அபரிஜிதை -1 இனியவள் சகாப்தம்

அபரிஜிதை -1 இனியவள் சகாப்தம்
===========

அவதாரிகையின்றிதான் லிகிதம் ஒப்பிக்கிறேன் ம்.
இன்றைய என் செயல்களுக்கு ஒப்புமை இல்லாமல் இடர்கிறேன்.. இதெல்லாம் தவிர்த்து
ஏதாவது பேசலாமா என்றால், தொண்டை அதுவருளுகிறது. பரஸ்பரம் அறியாமலும், ஏதும் பேசாமலும்,
அத்தனை அத்தனை ப்ரியங்களை அலையெனத் தெறிக்கும் ஆனந்தசாகர விழிகளால்
பார்வை சொல்லிப் போகிறவளுக்கு, முதல்முறை கடிதமெழுதும்போது உண்டாகிறத் துடிப்பு அலாதிதான்.

என்னசெய்வது இங்குள்ளவனுக்கு உன்னை அத்தனை
பித்துப்பிடித்துப் போயிருக்கிறதே ..
இதை வாசிக்கும் உனக்கு
இது எந்த மாதிரியானப்
பைத்தியக் காரத்தனம்
என்பது ஆதித் தோன்றலாய் இருக்கலாம்.

சற்றுப் பொறு,
எழுதிக் கொண்டிருக்கும் போதே வெட்கப்பட்டுக் கொள்கிறேன்..
இதுதான் உன்மேல் இருக்கும்
என் தற்போதைய மென்னுருக்கம் என்பதை
சுயம் ஒப்புக் கொள்கிறேன்.. இதுதான் இவள்தான் என்று, மனசுக்குள் ஒரு பெயரை அச்சிட்டுவைத்து அடைகாக்கிறபோது
ப்ரயாசைப்பொங்கி புறமொழுகுகிறது,
எங்கே அது என்னைக் கைவிட்டுப் போய்விடுமோ என்றெண்ணும் போது
ஒருவித பயம் வந்து
உள்ளூரத் துளிர்விடுகிறது.

தாமரைத் தழையுடை நீரில், தளிர்நிலாத் தளும்பும்
குளிர் இரவிற்குள்
என் வயதைக் குறுக்கி இத்தனைநாளும்
எப்படிச் சிறைவைத்திருந்தாய் ம்.
என் மழைக்காலமே,
உன் வானம் தெளிகையில்,
பசுமைத் திரைவிலகி
நிரதமாய், யங்ஞ பாவமாய், அனுபூதியாய்,
ஒரு மந்தமாருதம் போல,
என்றோ,
இதய வாதாயனங்களைத் திறந்து, எவ்வித அனுமதியுமின்றி,
என் ஆண்மை வேரில் ஸ்நித்தமூகி
பெருவிருட்சம்போல் அடியூன்றி நின்றிருந்தாய் ம்.

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் (1-Aug-22, 7:48 pm)
பார்வை : 33

மேலே