தீட்டுப்படுமோ பணமுமே
பணமது தீட்டினால் நீக்கப் படுவதும் இல்லையெங்கும்
அணியாய் அதனையும் சேர்த்தே எவருமே வைத்திருப்பின்
பணியினை செய்ய அவரது பாதம் பணிந்தபடி
இணங்கி இருப்பர் இதுவே உலகின் வழக்கமாமே --- (க)
பொருளை நிறையவே கொண்டவர் வாழ்வின் மகிழ்வதுவும்
இருளில் ஒளிர்கிற பூச்சியின் தோற்றம் எனவிருக்கும்
அரியதாய் நல்லோர் இருப்பர் அருகில் இடித்துரைக்க
பெரியதாய் செல்வம் விலகின் உதிர்வர் மலரெனவே --- (உ)
எதனையும் வாங்கிட எண்ணுவார் செல்வம் மிகையாய்க்கொண்டோர்
அதனையும் ஏற்குமே ஆளும் அரசு இயந்திரமும்
பதமாய் அசையுமே சட்டமும் கொள்கையும் சொல்லின்படி
இதுதான் உலகமே கண்டெடுத் தப்புதுக் கொள்கைதானே --- (ங)
கசப்பும் இனிக்கும் புளிப்பும் துவர்க்குமே செல்வன்கூறின்
பசப்பும் நடிப்பும் மிடுக்கை கொடுக்கும் பலரின்முன்னே
நசுக்கும் நினைப்பே மிகுதியாய் கொள்வராம் செல்வத்தோர்
பசுவை அறுத்தும் பணத்தையும் ஈட்டிடின் பாவமில்லையே --- (ச)
கொழுத்த திரவியம் பெற்ற ஒருவரும் அச்செயலை
செழிப்பாய் துணிந்து முனைப்புடன் செய்தால் உலகமுமே
பழிக்கா நிலையிலே போற்றுமே உள்ளம் குளிர்ந்தபடி
அழகாய் அவரையும் தெய்வமாய் போற்றி தொழுதிடுமே --- ( ரு)
--- நன்னாடன்.