அனுபவம் 2

அதிகாலை
( கொட்டும் பனியில் காலை ஏழு மணிக்கு வெளியில் போவதெல்லாம் கூட அதிகாலையில் சேர்த்தி எங்களுக்கு. சூரியன் கூட அந்நேரம் இங்கு எழுந்திருக்க மாட்டார்)

lab க்கு போக வேண்டியிருந்தது.
சாலைகளும் மரங்களும் கூட பனியில் குளித்துக் கொண்டிருந்தன. அந்தக் களிப்பில் தூக்க கலக்கம் கூட காணாமல் போயிருந்தது. பிளேயர் போடாமலே ‘பனி விழும் மலர் வனம்’ எனக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வீதியைக் கடப்பவர்கள் கூட எஸ்கிமோக்களானர்கள்.
காரினுள்ளேயிருந்த கதகதப்பில் இவற்றை வெளிக்கூரும் போது கடும் உழைப்பிலுருவான திரைப்படத்தை கஸூவலாக பொப்கோர்ன் சாப்பிட்டுக் கொண்டே பார்ப்பது போலிருந்தது!

திரைப்படத்தின் இடைவேளை இப்போது என நினைத்துக் கொண்டு வெளியுலக பராக்கை துண்டித்து லாபிற்கு வந்து சேர்ந்தேன்.

“அதிகாலையில் வந்து விட்டேன்” என்று பெருமிதத்துடன் வெளிவாயிலைத் திறந்தேன். உள்ளே வரிசையில் பதினேழு பேர் நின்று “ அப்பிடியா…!” எனும் தோரணையுடன் என்னைப் பார்த்தார்கள்!

அதனாலென்ன…பதினெட்டு எனக்கு ‘லக்கி நம்பர்’ என்று பெருமையோடு போய் நின்று கொண்டேன்.
கைபேசியை எடுத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதில் பதினெட்டு ஒன்றாகி விட வரிசையில் முதல் ஆளாக நான் நின்றிருந்தேன். 😊

வாயிலில் நின்ற பணிப் பெண்ணின் ‘பளீர்’ புன்னகையில் அச்சூழல் ரம்யமாகியது. விடயத்தைக் கூறியதும். உட்சென்று அமருங்கள் எனக் கூறினாள்.
முறுவலுடன் உள்வாயிலைத்திறந்தேன். உள்ளே பத்துப் பேர் இருக்கையில் கைபேசியில் கண்மயங்கி சயனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். “யார் வந்தா என்ன…போன எங்களுக்கென்ன…?” தோரணையில்.

ஒரு குண்டூசி விழுந்தாக் கூடக் கேட்கும் நிசப்தம்!
இருக்கையில் அமர்ந்ததும் ஒன்று தோன்றியது.

“ ‘இந்த உலகம் அமைதிப் பூங்காவாகும் காலம் வெகு தொலைவிலில்லை’என்று யாரோ பிழையாச் சொல்லியிருக்காங்க…”!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (8-Jan-22, 5:49 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 128

மேலே