என் உயிர்த்துடிப்பில் எங்கோ எங்கோ
உன் இதயம் அமைதியில்
மிதக்கட்டும்
உன் இமைகள் நிம்மதியில்
உறங்கட்டும்.
என் மௌனப் பார்வைகளால்
உன் சிரிப்பினை என்றும்
ஆராதிக்க விரும்புகின்றேன்.
ஒரு புள்ளியாய்...
ஓரத்திலிருந்தபடியே.
உன் துள்ளல்....
உன் சிணுங்கல்...
உன் கோபம்....
உன் உரிமை....
எல்லாம்
ஓடும் மேகமாய்...
கரையும் காலமாய்...
கரைந்து...மறைந்து...
ஆனால் என்னுள்ளே
என் உயிர்த் துடிப்பில்
எங்கோ...எங்கோ...
இன்னும் பசுமையாய்த்தானிருக்கிறது.
இப்போது நீ
சந்தோஷமாயிருக்கிறாயாமே
காதில் விழுந்தபோது
என்னுள்ளே சில்லென்றிருந்தது.
நீ
என்றும் பூத்துக்குலுங்கும்
வசந்தமாயிருக்க வேண்டும்.
மாவிடும் இளம் தளிரென
உன்னிதழ் சிரித்திருக்க வேண்டும்.
இதயவடு காலமருந்தால்
இல்லாமல் மறைய வேண்டும்.
அதுவரை
உதய நிலவாய் உலவி வந்தால்
உள்ளம் மகிழும் - என்
இதயம் குளிரும்.