குழந்தைத்தாயின் பொம்மைக்குழந்தை

நீ என்மேல் காட்டும் பாசத்தை, நான் உன்மேல் காட்ட
அடுத்த ஜென்மத்தில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும்,
நீ எனக்குப் பொம்மை(பிள்ளை)யாகப் பிறக்க வேண்டும்,
என்று குழந்தையைப் பார்த்து மகிழ்கிறது
குழந்தைத் தாயின் பொம்மைக் குழந்தை .

குழந்தையின் தாய் குழந்தை மேல் காட்டும் அன்பைவிட,
குழந்தை தாய் பொம்மைக்கு குழந்தையிடம் காட்டும்
அதிகப்படியான அன்பைப்பெற்றும், "அம்மா" என்றுகூட
அழைக்கமுடியாமல் போனதற்காகக்
கடவுளை சபிக்கிறது பொம்மைக் குழந்தை.

தன்னைப் பெற இரு குழந்தைகள் சண்டையிடும்போது,
உலகிலேயே இரு தாய் பெற்ற ஒரே குழந்தை
என்ற ஆணவத்தில் சிரிக்கிறது பொம்மைக் குழந்தை.

பெற்ற குழந்தைக்காக தாய் உதிர்க்கும் கண்ணீரைவிட,
பெறாத பொம்மைக்காக குழந்தை உதிர்க்கும்
கண்ணீரில் அதிக வழியும் சோகமும் இருக்கிறது.

பல தாய் குழந்தை உறவைப் பிரித்த விதியும் கூட
குழந்தைத்தாய் - பொம்மைக்குழந்தை உறவைப்
பிரிப்பதில் ஏனோ இதுவரை ஜெயித்ததில்லை.

தனக்குச் சொந்தமான குழந்தைத் தாயின் கையையும்,
பையையும் ஆக்ரமித்துக்கொண்ட புத்தகத்தை
மனதிலேயே சாம்பிக்கிறது பொம்மைக் குழந்தை.

தன தாயாகிய குழந்தையிடம் தன்னைச் சேர்த்த
வியாபாரிக்கு நல்ல வாழ்க்கை அமையக்
கடவுளைப் பிரார்த்திக்கிறது பொம்மைக்குழந்தை.

தன் தாயாகிய குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்துப்
பள்ளிக்கு அனுப்பிய குழந்தையினுடைய தாயின் பாவத்தை
மன்னிக்குமாறு கடவுளைப் பிரார்த்திக்கிறது பொம்மைக்குழந்தை.

பொம்மைக்குழந்தை இல்லாத குழந்தைத் தாய்க்கு,
தன் தாயின் வீடு முதியோர் இல்லமாகத் தெரிந்தது,
குழந்தைதத்தாய் இல்லாத பொம்மைக்குழந்தைக்கு
வியாபாரியின் மூட்டை குழந்தைகள் காப்பகமாகத் தெரிந்தது.

குழந்தை தன் தாயை அணைத்துக்கொண்டு தூங்குவதில்
பெற்ற மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை தன் குழந்தைத்தாயை
அணைத்துக்கொண்டு தூங்குவதில் பெற்றது பொம்மைக்குழந்தை.

கடைகளில் புத்தம் புதிதாக இருப்பதைவிட குழந்தையின்
கைகளில் உடைந்துபோகவே ஆசைப்படுகிறது பொம்மைக்குழந்தை.

எழுதியவர் : மனுநீதி (1-Jul-22, 1:35 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 2994

மேலே