உங்களுக்காக ஒரு கடிதம் 24

ஹாய்...
இடைவெளி கொஞ்சம் அதிகமாகிவிட்டது. மன்னித்துவிடுங்கள். போன கடிதத்தில் விட்டுப் போனதை...இல்லை மறந்து போனதை சிறிது எழுதிவிட்டு...மற்றதை தொடரலாம். சரியா? நாங்கள் சம்பாதிக்கும் முன்பே எங்கள் தலையில் கடன் சுமையை ஏற்றிவிடுகிறீர்கள். ' Educational லோனைத்தான்' சொல்கிறேன். வாழ்க்கையின் முதல் படியில்..ஏன் வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே கடன் வாங்க பழக்கி விட்டுவிடுகிறீர்கள். பின்னாளில் கடன் இல்லாமல் எங்களால் வாழமுடியாமல் போய்விடுகிறது. உங்கள் நிலைமையும் எங்களுக்கு புரிகிறது. எங்கள் விருப்பத்திற்கு படிக்கக்கூட முடியாமல்....ஏன் எங்கள் தகுதிக்கேற்ப...எங்கள் விருப்பத்திற்கேற்ப மேற்படிப்பை தொடர முடியாமல்...காய்க்கும் முன்னே கருகிப்போகும் மொட்டாக சுருங்கிப்போகிறோம். கம்பன் சொன்னதுபோல் 'கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்', நாங்களும் கலங்கி நிற்கிறோம். ஆறுதல் சொல்ல யாரும் இல்லாமல் தவிக்கிறோம். படிக்கும்போது எந்த கவலைகளும் இருக்கக்கூடாது. அப்படி கவலையில்லாமல் படிக்கும்போதுதான் படிப்பில் கவனம் செலுத்தமுடியும். படிப்பும் மூளையில் ஏறும். புரியும்.புரிந்து படிக்க முடியும். படிக்கும்போது கடன் சுமை எங்களின் கண்களை மறைக்கிறது. எங்கள் கவனம் சிதறுகிறது. எப்படி எங்களால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியும்? இதையெல்லாம் எண்ணும்போது சிரிக்கவா தோன்றும். கோபம்தான் கொப்பளிக்கிறது. சில அடாவடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லா காரியங்களும் மற்றவர்கள் மேல் விடிந்தும் விடுகிறது. படிப்பிலேயே...அதை தேர்ந்தெடுப்பதிலேயே எங்களுக்கு சுதந்தரம் இல்லையென்றால் நாம் வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் வாங்கி என்ன பிரயோஜனம்?
படிக்கும்போது எங்களின் சந்தேகம் தீர்க்கும் ஆசிரியர்கள் குறைவாகி விட்டார்களே.என்ன செய்ய? எங்கள் ஆர்வத்தை தூண்டி...எங்களை அரவணைத்து...அன்பாய்... பாசமாய்...வழிநடத்த நல் ஆசிரியர்களின் எண்ணிக்கை சொற்பமாகி விட்டதே. அமைதியாய்...எல்லோரும் ஒழுங்காய் படியுங்கள்...என்று சொல்லிவிட்டு ஆசிரியர்கள் அவர்களின் சொந்த வேலையை கவனிக்கப் போய்விடுகிறார்கள். செல்போனை தொடக்கூடாது எங்களை கண்டித்துவிட்டு அவர்கள் செல்போனில் ஆழ்ந்து விடுகிறார்கள். அப்புறம் எங்களுக்கு பயம் எப்படி வரும்? மரியாதைதான் எப்படி வரும்? ம்ம்... சொல்லுங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நல்லாசிரியர்கள். அப்படித்தானே நல்மாணவர்களும் இருப்பார்கள். உங்கள் காலத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு மாணவனின் ஜாதகமும்...நிறை குறைகளும் தெரியும்.இப்போதோ குரு சிஷ்யன் உறவுமுறையே கேள்விக்குறியாய் வளைந்து நிற்கிறது. இது நான் சொல்லி உங்களுக்குத் தெரியப்போவதில்லை. இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். பள்ளியில் சொல்லிக் கொடுக்காததையா டியூஷனில் சொல்லிக் கொடுக்கப்போகிறார்கள்? பள்ளியிலும் சம்பளம்...டியூஷனிலும் சம்பாத்தியம்...எங்களின் நிலை? கேள்விக்குறியோடுதான் எங்கள் வாழ்க்கைப் பயணம் தொடருகிறது. எங்களின் சந்தேகங்கள் சந்தேகங்களாகவே தொடர்ந்து...விடைக்காய் அலைந்து அலைந்து ஓய்ந்து...அனுபவத்தால் சிலது தெரிந்தும் பலது புரியாமலும் வாழ்ந்து...வாழ்வே முடிந்து போய்விடுகிறது. எங்களை மட்டும் குறை சொல்லும்போதும் எங்களின் இயலாமை கண்டு எங்களின் கோபம் உச்சிக்குப் போய்விடுகிறது.
