நிழல் கணிதம்
நிலத்தில் விழும்
என் நிழலைப்போல்
அல்லவே அல்ல...
என் உள்ளே விழும்
நிழல்களின் நிஜம்.
பொய்யும் உண்மையுமென
சகதியாய் படிந்திருக்கும்
அந்த நிழல்களில்தான்
எது இறுதியில்
நிஜமென அறிவதற்கில்லை.
எனினும்...
கடவுளின் நிழலுமுண்டு.
அரக்கனின் நிழலுமுண்டு.
இருவரின் நிழல்களும்
புன்னகையின் நிழலாக
ஒளியின் நிழல் பாய்ந்திருக்கிறது
தம் இதழ்கள் மலர...
இந்த இரவினை
கொஞ்சம் கொஞ்சமாக
போக்கிக்கொண்டிருக்கும்
என்னையும் ஒரு நிழலாக
அகம்
வாரி இழுக்கிறது உள்ளே.
அகம்
மனத்திரிபு கொண்டு
காடு மறந்த களிறாய்
தன்னிலிருந்து எங்கோ
தனித்திருக்கிறது.
நிலத்திலோ அகத்திலோ
எங்கிருக்கும் நிழலின்
நிஜம் நான் எனக்கு?