அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும் – நாலடியார் 235

நேரிசை வெண்பா

செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண்(டு) ஓட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும் 235

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

பிறர் செய்யாத செயல்களை யாம் செய்து முடிப்பேம் என்று வீறு கூறுதலும், தன்னாற் செய்தற்கு உரியதை உடனே செய்து முடிக்காமற் காலந் தாழ்த்துக் கொண்டு நாளை ஓட்டுதலும், உண்மையில் இன்பம் உறுதற்குரிய இயல்புகளைப் பொருள் செய்யாதிருத்தலும் உடையார்க்கு,

அம் மனப்பாங்கே அவர் துன்புறுதற்குரிய நிலைமைகளை வருவிக்கும்.

கருத்து:

வீம்பு பேசுதல், சோம்பல் கொள்ளுதல், பொருள் செய்யாதிருத்தல் என்பன துன்பந்தருதலின், அப்பண்புகளைத் தமக்கியல்பாக உடைய கூடா நட்பினரோடு கூடாதிருத்தல் வேண்டும்.

விளக்கம்:

செய்யாத, பிறராற் செய்ய முடியாதன:

செயல் தாழ்ந்து நாள் ஓடுதலின், ஓட்டலுமெனப் பட்டது.

பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளை 1 மறுத்தற்கு ‘மெய்யாக' என்றார். அந்நிலையே என்றார், துன்பம் உறுவித்தற்குப் பிற வேண்டா என்றற்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-22, 4:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே