பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார் கருமங்கள் வேறு படும் – நாலடியார் 236

இன்னிசை வெண்பா

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும் 236

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

ஒரு குளத்து நீரில் தோன்றி ஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் இயல்புடைய குவளை மலர்களை ஆம்பல் மலர்கள் ஒவ்வாது;

அதுபோலப் பெருந்தன்மையுடையாரது நட்பைப் பெறினும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் வேறாகவே நிகழும்.

கருத்து:

கூடா நட்பினர் எவ்வளவு பழகினாலுந் தஞ்சிறுமைகளை விடாராகலின், அத்தகையவரோடு நேயங் கொள்ளலாகாது.

விளக்கம்:

குவளை – நறுமணங் கமழுஞ் செங்கழுநீர் மலர்;
வேறுபடும் என்றது தாழ்வாகவே நிகழும் என்னும் பொருட்டு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-22, 4:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே