வலை விரிப்பு
வலை விரிப்பு
அடித்து பிடித்து வந்து தன் சீட்டில் உட்கார்ந்த மல்லிகாவை அசூயையுடன் பார்த்தாள் பிரமீளா. அவளது அதிகாரி. ஏன் இப்படி தினம் தினம் லேட்டா வர்றே? அவள் கேட்காவிட்டாலும் அந்த பார்வை அதை உணர்த்தியது. இருக்கையிலேயே மெல்ல உடலை நெளித்தாள். இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது? எல்லா காரணங்களையும் சொல்லி விட்டாள். ஏன் லேட்? பஸ் பிரேக் டவுன், வீட்டுல குழந்தைக்கு உடம்பு சரியில்லை, மாமியாருக்கு…இப்படி பல காரணங்கள். இவளுக்கே இதை தினம் தினம் சொல்லி சலித்து இவளும் உடலை நெளிப்பதோடு நிறுத்தி கொண்டாள். கேட்பவர்களும் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. என்றாலும் அது எப்பொழுது வேண்டுமானாலும் இவளது உத்தியோக உயர்வுக்கு ஆப்பு வைக்கலாம்.
மதியம் மல்லிகா தனது குமுறல்களை தோழி வாணியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள். என்ன பண்ணறது சொல்லு, இரண்டு பேரு வேலைக்கு போயும் வருமானம் பத்த மாட்டேங்குது, இரண்டு குழந்தைங்க வேறே, வாடகையும் அதிகம், அரை மணி நேர நடையா இருக்கறதுனால வாடகை ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை அப்படீன்னு பல்லை கடிச்சுகிட்டு இருக்கறோம். இதனால் எந்த பொருளும் வாங்க முடியறதில்லை. எல்லாமே நாமளே செஞ்சுக்க வேண்டியதிருக்கு. காலையில எந்திரிச்சு, துவைச்சு, சமைச்சு, பசங்களை பள்ளிகூட்த்துக்கு ரெடி பண்ணி ஆட்டோவுல ஏத்தி விட்டு. அதுக்கு மாசம் இரண்டாயிரம் பக்கம் ஆயிடுது, ஒரு டிவி, வாஷிங்க் மிஷின் வாங்கணும்னு நினைச்சா கூட முடியரதில்லை.
இவளின் புலம்பலகளை கேட்டு கேட்டு பழகி போன வாணி, உன்னோட மூணாவது சீட்டுல உட்கார்ந்திருக்கற ரமேஷ் கூட உன்னைய பத்தி அடிக்கடி சொல்வாரு. இரண்டு குழந்தைங்க இருக்குதுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா அவங்களை பத்தி, அவ்வளவு அழகா இருக்கறாங்க.
சட்டென்று வாணி இப்படி சொல்லவும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க நினைத்த மல்லிகா ஒரு நிமிசம் அப்படியே பேச்சை நிறுத்தி வாணியை உற்று பார்த்தாள்.
வாணி இவள் உற்று பார்ப்பதை கண்டு கொள்ளாதவள் போல், போன வாரம் கூட என்னோட பிரண்டு ஒருத்தருக்கு சேலை ஒண்ணு எடுக்க நீங்க ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டார். சரின்னு அவர்கூட ‘சியாம் சில்க்ஸ்’ போனேன். எந்த மாதிரி சேலை உங்க பிரண்டுக்கு தேவைப்படுமுன்னு கேட்டேன். அதுக்கு அவர் கொஞ்சம் யோசிச்சு மல்லிகா மாதிரி இருப்பாங்க, அவங்க கலருக்கு ஏத்தமாதிரி எடுத்து கொடுங்க அப்படீன்னாரு. ஒரு சேலை எடுத்து கொடுத்தேன். அதுக்கு பிரதியுபகாரமா நீங்க ஒரு சேலை எடுத்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தினாரு. நான் வேண்டாம் வேண்டாமுன்னு சொல்லி பார்த்தேன். அவர் கேட்கவேயில்லை. ஒரு சேலைய வாங்கி என் கையில திணிச்சுட்டுத்தான் விட்டார்.
அப்பக்கூட பெருமூச்சு விட்டு சொன்னார், ஏன் மல்லிகா என்னை கண்டா பேச மாட்டேங்கறாங்க? அவங்களுக்கு நான் நல்ல பிரண்டா இருக்க் மாட்டேனா? அவங்க கஷ்டப்படறாங்க அப்படீங்கறது எனக்கு தெரியுது, ஏதாவது உதவி பண்ணலாமுன்னு நினைச்சா…அவங்க தப்பா நினைச்சுங்குவாங்களோன்னு தயக்கமா இருக்கு..
தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாலும் வாணியின் பேச்சுக்கள் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது.
நீ உம் முன்னு ஒரு வார்த்தை சொல்லு ஒரு உதவிதானா, உனக்கும் வீட்டுல வாஷிங்க் மிஷின் வாங்கி போடலாம், டிவி. வாங்கி போடலாம், பணம் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும், இல்லை உனக்கு சின்னதா ஒரு டூ வீலர் வாங்குனாலும் நீ போக வர உபயோகமா இருக்கும், குழந்தைகளையும் ஸ்கூல்ல விட்டுட்டு வர சுலபமா இருக்கும். அதற்குள் மணி இரண்ட்டிக்க சட்டென எழுந்த மல்லிகா தன் இருப்பிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
மல்லிகா எந்த பதிலும் சொல்லாமல் போனாலும் கொஞ்சமும் மன சலனமில்லாமல் அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்த வாணி மெல்ல எழுந்து தன் சீட்டுக்கு சென்றாள்.
மாலை வீட்டுக்கு சென்ற மல்லிகா வீட்டில் விளையாண்டு கொண்டிருந்த தன் குழந்தைகளை பக்கத்தில் அழைத்து அணைத்து கொண்டாள். அப்பொழுது தான் களைத்து உள்ளே வந்த அவள் கணவன் ஆச்சர்யமாய் அவளை பார்க்க ஓடிபோய் அவனையும் அணைத்துக்கொண்டு அழூதாள். என்னவென்று புரியாமல் நின்ற அவள் கணவனும் குழந்தைகளும் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தனர்.
ஐந்து நிமிடம் அழுது முடித்தவள், சட்டென கண்ணை துடைத்துக்கொண்டு இருங்க காப்பி எடுத்து வர்றேன், நீங்க கை கால் கழுவிட்டு உட்காருங்க. சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
காப்பி கொடுக்கும்போதும், சரி இரவு சாப்பாடு பரிமாறும் போதும் சரி அவள் ஏன் அழுதாள் என்று சொல்லாவிட்டாலும் அவள் முகம் மட்டும் தெளிவாய் இருப்பதை உணர்ந்த அவள் கணவன் ஏதும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளுடன் முன் ஹாலுக்கு சென்று உட்கார்ந்தான்.
மறு நாள் ஆச்சர்யமாய் அலுவல்கத்திற்கு ஐந்து நிமிடம் முன்னால் வந்து உட்கார்ந்திருந்தாள் மல்லிகா. அது மட்டுமல்ல, மதியம் உணவை கூட தன் சீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாள். காண்பவரிடம் எல்லாம் தன் கஷ்டங்களை சொல்லி புலம்புவள் அதற்கு பிறகு ஒருவரிடமும் அதை பற்றி பேசுவதில்லை.
மொத்தத்தில் அவள் சராசரி பெண்ணாய் குறிப்பிட்ட அலுவலக நேரத்தில் வேலை மாலை அலுவலகம் முடிந்து வீடு என்று தன்னை இயந்திரமாய் மாற்றிக் கொண்டாள். என்ன செய்வது, வலையை விரிப்பவர்கள் அவளது “வீக்னஸ் பாயிண்ட்” பார்த்துத் தானே வலையை விரிக்கிறார்கள்.