அறையே

அளவில்லா ஆனந்தத்தை
பாடல் வழியும்
அடக்க முடியா சோகத்தை
அழுகை வழியும்
கேட்டறிந்தவன் நீ !

காதலியிடம் கூட சொல்லாத காதல்
பூட்டிக் கிடக்கும் வன்மம் எனக்
காட்டிட முடியா எண்ணங்களை
உன்னிடம் மட்டும் கொட்டினேன் !

கிடைத்த சில நொடிகளில்
நான் சொன்னது,
என்னைப் பற்றி
பிறர் சொன்னது என
ரகசியம்
அத்தனையும் காக்கும்
உலகின் ஒரே
உத்தமன் நீ தானடா !

குளியலறையே !

என் ஆசைகள் பல,
கதை வசனங்களுடன்
குறும்படங்களாய் ஓட,
என் மனத்திரை வழி
படம் பார்த்த
ஒற்றை நேயர், நீ மட்டுமே !
நிறைவேறிய ஆசைகள்,
புனலோடு சேர்ந்து
கனவாகவே ஓடிய ஆசைகள்,
நீயும் நானும் மட்டும் அறிவோம் !

வீட்டின் அறையில்
ஒரு முகம் மட்டும் காட்டிய
கண்ணாடியே,
குளியலறையில் மட்டும்
ஏன் என் அத்தனை
முகத்தையும்
காட்டுகிறாய் !
அவன் உன்னையும்
கெடுத்து விட்டானா !

உணர்ச்சி மிகுதியில்
உள்ளே வந்தவர்க்கும்
புத்துணர்ச்சி தந்து
அனுப்புகிறாய் !

மெய் அழுக்கைக் போக்க வந்து
மெய்யான அழுக்கையும் விட்டுச் சென்றோம்,
இத்தனை இழுக்கையும்
ஏந்தியதால் தான்
பின் வழுக்குகிறாயோ !

மனதின் அழுக்கை மெல்லக்
கரைக்கவில்லை என்றால்
வாழ்வில்
வழுக்குவது நிச்சயம் !
கற்றுக் கொடுத்தாயடா
உற்ற நண்பனாக !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (3-Jul-22, 11:09 am)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 15

மேலே