Future Express

சென்னை மத்திய ரயில் நிலையம். எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. செல்லும் பயணிகளும்.. அவர்களை வழி அனுப்ப வந்தவர்களின் கூக்குரல்கள்...வந்த பயணிகளை வரவேற்று அழைத்து செல்ல வந்தவர்களின் கூப்பாடுகள்...ஒரே இரைச்சல். அதுமட்டுமல்லாமல் போர்ட்டர்களின் கெஞ்சல்கள்...சண்டைகள்...போண்டா டீ...காப்பி... காப்பி...இட்லி..சப்பாத்தி...பண்டம் விற்பவர்கள் தொண்டை கிழியும் கதறல்கள்...பழம், பிஸ்கட்..புத்தகம் நாளிதழ்கள் விற்கும் வண்டிகள் மற்றும் சாமான்களை ஏற்றி செல்லும் கரடுமுரடான வண்டிகளின் கடகட சத்தங்கள்....' இயற்கை அன்னை நமக்கு இயற்கையாய் அழித்த பாதுகாப்பு ஹமாம்... புத்துணர்ச்சி ஊட்டும் ஹமாம்' என்று தொடர்ச்சியாய் பேசிக்கொண்டே இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள்... ' சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்'....'விஜயவாடா...நாக்பூர் மார்க்கமாக புது டெல்லி வரை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரண்டாவது பிளாட்பாரத்திலிருந்து 7.10 மணிக்கு புறப்படும்' என்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் 'உங்கள் பயணம் இனிதாக அமைய தென்னக ரயில்வே உங்களை வாழ்த்துகிறது' ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் ஒலிபெருக்கிகளின் அலறல்கள்...வாழ்த்துக்கள்.
அட...அதோ அந்த டிக்கட் கவுண்டரில் என்ன ஒரே கூட்டம்? பொங்கி வழிகிறதே...பார்த்தால் எல்லாம் மெத்த படித்த மேதாவிகள் போல தெரிகிறதே...அடேடே அங்க பாரடா விஞ்ஞானிகள்...போலீஸ் மேலதிகாரிகள்... சட்ட வல்லுநர்கள்...சினிமா நடிகர்கள்.. Future ஸ்டேஷனுக்கு...Future எஸ்பிரஸில் ஒரு டிக்கட் கட்டாயம் வேணும்...என் ஸ்டேட்டஸ் என்ன? என் மதிப்பு என்ன? என் பேக்ரௌண்ட் என்ன? வாக்குவாதம்... இது என்னடா புது கதை. "Future ஸ்டேஷன்"..."Fuiure எக்ஸ்பிரஸ்"... சுவாரசியம் பற்றிக்கொள்ள ....கொஞ்சம் நெருங்கி போய் பார்க்கலாமா? அப்படி ஒரு ஸ்டேஷனோ இல்லை எக்ஸ்பிரெஸ்ஸோ இருக்கிறதா என்ன? வாங்க போய் பார்த்துடலாம்.
" நான் ஒரு டாக்டர். முதன் முதலில் மருத்துவ கல்லூரியில் காலெடுத்து வைத்தபோது என் கற்பனைகள் சிறகடித்து பறந்தது. தொண்டாற்ற வேண்டும். சேர முடியாதவர்களுக்கு கூட மருத்துவ சேவையை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற வெறியோடும், மிகவும் ஆர்வத்துடனும்...ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்த பிறவி போலவும்...அதீத உற்சாகத்தோடும் படித்தேன். இந்த எண்ணங்கள் முதல் கேஸ் தொடங்கி வளர்ந்து கொண்டே வந்தது. புது புது செயல் முறைகள்...புது புது கண்டுபிடுப்புகள்...ஒரு எல்லையை எட்டிவிட்டேன். ஒரு கேஸ்...நூறு கேஸ் ...ஆயிரம் கேஸ் ஆனது. தொழில் ரீதியாய் 'Job Satisfaction ' வேலை திருப்தி கிடைத்ததா? கிடைக்கவில்லையா? அதிலும்கூட குழப்பம்தான்...பணம்... பதவி....புகழ்...எல்லாவற்றையும் ருசித்தேன்..அனுபவித்தேன். அப்புறம்...அதுக்கும் மேலே...சூனியமாக உணர்ந்தேன். ' Future '
பெரிய கேள்விக்குறியாய் என் முன்னே நின்று கூத்தாடுகிறதே...என்ன செய்ய? என்னுடைய ' Future ' . ஒன்றும் புரியவில்லை .எப்படி இருக்கும்? எதுவும் தெரியவில்லை". இது அந்த மருத்துவரின் மருகல்.
" நான் ஒரு விஞ்ஞானி. ஆராய்ச்சிகள்...ஆராய்ச்சிகள்...முழு நேரமும் ஆராய்ச்சிதான். வாழ்நாள்
முழுதும் ஆராய்ச்சிக்கூடம்தான். அணு..அணுவைப் பிரித்து..பிரித்ததையும் பிரித்து...ஓ...இதற்கொரு முடிவில்லையா? இளைஞனாய் இருந்த போது...அணுவைத் துளைத்து ஏழ்கடலையையும் அதனுள்ளே அடக்கிட வேண்டும் என்கின்ற வெறி...
என் கண் முன்னாலேயே என் ஆராய்ச்சிகளில் நான் கனவிலும் நினைத்தறியாத முன்னேற்றங்கள் நடந்தேறும்போது...பல சமயம் என் ஆராய்ச்சுகள் தவறென்று நிரூபணமாகும்போது ....என் நிலை என்ன? ஒன்றும் புரியவில்லை. அணுவின் ஆக்க சக்தி பரவாயில்லை. ஒத்துக்கொள்ளலாம். அழிக்கும் சக்தி...அதற்காய் நடக்கும் மேல் மட்ட சதுரங்க ஆட்டம்..பணமிழப்பு.... உயிரிழப்பு.... சில உயிர்களின் மதிப்பு கூடி சிம்மாசனத்தில் ..பல உயிர்கள் சீரழிந்து சுடுகாட்டில்.. நான் ஆராய்ச்சியைத் தொடங்கியபோது என் சிந்தனை..என் அறிவு...என் குறிக்கோள்...எல்லாம் தெளிவாய் இருந்தது. ஒரு பிடிப்பாய் இருந்தது.
இப்போதோ ஒரே குழப்பம்...என் கண்டுபிடிப்புகள் சரிதானா? எனக்கு வெற்றிதானா? அது கிடக்கட்டும் ஒரு பக்கம். என்னுடைய ' Future ' ???. இது விஞ்ஞானியின் அங்கலாய்ப்பு.
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Sep-22, 7:38 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 112

மேலே