அம்மாவின் ஆன்மா
பால்வெளி மண்டலத்தில்
படர்ந்திருக்கும் கோள்கள் பல
அத்தனைக்கும் ஒளி கொடுத்து
ஆட்டிவைக்கும் பகலவனே
நீ கொதிக்கும் சித்திரையில்
நிலவு கூட பாலைவனம்
வற்றாத ஆற்றின் நாவும்
வறண்டு போகும் கோடையிலே
பெயரெடுத்த மதுரையிலே
பெருமழைக்கு தூதூவிடும்
வைகையாற்றின் கரையோரம்
வாடிநின்ற மலர் போல
பத்து திங்கள் பெற்றெடுத்து
பால் நிலவில் சுட்டெடுத்து
பாட்டி கொண்டுவந்த வடை
பக்குவமாய் சாப்பிடென
பாசத்தோடு வளர்த்தவுனை
நீண்ட கால நித்திரையில்
ஓய்வெடுக்கும் என்னருகே
நீ குடித்த பால் முழுதும்
நீர் வீழ்ச்சி போல் வடிய
நின்றிருக்கும் நீ அழைத்தும்-என்
விழி திறக்கவில்லை கண்ணே