நாங்கள் படிக்கும் சிலபஸ்...புரிந்து கொள்ளவே ஒரு யுகம் வேண்டும். சரி...எங்களின் வாழ்க்கைக்கு எத்தனை தூரம் அது உதவப் போகிறது? மில்லியன் டாலர் கேள்வி? பதில். யார் சொல்லப் போகிறார்கள்? பெற்றோரா? கல்வி நடை முறையா? சமுதாயமா? இல்லை அரசாங்கமா? எங்கள் எதிர்காலத்தை அடகுவைத்து நடக்கின்ற இந்த சூதாட்டத்தில் வெற்றி யாருக்கு கிடைக்கிறதோ? எங்களுக்குத் தெரியாது? எங்களுக்கு தோல்வி மட்டும் நிச்சயம். தோல்வி அடைந்த கூட்டம்தான் இங்கு அதிகம்.புரிந்து கொள்ளுங்கள்.
கடன் வாங்கி ஏதோ படித்து விடுகிறோம். எங்கள் உள் மனசில் ஏற்பட்ட அடி..ஏமாற்றம்...அது மட்டும் இல்லாமல்
படித்தவுடன் தகுதியான வேலைக்காக நாயாய்...பேயாய்...அலைந்தாலும் வேலை கிடைப்பது குதிரை கொம்பாய் இருக்கிறது. படித்தது ஒன்று...வேலை செய்வதோ மற்றொன்று. படிப்புக்கும்.வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. பெற்றோரின் ஆசைக்காக...அவர்களின் கட்டாயத்திற்காக...அவர்களின் கவுரவத்திற்காக ...விருப்பமில்லாமல் படித்துவிட்டு..விருப்பமில்லாத வேலையில்... மன நிறைவோடு செய்யவும் முடியாமல்...முன்னேறவும் முடியாமல் எதையும் சாதிக்கவும் முடியாமல்..பத்தோடு பதினொன்றாய்....கும்பலில் கோவிந்தா போட்டுகொண்டு..பிறந்தோம்.. வளர்ந்தோம்...இறந்தோம்...என்று வாழ்க்கையை குறைகளோடேயே வாழ்ந்து..முடித்துக்கொள்கின்ற பரிதாப நிலைதான் எங்களின் இன்றைய நிலை. வாங்கிய கடனை யார் அடைப்பது? எங்களுக்கான மரியாதை கிடைக்காத போது..மற்றவர்களுக்கோ..சமுதாயத்திற்கோ நாங்கள் எப்படி மரியாதை செய்வது? அது கோபமாகத்தானே பார்க்கப்படும்.'இனி ஒரு விதி செய்வோம்.தனி மனிதனுக்கு இங்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' முண்டாசு கவியின் ஓங்கிய குரல்...அவனின் சிவந்த கண்கள்...துடிக்கும் மீசை...அந்த கோபம் எங்கள் ரத்தத்தையும் சூடேற்றி கொதிக்க வைக்கிறது.
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Jun-22, 11:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 62

மேலே