காதலின் வலிமை தலைவனின் பெருமை
காதலின் வலிமை தலைவனின் பெருமை
*************
தலைவியின் மடிதோய புலராது பொருள்வழி
அலைவழி யதைத்தேட கிட்டாது புணரின்பம்
தலைவியா அலைமகளா நல்லதெ துவென்று
அலையாடும் நெஞ்சமே பகர்வது உன்னுரிமை
வாடாத நந்தவனப் பொய்கை அதனூடே
ஓடியாடி மகிழ்ந்திடும் அற்புத மீனினங்கள்
ஓடியமீன் தடயங்களெ துவெனத் தெரியாது
நாடும்நம் பார்வைக்கு தோன்றாது அழியுமே
ஆழிசூழ் வியலகத்தை அளக்கும் கருவியாக்கி
ஏழுமுறை யளந்தபின் னதற்குச் சமமான
வாழுமுறை மாடனைத்தும் ஏகமாய ளிப்பினும்
ஏழையிவன் பார்வைக் கனைத்தும் துச்சமே
குழையாடும் செவிகள் மார்பார்ந்த பாசிமணி
மழைமுகில் தோற்கும் அவளது கூந்தலிடம்
அழகிற்கு அழகிடும் செவ்வரி நயனங்கள்
இழந்தேன் அடியேனை எழிலரசி அவளிடமே
உருபொருள் தேடியது உருப்பட்டு நின்றிடுமோ
அரும்பொ ருளவளே படும்பொரு ளவசியமோ
பெருமாடே இவன் வேண்டானுன் மேன்மை
கருப்பொரு ளில்லாதி ருப்போரை நீயடைவாய்
**********
( யாப்பு அறியாத இயல்பு வரிகளில்)