விழிநீர் குறையும் நாளேது

விலைவாசிப் பேய்பிடித்து ஆடும்
வினையாலே வறுமைநோய் கூடும்
அலைமேலொரு படகாகிய
நிலையாமினி வருமேயதில்
தொலைந்தேவிட வழிகாட்டிடும் நாடும்.
*
கட்டுப்பாட் டுவிலையேது மில்லை
கட்டவிழ்ந்து ஆடுதன்றோ கொள்ளை
தட்டுப்பாட் டைக்காட்டி
தான்றோன்றித் தனமாக
சுட்டித்தனம் செய்யுமிந்த தொல்லை
**
கொள்ளையிடக் காத்திருக்கும் கூட்டம்
குடிமக்கள் வருவாயைக் கேட்கும்
எல்லையிலாத் துன்பத்தில்
ஏழைசனம் உழன்றிருக்கத்
தொல்லைகளை மென்மேலும் கூட்டும்
*
தொழிலாளர் சம்பளத்தில் பாதி
தொடராக உறிஞ்சிகின்ற நீதி
எழிலாகச் சமைத்திட்ட
எசமானர் வாழ்வதற்காய்
வழிசெய்ய வோஏழை சாதி?
**
வட்டிக்கடைப் பெட்டகங்கள் நிறையும்
வாங்கிவைத்த சொத்துக்கள் கரையும்
குட்டியிடும் வட்டிதனைக்
கொடுத்தெடுக்க முடியாமல்
சொட்டும்விழி நீரென்று குறையும்?
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Aug-21, 1:11 am)
பார்வை : 134

மேலே