சாய்ந்ததும் மண்ணில் சவமே
அண்ணாந்து பார்க்கும்
ஏழடுக்கு மாளிகை !
அழைத்ததும் ஓடி வந்து
ஆணைக்கு காத்திருக்கும்
அடியாட்கள் பணியாட்கள் !
மஞ்சத்தில் பஞ்சு மெத்தையில்
கொஞ்சி மகிழும் பொழுதுகள்
விஞ்சிடும் வீணாக வீராப்பு !
பஞ்சம் கண்டிரா நெஞ்சங்கள்
கொஞ்சமும் இருக்காது இரக்கம் !
தங்கத் தட்டில் உணவருந்தும்
தரணி வியக்கும் செல்வந்தர் !
சுட்டிக் காட்டும் கோமானுக்கு
துளியளவும் இல்லை துன்பம்
அனைத்தும் இருந்தும் பயனேது ?
பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லை
பயனாளிகள் இவரால் எவருமில்லை !
உதவிடும் எண்ணமில்லா உத்தமர்
ஊரார் வெறுத்திடும் உருவமவர்
உலகோர் நிந்திக்கும் ஜீவனவர் !
வெறுங்கை கொண்டு பிறப்பவர்
வெற்றுடல் மட்டும் இறந்தபின் !
கோபுரத்தில் வாழும் கோமகனும்
சாய்ந்ததும் மண்ணில் சவமே
சாம்பலே இறுதியில் புரிந்திடு !
இடையினில் எதற்கு ஆட்டம்
இல்லாரை சற்று நினைத்திடு
வாசகம் வாசிப்பது பயனில்லை
யாசகம் செய்வோர்க்கு உதவிடு
வையகம் போற்ற வாழ்ந்திடு !
( வாசகம் = திருவாசகம் )
பழனி குமார்
17.09.2021