த வரிகளை இரண்டாம் முறை படித்து கூர்ந்து நோக்கினால் பல மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள். கவிதை நூல்கள் நிறைய படித்து இருக்கிறேன். பெண் கவிஞர் எழுதிய காதல் கவிதை நூல்களில் ஆகச்சிறந்த காதல்கவிதை நூல் என்றே கூறலாம். வாங்கிப் படித்துப் பாருங்கள். உண்மை என்பதை உணர்வீர்கள். மதிப்புரையில் எல்லாக் கவிதைகளையும் எழுதி விட முடியாது என்பதால், பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்.

என் இதயச் சுவர்களில்
எல்லாம்
வெள்ளையடித்துக் கொண்டே இருக்கிறாய்
நான் தொடர்ந்து
கொள்ளையடிக்கப்பட்டுக்
கொண்டே இருக்கிறேன் !

வெள்ளை – கொள்ளை என்று சொல் விளையாட்டு விளையாடி தலைவன்-தலைவி கூடலை நுட்பமாக கவிதையாக வடித்துள்ளார். சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை என்பார்கள். சொற்கள் நடனமாடி நம்மை சொக்க வைக்கின்றன வைர வரிகள்.

முக்கனியின் ருசியெல்லாம் உன்
த்தத்திற்கு முன்
எம்மாத்திரம்?

முக்கனிகள் என்பது இனிமை என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கனிகளை விட இனிமை முத்தம். இதுவும் உணர்ந்தவர்கள் மட்டுமே உணர்ந்திட்ட உண்மை.

காதல் கவிதைகளில் முத்தம் இல்லாமல் இருக்குமா? இருக்கின்றது. இனிக்கின்றது. பிடித்த கவிதைகளை மடித்து வைத்து வந்தேன். வியப்பு என்னவெனில், எல்லாப் பக்கங்களையும் மடித்து வைத்து விட்டேன். மறுபரிசீலனை செய்து மனமின்றி சிலவற்றைத் தவிர்த்தேன்.

சும்மா கிடந்த சங்கை
எடுத்து ஊதி
விட்டாய், இனி அழ்கடலே ஆனாலும்
அமிர்தம் கடையத்தான் வேண்டும்.

இலைமறை, காய்மறையாக தலைவன் – தலைவி கூடல் இன்பத்தை கவிதை வரிகளின் மூலம் உணர்த்தி கவிவிருந்து வைத்துள்ளார். படிக்க படிக்க இனிமை தரும் கவிதைகள், பாராட்டுகள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

--

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (5-Aug-21, 6:19 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 158

சிறந்த கட்டுரைகள்

மேலே