சொல்ல மறந்த கவிதை

சொல்ல மறந்த க(வி)தை 🖤


தங்க மீசை கருமையேறிய
விடலைப்பருவம்,
மழலை குரல் மாண்டு,
கம்பீர குரல் அவதாரம்,
கிராமத்து தார் சாலையாய்
கண்ணங்களில் பருக்கள்.
அரும்பாத தாடிக்கு
அப்பாவின் சவரக்கத்தியில்
முகச்சவரம்...


நான் படிப்பை மறந்து
அவளைப் படித்த நாட்கள்,
விழாக்கால விடுமுறையெல்லாம்
நாட்காட்டியில் தொலைந்து போக
கனவு கண்ட நாட்கள்..

பள்ளி மட்டுமே போதிமரமாய்
உறக்கம் தொலைத்த நாட்கள்..
அந்தி வானத்தை அதிகாலையில்
பூசிவரும் மஞ்சள் அழகி,
இரட்டை சடையில் தினமும்
முளைக்கும் ஒற்றை செவ்வந்தி..
மிதிவண்டிக்கு துணையாய்
பள்ளி சீருடையில்
பவனி வரும் இரக்கக்காரி..

ஒப்பனை ஏதுமில்லை,
ஆபரணங்கள் அணிவதில்லை,
அகிலம் தேடியும்
உன்னை விட அழகி இங்கில்லை..
ஊருக்கு அடங்கா காளை,
உன் குரல் கேட்டதும்
பசுவை தேடும் காலங்கன்று நான்..

காலை மணியடித்ததும்
ஏங்க ஆரம்பிக்கும் கண்கள்,
மதியம் வரை பசியிலிருக்கும்..
என்னை அவள் கடக்கும் போதெல்லாம்,
என் பெயரே நண்பர்களின்
தேசியகீதம்...

அவள் வகுப்பை
கடக்கும் போதெல்லாம்
என் கண்கள் வாங்கிய
இரவல் அவள் இருக்கை.
இறுதித்தேர்வு அருகில் வர
அடிமன காதலெல்லாம்
அள்ளிக்கொடுக்க ஆசை..
காதல் விண்ணப்பம் அனுப்ப
நினைக்கும் நேரமெல்லாம்
காதலிக்க தெரியாத
என் காதலுக்கு
கால்கள் நடுங்கும்..

கலை நிறைந்த முகம்,
காதல் நிறைந்த நினைவுகள்,
பார்த்து பலக்காலம் ஏக்கம்,
எல்லாம் ஆழ் மனதில் உறங்க
என் மகளின் பெயரில் மட்டும் அவள்.....❤
#கவிதை

எழுதியவர் : சிபூ (8-Aug-22, 12:17 pm)
சேர்த்தது : சிபூ
பார்வை : 112

மேலே