நச்சு மனப் புற்றுகள்

ஓடி வியர்த்து உழைத்த போதும்
ஒரு பிடி சோற்றுக்கு அலைந்த போதும்
தேடி வந்து தந்தவர்கள் எவருமில்லை
கூடி வந்த நேரத்தால்
குவிகின்ற செல்வத்தால்
தேடி வருகின்ற திடீர் மனிதர்கள்
இவர்கள் யார்

நாடி சென்றபோது
நலம் விழைய மறுத்தவர்கள்
நானும் கூட மனிதனென்று
நன்கு வளர்ந்த பின்
இவன் வளர்ச்சி இயல்பில்லை இழைக்கின்றத் தவறினால் வந்ததென்று
இயம்பி சிரிக்கின்ற இவர்கள் யார்

ஏற்பது இகழ்ச்சி என்றே வாழ்ந்தவன் இன்று.
ஏற்றம் பெற்றதை
ஏற்க மனமின்றி வந்த எரிச்சலால்
அதிர்ஷ்டத்தால் வந்த செல்வம்
அரை நொடியில் மாயமாகும்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
ஆற்றில் கரைத்த உப்பாகு மென்று
ஆசையை சாபமாக்கும்
இவர்கள் அன்னியர்கள் அல்ல
உறவென்னும் பெயரில்
உடனுறைந்த நோய்கள்
நட்பென்னும் போர்வையில்
நடமாடும் நச்சுமனப் புற்றுகள்!

எழுதியவர் : கொ.வை.அரங்கநாதன் (24-Apr-22, 11:55 am)
பார்வை : 92

மேலே