நானும் ஏமாந்தேன்

நானும் ஏமாந்தேன் - உந்தன்
மைவிழி பார்வை மெய்யென நம்பி
நானும் ஏமாந்தேன்.

சாத்திரம் சொல்லும் வாய்மொழி
என்றும் இனித்திடும் தேன்தானே - உந்தன்
ஆத்திர மொழியினை கேட்டபின்னாலே
நானும் ஏமாந்தேன்.

மானென ஓடும் உன் இளமையின்
துள்ளலை நானும் ரசித்தேனே - புள்ளிமான்
உனைக்கண்டு மருண்டோடிட மயங்கி
நானும் ஏமாந்தேன்.

நீர்சொட்டும் உந்தன் ஈரக்கூந்தல்
என்மீது படர்ந்திட தேகம் சிலிர்த்தேனே - சூல்கொண்டு
சூழும் கருத்தமேகமென குளிர்ந்து
நானும் ஏமாந்தேன்.

அடிமேல் அடிவைத்து நடக்கையில்
ஒடிந்திடும் உன்னிடை கண்டேனே - பளீரென்று
தோன்றி மறைந்திடும் மின்னலென்று
நானும் ஏமாந்தேன்.

குழந்தையின் குரலில் குழைகையில்
நாளும் என்னை நான் இழந்தேனே - மூங்கிலில்
நுழைந்த காற்று இசையென தழுவிட
நானும் ஏமாந்தேன்.

உனைமறந்து வழிபாட்டில் கரைந்து
நீ அசையாது நிற்கையில் - ஆயனச்சிற்பியின்
கைவண்ண சிலையென
நானும் ஏமாந்தேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (31-May-22, 6:36 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 169

மேலே