கூற்றன் அவனே
நொறுங்கிய உண் துகள்களை
பல்லக்குத் தூக்கி ஊர்ந்திடும் எறும்புகள்
பதுக்கும் புற்றின் பாதுகாவலன் எவரோ?
நறுக்குத் துண்டாய் வான்பொதி நிலவை
வெண்பஞ்சிடை காட்சிப் பிழையாய் நகர்த்தி
தடுக்கி விழாது தாங்குவது எவரோ?
நேற்றைய முன்தினம் நிகழ்ந்த பொழிவில்
இன்று செழித்த மென்குடை காளான்களில்
உயிரணுவாகி நிமிர்ந்தது எவரோ?
காற்றுடன் அதிர்ந்து அரூபமான ஒலிக்கற்றை
சாற்றும் மொழியில் இன்னிசை ஆகிட
மாற்றுத் திறன் தந்தவர் எவரோ?
கூற்றவன் கயிற்றில் நியதியாய் நிலைத்து
குற்றம்குறை பொறுக்கும் அருட்கடலான
போற்றுதலுக்கு உரிய அவனே ஆவான்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
