கார்மேகத்தின் கொடை

கார்மேகம் மழையென்னும்
கர்ப்பந் தரித்து
கடிந்து பாய்ந்தது
கருயானைக் கூட்டம்
கம்பீரமாய் கடக்கும்
காட்சியாய் தோன்றியது
கொட்டும் மழைக்கு
கெஞ்சியது நெஞ்சங்கள்
கண்மாயின் கரங்கள்
கொட்டும் மழையை
கட்டியணைக்க ஆரவாரமாய்
கரையை எட்டியது
கரைகள் காணாத
காட்டாறுகள் ஏங்கின
கரைகள் புரண்டோட
கலப்பை ஓடிய
களிமண் வயலில்
கதிர்விட நாற்றுகள்
களிப்புடன் நோக்கின
குடியானவன் நம்பிக்கையுடன்
கூப்பிட்டான் மழையை
குதிர்கள் நெல்மணிகளால்
குறைவில்லாமல் நிறைய
கார்மேகமும் கரைந்தது
கர்ஜித்தது இடியுடன்
கீற்றாய் மின்னலும்
குளிர்ந்த காற்றும்
கொஞ்சிக் குலாவ
கொட்டியது கார்மேகம்
காய்ந்த நிலமும்
கணநேரத்தில் குளிர்ந்தது
கோலாகலத்துடன் சிறார்கள்
குதித்தாடினர் அடைமழையில்
கார்மேகங் கொடுக்கும்
கொடைக்கு ஈடுண்டோ
களிப்படைபவர் பலரன்றோ !!

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (5-Oct-21, 5:31 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
பார்வை : 183

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே