பூவாய் பொழி
பூவெனப் பொழி!
=================
(முதலடி ஒன்றும் ஏனைய அடிகள் வேறுமாக அமைந்த வெண்பாக்கள்)
***
ஆழ்ந்த இரங்கலை அன்றாடம் நாமுரைக்கச்
சூழ்ந்த இருளே சுடர்தருவாய் – வாழ்திடும்
மாந்தரை வாழ்த்தி மகிழவே இத்தரை
நீந்தும் பிணியை நிறுத்து
**
ஆழ்ந்த இரங்கலை அன்றாடம் நாமுரைக்கச்
சூழ்ந்த இடரே சுமைகுறைப்பாய் – வாழ்தலைக்
கேள்விக் குறியாக்கி கீழடக்கும் தொற்றின்றி
நாள்தோறும் கால்கள் நகர்த்து
**
ஆழ்ந்த இரங்கலை அன்றாடம் நாமுரைக்கச்
சூழ்ந்த பிணியே சுகம்தருவாய் – வாழ்வோரை
வாழ்ந்தோராய் மாற்றும் வழிசெய்யா திங்கேநீ
வீழ்ந்தே மடிவாய் விரைந்து
**
ஆழ்ந்த இரங்கலை அன்றாடம் நாமுரைக்கச்
சூழ்ந்த நிலையே சுயநலமே – வாழ்ந்த
மனிதரை வாட்டி வதைப்பதை விட்டே
இனிமை தருவாய் இனி
**
ஆழ்ந்த இரங்கலை அன்றாடம் நாமுரைக்கச்
சூழ்ந்த விதியே சுதிபிசகே – வாழ்வதைச்
சாவென மாற்றும் சமகாலச் சிக்கலை
பூவென வாக்கிப் பொழி.
**
மெய்யன் நடராஜ்